இலங்கை தகவல் அறியும் உரிமை (RTI) ஆணைக்குழுவின் தலைவர் பதவி வெற்றிடமாகி
மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் அதற்கான தலைவர் இதுவரை ஜனாதிபதியால் நியமிக்கப்படவில்லை.
அந்த ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் உபாலி அபேரத்ன, கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி அப்பதவியிலிருந்து விலகினார்.
அதற்கு முன்னர் அதில் அங்கம் வகித்த மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ரோஹினி வல்கம இராஜினாமா செய்ததுடன் ஊடக அமைப்புக்களினால் பரிந்துரைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசர் டி.என்.சமரகோனின் பெயர் அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தின் பின்னர் ஜனாதிபதியினால் மே மாதம் உறுதியாக்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதி அவரை அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கவில்லை.
உபாலி அபேரத்னவின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான வேட்புமனுக்களை அரசியலமைப்பு சபை கோரியுள்ளது, அதற்கான கடைசி தேதி ஏப்ரல் 1 ஆகும்.
அரசியலமைப்பு சபையின் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, பொருத்தமான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளாரா என்று விசாரித்த போது,
அவர் அந்தக் கேள்வியை முழுமையாக செவிசாய்க்காமல், ஊடக செயலாளரிடம் கேட்குமாறு சொன்னார்.
எவ்வாறாயினும், இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு சட்டத்தரணி நிமல் போபகே நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நிமல் போபகே மீது ஜனாதிபதியின் நட்புறவு கொண்ட பிரபல சமூகவலைத்தள ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.