கடந்த காலங்களில் பல்வேறு விசாரணை நோக்கங்களுக்காக இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட
ஒரு தொகை பொருட்கள், தொடர்புடைய விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (2) இராணுவ தலைமையகத்தில் வைத்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
போர் முடிவடைந்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருந்தும் அவ்வமைப்பின் வங்கிகளிடம் இருந்தும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட தங்கம், வெள்ளி, வைரங்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையே, இவ்வாறு விசாரணைகளின் பின்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நகைகள் அடங்கிய 120 பொதிகள், இன்றைய தினம் (02) பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், இந்தப் பொருட்கள் அடங்கிய பொதிகள், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையால் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பரிசோதிக்கப்பட்ட பின்னர், இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தீப்த ஆரியசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் நவீன் சூரியாரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த தங்கப் பொருட்களின் மதிப்பு மற்றும் நிறை, ஆபரண அதிகார சபையால் பரிசோதிக்கப்பட்ட பிறகு, ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தங்கங்களின் அடையாளங்களை உறுதிசெய்த பிறகு, அவற்றை அவற்றின் உரிமையாளர்களிடம் திரும்பக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.