வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது என தபால் மாஅதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
மாதாந்த சம்பளம் வேண்டுமென்றால், உடனடியாக சேவைக்கு வருமாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் இது குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
எனினும், மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் குவிந்துள்ள தபால் பைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தபால் மாஅதிபர் ருவான் சத்குமார மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து எங்களுக்குப் பணம் கிடைக்க வேண்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும்போது சம்பளம் வழங்க பணம் கிடைக்காது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சேவைக்கு திரும்பியவர்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இன்று சேவைக்கு வருமாறு அறிவித்திருந்தோம்" எனத் தெரிவித்தார்.