கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அமெரிக்காவில் நடந்து வரும் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் நேரடியாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கொவிட்- 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நேரடியாக வந்து வாக்குகளை செலுத்த விரும்பினால் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவர்கள் தெரிவிக்க வேண்டும் .

அவர்களுக்கு முகக்கவசம் அணிவது மற்றும் வாக்கை செலுத்துவதற்கு முன்பும், பின்பும் சோப் அல்லது சேனிடைசர் கொண்டு கைகளை தூய்மைப்படுத்திக் கொள்வது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிறரிடமிருந்து குறைந்தது 6 அடி தூரம் அவர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, நேரடியாகச் சென்று வாக்களிக்காமல் இருப்பதற்கான மாற்று வழிகளை ஆராயுமாறும் வாக்காளர்களிடம் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் கேட்டுக்கொண்டது.

அதிக கூட்ட நெரிசல் இருக்க வாய்ப்பு உள்ள நேரத்தை தவிர்க்குமாறும்,வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் செலவு செய்வதை தவிர்ப்பதற்காக ஆவணங்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ளுமாறும் அந்த அமைப்பு வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றின் தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இவற்றுடன், வெவ்வேறு மாநிலங்களில் சில குறிப்பிட்ட சட்டங்கள் தொடர்பான வாக்கெடுப்புகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பொழுதுபோக்கு மற்றும் மருத்துவப் பயன்பாட்டுக்காக கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமானதாக ஆக்குவது குறித்து பல அமெரிக்க மாகாணங்களில் உள்ள வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.

கொக்கைன் போன்ற போதைப்பொருளை குறைந்த அளவில் வைத்துக் கொள்வதை குற்றமற்ற தாக்குவது குறித்து ஓரிகன் வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.

கர்ப்பிணியின் உயிரை காப்பாற்றுவது தவிர்த்த காரணங்களுக்காக 22 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பை தடை செய்வது குறித்து கொலோராடோவில் நடக்கும் தேர்தலில் முடிவு செய்யப்படும்.

சிறையில் இருப்பவர்கள் பணத்தை கொடுத்து பிணை பெறுவதற்கு பதிலாக, சந்தேக நபர்கள் சிறையில் இருந்து பிணையில் வந்தால் உண்டாகும் ஆபத்துகளை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் பிணை வழங்குவது குறித்த வாக்கெடுப்பும் கலிஃபோர்னியா வாக்காளர்கள் முன்பு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது போல வெவ்வேறு மாநிலங்களில் உள்ளூர் பிரச்சனைகள் தொடர்பாக வாக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன.

வரலாறு திரும்புமா?

1992இல் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் ஜார்ஜ் ஹெச். டபிள்யூ புஷ் ஜனநாயக கட்சியின் பில் கிளிண்டனிடம் தோல்வியடைந்தார்.

ஜார்ஜ் ஹெச். டபிள்யூ புஷ் பின்னாளில் அதிபர் பதவிக்கு வந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தந்தை.

ஒருவேளை டிரம்ப் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தால் பதவியில் இருந்த அதிபர் ஒருவர் மீண்டும் போட்டியிட்டபோது தோல்வி அடைவது 1992க்கு பிறகு இதுவே முதல்முறை.

2016இல் ஹிலாரியை விட 30 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்ற டிரம்ப்

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டனை விட சுமார் 30 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்ற டிரம்ப் அதிபரானது எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது தெரிய வரும்?

வாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்கள் ஆகும். ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் காலை யார் வெற்றியாளர் என்பதை கணித்து விட முடியும்.

2016ஆம் ஆண்டு, வாக்குப்பதிவு நடந்த மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நியூயார்க்கில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்பு தனது வெற்றி உரையை ஆற்றினார் அதிபர் டிரம்ப்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலால் தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள தாமதம் ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் சேனிடைசர் - தேர்தலில் புதிய எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் பலரும் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் நெருக்கடி வேறு வகையிலும் தேர்தலை பாதித்துள்ளது.

