நேற்று நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் களில் வாக்கு எண்ணிக்கை பெரும்பாலும் முடிவுற்று,
உத்தியோகபூர்வ அறிவிப்புக்குக் காத்திருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கில் - தமிழர் தாயகத்தில் - ஆளும் தேசிய மக்கள் சக்தி (திசை காட்டி சின்னக் கட்சி) எதிர்பார்த்த வெற்றிகள் எவற்றையும் பெறவில்லை.
வடக்கு, கிழக்கில் தமிழர்களின் தனிப் பெரும் கட்சியாகத் தமிழரசு மீண்டும் தலை நிமிர்ந்தது. அதற்கு அடுத்து பல பிரதேச சபைகளில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (சைக்கிள் சின்னக் கட்சி) உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 இடங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 12 இடங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 இடங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 4 இடங்களையும், ஈ.பி.டி.பி. 4 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி ஓர் இடத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி ஓர் இடத்தையும் பெற்றுள்ளன.
வல்வெட்டித்துறை நகர சபை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை ஆகிய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகர சபைகளிலும் முன்னிலையை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை பெற்றுக்கொண்டது. எனினும், சாவகச்சேரி நகர சபையில் அத்தத் தரப்புக்கு 6 இடங்களும், தமிழரசுக்கு ஆறு இடங்களும் கிடைத்துள்ளன.
கோப்பாயில் தமிழரசுக்கு 11 இடங்களும், தேசிய மக்கள் சக்திக்கு ஒன்பது இடங்களும், தமிழ்க் காங்கிரஸ் மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவை தலா ஐந்து இடங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி இரண்டு இடங்களையும், ஒரு சுயேச்சைக் குழு இரண்டு இடங்களையும், மற்றொன்று ஓர் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
வல்வெட்டிதுறை நகர சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஏழு இடங்களையும், தமிழரசு ஐந்து இடங்களையும், ஈ.பி.டி.பி. ஓரிடத்தையும், தேசிய மக்கள் சக்தி மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அங்கு காங்கிரஸின் தலைமை வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் நிறுத்தப்பட்ட போதிலும் அவர் வட்டாரத்தில் போட்டியிடவில்லை. பட்டியலிலேயே அவர் பெயர் இருந்தது. ஆயினும் வல்வெட்டிதுறை நகர சபையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தரப்புக்கு ஏழு வட்டார வெற்றிகள் மட்டுமே கிடைத்துள்ளன. பட்டியல் வெற்றி கிடைக்கவில்லை. ஆகவே, சிவாஜிலிங்கம் முதன்மை வேட்பாளராக இருந்தாலும் அவர் நகர முதல்வராவதானால் வட்டாரத்தில் அவரது தரப்பில் வெற்றிருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைகளைத் தமிழரசுக் கட்சியின் சிறீதரன் தலைமையிலான பிரசாரக் குழு துடைத்து வழித்து வென்றிருக்கின்றது. தனித்து பிரதேச சபைகளை நிர்வகிக்கும் ஆற்றலை தமிழரசு அங்கு பெற்றுக்கொண்டுள்ளது.
வவுனியாவிலும், மன்னாரிலும் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்கின்றது.
திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் தமிழ்ப் பிரதேச சபைகளை தமிழரசுக் கட்சி வலிமையாகக் கைப்பற்றியுள்ளது. திருகோணமலை மாநகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை போன்றவற்றில் ஏனைய தமிழ்க் கட்சிகளின் ஆதரவோடு தமிழரசு நிர்வாகத்தைப் பொறுப்பேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் தமிழர் தரப்பில் தொடர்புடைய ஒன்பது உள்ளூராட்சி சபைகளில் பட்டிப்பளை பிரதேச சபை தவிர்ந்த ஏனையவற்றில் தமிழரசு பெரும் வெற்றிவாகை சூடியுள்ளது. பட்டிப்பளையில் தமிழரசுக்கு ஐந்து இடங்களும் பிள்ளையானின் கட்சிக்கு மூன்று இடங்களும் சுயேச்சைக் குழுவுக்கு இரண்டு இடங்களும் கிடைத்துள்ளன. சுயேச்சைக் குழு பிள்ளையானின் கட்சியோடு சேர்ந்து இயங்கக்கூடிய நிலைமை இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்திலும் போட்டியிட்ட பல இடங்களில் தமிழரசுக் கட்சி கணிசமான வெற்றிகளை ஈட்டியிருக்கின்றது.