பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட நிஷாந்த ஜயவீர சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னதாக தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, இவரது பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இதன்படி, வெற்றிடமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நிஷாந்த ஜயவீரவின் பெயரை வர்த்தமானியில் வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.
நிதியமைச்சின் செயலாளர் பதவியை ஏற்பதற்காக ஹர்ஷன சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்தார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையராகப் பணியாற்றியவர் நிஷாந்த ஜெயவீர. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அக்டோபர் 2024 இல் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட நிஷாந்த ஜெயவீர, டிசம்பர் 2024 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார். பின்னர் அவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
களனி பல்கலைக்கழக பட்டதாரியான நிஷாந்த ஜயவீர, அமைச்சர் விஜித ஹேரத்தின் சமகாலத்தவர் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நம்பகமானவர் என்றும் அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, தற்போது வெற்றிடமாகவுள்ள நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் பதவிக்கு நிஷாந்த ஜயவீர நியமிக்கப்படுவார் என்றும் அதே வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.