ஆல்கஹாலை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட சேனிடைசர்கள் வாக்குச்சீட்டுகளை சேதப்படுத்துவதற்கு வாய்ப்புண்டு என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

சேனிடைசர்கள் ஒட்டியுள்ள வாக்குச் சீட்டுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டிக் கொண்டு அவற்றை சேதப்படுத்த வாய்ப்புள்ளது என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் பாதுகாப்புக்காக அங்கு, கைகளை தூய்மைப்படுத்தும் சேனிடைசர் இருப்பது கட்டாயம். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முன்பு வாக்காளர்கள் மற்றும் வாக்கு சாவடி ஊழியர்களின் கைகள் ஈரமாக இல்லாமல் காய்ந்து இருக்க வேண்டும் என்று இந்த மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த உள்ளூராட்சி தேர்தல்கள் சிலவற்றிலும் சேனிடைசர்கள் தெளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளின் மை அழிந்ததால், அவற்றை மாற்ற வேண்டிய சூழல் உண்டானது குறிப்பிடத்தக்கது.

பிரசுரிக்கப்பட்ட நேரம் 19:2419:24

வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் என்ன செய்வார்கள்?

வேட்பாளர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இந்த வாக்குப்பதிவு நாளானது ஒரு காத்திருப்பு நாள் போலதான் அமையும்.

என்ன செய்து கொண்டிருப்பார் டிரம்ப்?

அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருப்பார். அல்லது தொலைக்காட்சியில் வாக்குப்பதிவு குறித்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருப்பார்.

கடந்த மூன்று தினங்களாக 14 தேர்தல் பேரணிகளில் கலந்து கொண்ட டிரம்புக்கு இது ஓய்வளிக்கும் ஒரு தினமாக இருந்தாலும், செவ்வாய் இரவு மீண்டும் நிகழ்ச்சிகள் தொடங்கும்.

வெள்ளை மாளிகையில் அவர் தேர்தல் நிகழ்ச்சியை நடத்துவார். அங்கே டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், அவரின் குடும்பத்தார் மற்றும் பிரசாரக் குழுவினர் இருப்பர்.

என்ன செய்து கொண்டிருப்பார் ஜோ பைடன்?

ஜோ பைடன் பெரும்பாலான தேர்தல் நாளில் ஒரு முக்கிய தொங்கு மாகாணமான பென்னில்சில்வேனியாவில் வாக்குகளைச் சேகரித்து கொண்டிருப்பார். மேலும் தனது சொந்த ஊரான பிலடெல்ஃபியாவின் ஸ்க்ராண்டனில் வாக்காளர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருப்பார்.

அதன்பிறகு தற்போது அவர் வசிக்கும் டெலவேர் மாகாணத்திற்கு வந்து தேர்தல் முடிவிற்காக காத்திருப்பார். செவ்வாயன்று, பைடன் டெலவேரில் உரையாற்றுவார்.

அவருடன் மனைவி ஜில் பைடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரின் கணவர் உடனிருப்பர். வாக்குகள் சமநிலை எவ்வாறு செல்கிறதோ அதை பொறுத்துதான் பைடனின் பேச்சு அமையும்.

'தேர்தல் முடிவுகளை ஏற்காமல் போனால்...'

முன்னாள் தலைமை வழக்கறிஞர்கள் எச்சரிக்கை

அமெரிக்க அரசின் இரண்டு முன்னாள் தலைமை வழக்கறிஞர்கள் இருவர் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல் போவதை எதிர்த்தும் அதன் விளைவுகளை எச்சரித்தும் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளனர்.

எரிக் ஹோல்டர் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா அதிபராக இருந்த போதும், மைக்கேல் முகாசி குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிபராக இருந்தபோதும் அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினர்.

