நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின் கீழ், நியாயமான மற்றும் சரியான காரணங்களுக்காக ஊடகவியலாளர்களை விசாரணை செய்ய வேண்டிய
சந்தர்ப்பங்களில், சட்டத்தை அமுலாக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான உதவியை வழங்குவதற்கு சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாக தமது சங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் குமணன் கணபதிபிள்ளை விசாரணை செய்யப்பட்டதைக் கண்டித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ள குறித்த சங்கம், அதில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மஞ்சுள பஸ்நாயக்க மற்றும் செயலாளர் துஷாரா செவ்வந்தி விதாரண ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஊடகவியலாளர்களை விசாரிப்பதற்கும் அவர்களைப் பற்றி விசாரணை செய்வதற்கும் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் அருவருக்கத்தக்க வகையில் கண்டிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ஊடகவியலாளர் குமணன் கணபதிபிள்ளையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு தமது சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிடுவதுடன், அவருக்கு எதிராக நாட்டின் பொதுச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளரும் மனித உரிமைப் பாதுகாவலருமான குமணன், பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸாரால் அழைக்கப்பட்டமை சர்வதேச ரீதியில் கண்டிக்கப்பட்ட போதிலும், அவர் முல்லைத்தீவு, அளம்பிலில் உள்ள பயங்கரவாத எதிர்ப்புப் புலனாய்வுப் பிரிவின் உப பிரிவில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.