முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை

60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பான சமர்ப்பணங்களை விரிவாகப் பரிசீலித்த பின்னர், நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மனு பரிசீலனை தொடங்கியபோது, ​​மனுதாரர் மஹிந்த ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி, தனது கட்சிக்காரர்வரப்பிரசாதங்களை பெறும் நோக்கத்துடன் அல்ல, மாறாக அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் நீதிமன்றத்திற்கு வந்ததாகக் கூறினார்.

30 வருடங்களாக நீடித்த கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தனது கட்சிக்காரர் வழிவகுத்ததாகவும், அதனால் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் பலமான இலக்காக மாறிவிட்டதாகவும், எனவே இந்த நேரத்திலும் அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வலுவாக செயல்பட்டு வருவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளின் அழுத்தம் காரணமாக, அந்நாட்டு அரசாங்கம் தனது கட்சிக்காரரையும் அவரது சகோதரர்களையும் போர்க் குற்றவாளிகளாகக் கருதி கனடாவிற்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

குறிப்பாக இந்தியா விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் அறிவிப்பில், "2009ஆம் ஆண்டு போரில் தோற்கடிக்கப்பட்ட போதிலும், விடுதலைப் புலிகள் ஈழம் என்ற கருத்தை கைவிடவில்லை என்றும், அதற்காக அவர்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும்" கூறப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி அந்த விடயத்தின் அடிப்படையில் இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்போது உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி, பாதுகாப்பு குறைக்கப்படுவதற்கு முன்பு, தனது கட்சிக்காரருக்கு 203 அதிகாரிகளின் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், ஒக்டோபர் 31 ஆம் திகதி 60 பாதுகாப்பு அதிகாரிகளாகக் குறைக்கப்பட்டதாகவும் கூறினார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள 60 அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, ஷிப்டுகளில் பணிபுரியும் போது எந்த நேரத்திலும் ஆறு அல்லது ஏழு அதிகாரிகள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட தற்போதைய ஜனாதிபதி, தனது கட்சிக்காரரின் பாதுகாப்பை அறுபது பேராகக் குறைத்ததையும், இதை விமர்சித்தால், அவற்றையும் நீக்குவதாக எச்சரித்ததையும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி, பாதுகாப்பு தொடர்பாக இதுபோன்ற முடிவுகளை எடுக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு பிரபுகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை ஆராய்வதறக்காக நியமிக்கப்பட்ட சித்ரசிறி குழு, தனது கட்சிக்காரரின் கண்காணிப்புக்களை அழைக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அந்தக் குழு பாதுகாப்பு குறித்து முடிவுகளை எடுக்கும் குழு அல்ல என்று ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

தனது கட்சிகாரரின் பாதுகாப்பைக் குறைப்பதற்கு முன்பு, அவரது பாதுகாப்புத் பிரதானிகளின் கண்காணிப்புக்களை அரசாங்கம் விசாரிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல் தன்னிச்சையாக தனது கட்சிகாரரின் பாதுகாப்பைக் குறைப்பது முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது என்று வலியுறுத்தினார்.

தனிநபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், சமீபத்தில் கொலை செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவுக்குக் கூட பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கூறிய ஜனாதிபதி சட்டத்தரணி, அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு முறை கிளர்ச்சி செய்த ரோஹண விஜேவீரவின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்கம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பாதுகாப்பு அளித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து முன்கூட்டியே தகவல்கள் கிடைத்த போதிலும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் நெருக்கடி நிலை ஏற்பட்டதாகவும், ஒரு சம்பவம் நடந்த பிறகு அதற்கான காரணங்களை ஆராய பிரேத பரிசோதனைகளை நடத்துவது பயனுள்ள செயல் அல்ல என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

இத்தகைய சூழலில் எந்தவொரு முறையான பாதுகாப்பு மதிப்பீடும் இல்லாமல் தனது கட்சிகாரர்களின் பாதுகாப்பைக் குறைக்க அதிகாரிகள் எடுத்த முடிவால் தமது கட்சிகாரரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி நீதிமன்றத்தைக் கோரினார்.

பின்னர், சட்டமா அதிபர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை சமர்ப்பித்து, மனுதாரரின் பாதுகாப்பு தொடர்பான முடிவு, பிரபு பாதுகாப்பை மதிப்பிடும் நிபுணர் குழுவால் எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த நிபுணர் குழுவில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானி, அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பிரதானி, பொலிஸச விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி, பொதுப் மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்தக் குழு 2015 முதல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

மனுதாரர் 2020ஆம் ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்டபோது இந்தக் குழுவால் அவரது பாதுகாப்பு மதிப்பீடுகளும் நடத்தப்பட்டதாகவும், இந்தக் குழு அனைத்து முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரமுகர்களின் பாதுகாப்பு மதிப்பீடுகளை அவ்வப்போது நடத்தி பாதுகாப்பு தொடர்பான அவதானிப்புகளைச் சமர்ப்பிப்பதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு நபரையும் விசேடமாக நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஒரு நபரை இலக்கு வைத்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரிய அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என்றும் கூறினார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட மூன்று நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, மனுவை விசாரிக்க போதுமான காரணங்கள் இல்லை என்பதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய தீர்மானித்தது.

-அத தெரண

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி