எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு, நீண்ட காலம் வாய்ச்சவடால் அரசியல் செய்த ஜே.வி.பி
உட்பட்ட தேசிய மக்கள் சக்தி இப்போது அதிகாரம் கைகளுக்கு வந்த பின்னர் - ஆட்சிக் கயிறு தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பு - முன்னர் வாய்வீச்சால் வெட்டிப் பிடுங்கிய விடயங்களை செயலில் சாதிக்க முடியாது தடுமாறி அல்லாடுகின்றது.
அதிகாரத்துக்கு வர முன்னர் தேசிய மக்கள் சக்தி கொடுத்த எல்லா வாக்குறுதிகளும் காற்றில் பறக்கும் நிலைமையில் இருப்பது இப்போது வெளிப்படையானது.
எதிரணியில் இருந்து கொண்டு கண்மூடித்தனமாக விமர்சிப்பது வேறு, ஆட்சி அதிகாரத்தைக் கையாண்டு விடயங்களைக் கொண்டு நடத்துவது வேறு என்பது இப்போது ஜே.வி.பி தரப்புக்கும் நன்கு புரியத் தொடங்கியிருக்கும் என நம்பலாம்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர்க் குண்டு தாக்குதல்களுக்கு நியாயம் தேடி - நீதியை நாடி - மைத்திரிபால சிறிசேன அரசு, கோட்டாபய ராஜபக் ஷ அரசு, ரணில் அரசு என்று எல்லோர் பின்னாலும் போன கத்தோலிக்க திருச்சபை இப்போது தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி அநுரா குமார திஸாநாயக்க மீது அதீத நம்பிக்கை வைத்து பல எதிர்பார்ப்புகளை வெளியிட்டு நின்றது.
ஆனால், சிறுபான்மை மதத்தினருக்கு - சிறுபான்மை இனத்தினருக்கு - நீதி செய்வதில் தென்னிலங்கை எத்தகைய போக்குடையது என்பதை தமிழர்கள் விடயத்தில் கண்டுர்ணத் தவறிய கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித், அரசின் மீது நம்பிக்கை வைத்து நீதி கிட்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
அநுரா குமார திஸாநாயக்கவின் வருகையோடு இந்த பேரழிவுக்கு நீதி, நியாயம் கிட்டும் என்று அவர் கொண்டிருந்த நம்பிக்கை இப்போது மண்ணாகத் தொடங்கி இருப்பது அவருக்கே புரிய ஆரம்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தொடர்க் குண்டுத் தாக்குதல்களின் நினைவு தினம் ஏப்ரல் 21 வருகின்றது. அதற்கு முன்னர் அநுர அரசு இவ்விடயத்தில் காத்திரமான நடவடிக்கை எடுக்காவிட்டால், கத்தோலிக்க திருச்சபை குறிப்பிடத்தக்க பதிலடி நடவடிக்கை எதனையும் எடுக்கக் கூடும் என்பது கர்த்தினால் மல்கம் ரஞ்சித்தின் தற்போதைய அறிவிப்பு மூலம் வெளிப்பட்டிருக்கின்றது.
வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இது விடயத்தில் அரசு காத்திரமான பிரதிபலிப்பைக் காட்டாமல் விட்டால் - மே முதல் வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நடப்பதற்கு முன்னர் - இந்த ஆட்சி பீடத்திற்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை உரு கொண்டு நிற்கும் என்பது கத்தோலிக்க ஆயரின் தற்போதைய அறிவிப்பின் மூலம் உறுதியாகி உள்ளது.
'நாங்கள் அரசிடம் அதிகாரத்தை ஒப்படைத்துள்ளோம். இப்போது, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவது, சரியான விசாரணை நடத்துவது, தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் தேவைப்பட்டால் அவற்றைத் திருத்துவது அவர்களின் பொறுப்பு.
நீதி மற்றும் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அதை மறைக்கவோ அல்லது அரசியல் ஒப்பந்தங்கள் மூலம் சமரசம் செய்யவோ கூடாது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நீதி வழங்குவதாக, குறிப்பாக ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க கட்டுவாப்பிட்டியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது.
நீதி தாமதிக்கப்படாது என்று அவர்கள் எங்களுக்கு உறுதியளித்தனர். இப்போது, அவரகள் தங்கள் வார்த்தையின்படி செயல்பட வேண்டும். சுமார் ஒரு மாதத்தில், தாக்குதல்கள்கள் இடம்பெற்று ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவோம். அதற்கு முன்னர் எங்களுக்கு நியாயமான பதில் கிடைத்தால், அதை நாங்கள் வரவேற்போம். ஆனால் இல்லையென்றால், மீண்டும் ஒருமுறை வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும்” என்று கர்த்தினால் தெரிவித்திருக்கின்றார்.
அநுர அரசுக்கு செக் - மேட் வைத்திருக்கின்றார் கர்த்தினால்!
-முரசு – ஆசிரியர் தலையங்கம்