தாங்கள் இருவரும் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாட்டுடன் இருப்பதாகவும் அந்தக் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்த கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட வழியே தொடர வேண்டும் என்பதற்காக தாங்கள் இணைந்து இந்த கட்டுரையை எழுதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் முதல் சட்டத் திருத்தம் மக்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையை உத்தரவாதப்படுத்துகின்றது. ஆனால் தங்களுக்கு தேவையான அரசியல் முடிவு கிடைக்கவில்லை என்றால் அதற்கு எதிராக செயல்பட உரிமை வழங்கவில்லை என்று அவர்கள் அந்தக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும் ஆதரிக்கும் விதமாகவும் நடந்து கொள்ளக்கூடாது என்பதை சொல்லத் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது ஜனநாயக ரீதியில் நடைபெறும் ஒரு பிரம்மாண்டமான நடைமுறை.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 9 நேர மண்டலங்கள் இருக்க, நாடு முழுவதும் வெவ்வேறு நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கும்.

எனவே நியூ ஹேம்ப்ஷையர் போன்ற சில மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது.

முதலில் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது, கிழக்கு மாகாணமான வெர்மாண்டில். அங்கு கடும் குளிர் நிலவிவருகிறது.

ஆனால் அதற்கு மாறாக ஹவாய் மாகாணத்தில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது.

இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில், இந்தியானா, கெண்டகி, மைன், நியூ ஜெர்சி, நியூ யார்க் மற்றும் வர்ஜீனியாவில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

பைடன் பெற்ற முதல் வெற்றி

நியூ ஹேம்ப்ஷையர் மாகாணத்தில் உள்ள சின்னஞ்சிறு நகரமான டிக்ஸ்வைல் நாட்ச் நகரம் அமெரிக்காவிலேயே தேர்தல் முடிவுகளை வெளியிடும் முதல் பகுதிகளில் ஒன்றாக கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

அங்கு நடந்த வாக்குப்பதிவின் முடிவுகள் உள்ளூர் நேரப்படி செவ்வாய் நள்ளிரவு வெளியானது.

டிக்ஸ்வைல் நாட்ச் நகரில் பதிவான ஐந்து வாக்குகளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கே சென்றுள்ளன. அதிபர் டிரம்ப் ஒரு வாக்கைக் கூடப் பெறவில்லை.

வெர்மாண்ட் மாகாணத்தில் முதல் வாக்குப்பதிவு

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள வெர்மாண்ட் மாகாணத்தில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதிபர் தேர்தலுடன் 13 அமெரிக்க மாகாணங்களின் ஆளுநர்களுக்கான தேர்தலும் நடக்கிறது.

அந்த மாகாணங்களில் வெர்மாண்ட்டும் ஒன்று. அமெரிக்காவின் நேர மண்டலங்களில் ஒன்றான 'ஈஸ்டர்ன் டைம்' நேரப்படி காலை 5 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த மாகாணத்தின் ஆளுநராக இருப்பவர் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஃபில் ஸ்காட்.

ஆனால், இவர் டிரம்பின் விமர்சகர். இவர் ஆளுநர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார்.

அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிரம்புக்கு தாம் வாக்களிக்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப் போவது யார்? தபால் வாக்குகள் சர்ச்சையாகுமா? ஒரு விரிவான அலசல்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

ஆறரை பில்லியன் டாலர்கள் - 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு ஆன செலவு இது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் நாற்பத்து எட்டாயிரத்து நாற்பத்து நான்கு கோடியே, 86 லட்சத்து 59 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும்.

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு ஆகும் செலவில் மாற்றம் இருக்கலாம். எனினும் கோடிக்கணக்கில் இதில் பணம் செலவிடப்படும்.

சரி. இவ்வளவு பணமும் எங்கு எதற்காக செலவிடப்படுகிறது? இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை பார்ப்போம்.

போர், உலகத் தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சர்வதேச நெருக்கடிகளுக்கு இந்த உலகம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதில் ஒரு பெரிய தாக்கம் செலுத்தும் பதவி அமெரிக்க அதிபர் பதவி.

அதனால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கத் தேர்தல் வரும்போது அதில் உலக மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி