இனவாத கருத்துக்களை வெளியிட்டதோடு, வைத்திய அதிகாரிகள் குழுவின் தலைவர் உள்ளிட்ட  அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த, தொற்று நோய்களை கட்டுப்படுத்துவற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமைத் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இராணுவத்தின் காலாட்படை படைப்பிரிவின் பிரிகேடியர் கே.கே.எஸ் பரகும் வெலிஓய - சம்பத்நுவர மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்று, தலைமை வைத்திய அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக,  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  சுகாதார அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிகேடியர் கே.கே.எஸ் பரகும் சம்பத்நுவர மாவட்ட வைத்தியச்சாலைக்கு சென்று நிறுவனத்தின் தலைவரையும் ஏனைய அதிகாரிகள் குழுவையும் பார்த்து, ”பறத் தமிழனே, பிரபாகரன், பயங்கரவாதி, நான் உன்னை கொல்லுவேன், இது எனது பகுதி” என அச்சுறுத்தல் விடுத்த விடயத்தை கவலையுடன் அறிவிப்பதாக, ஒக்டோபர் 28ஆம் திகதி சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு அனுப்பிவைத்துள்ள  கடிதத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  பொதுச் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமரின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  கடிதத்தின் பிரதிகளை அனுப்பி வைத்துள்ளது.

போரின்போது பாதுகாப்பு படையினருக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வழங்கிய ஒத்துழைப்பும் அந்த கடிதத்தில் நினைவு கூறப்பட்டுள்ளது.

"தாய் நாட்டை காப்பாற்றுவதற்கான பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு வைத்திய உதவியை உறுதிப்படுத்தும் வகையில்,  எங்கள் வைத்தியர்கள் அனைவரும் இராணுவத்தை மரியாதையுடன் நடத்தினர் என்பதை நாங்கள் நினைவுபடுத்துகின்றோம்.”

எனினும், பிரிகேடியர் கே.கே.எஸ் பரகுமின் நடத்தை முப்படையிலும் எதிர்பார்க்கப்படும் ஒழுக்க விழுமியங்களுக்கு முரணானது என்பதோடு, ஏனைய குடிமக்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தத் தவறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வைத்தியசாலையில் ஏற்பட்ட இந்த நிலைமை சரிசெய்யப்படாத நிலையில்,  வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நோயாளிகளின் நலனுக்காக இந்த வைத்தியசாலையில் பணியாற்ற தேவையான பாதுகாப்பான நிலைமைகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போரின் போது GMOA ஆதரவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) போரின் போது ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு தார்மீக மற்றும் வைத்திய உதவிகளை வழங்கியது, எனினும் வைத்திய ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துள்ள நிலையில் இதுத் தொடர்பில் எவரும் அவதானம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி நாட்களில் வன்னி பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தான் உள்ளிட்ட நோயாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் அரச  வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தில் தலையிடவில்லை எனவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்த வலயத்தில் பணியாற்றிய சிரேஷ்ட அரச வைத்தியர்  ஒருவர் தெரிவித்திருந்தார்.

குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்ட போதிலும், அந்த பகுதியில் பணியாற்றிய அவர் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான வைத்தியர்களையேனும் பாதுகாக்கும் பொறுப்பை வைத்திய அதிகாரிகள் சங்கம் புறக்கணித்திருந்ததாக, முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் சுகாதார பணிப்பாளர் துரைராஜா வரதராஜா லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் இதோ 

https://www.youtube.com/watch?v=ilSL49F4PJs&feature=emb_title

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி