போதைப்பொருள் பாவனைக்கும் மதுவுக்கும் அடிமையாகும் ஒரு மோசமான சமுதாயம் உருவாகி
வருகையில், பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் பரபரப்பு விடயமாக மாறி வருகின்றன.
பெண்களைப் போற்றி மதிக்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு இரண்டு நாள்கள் முடிவதற்கு இடையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் ஒருவர் முன்னாள் படைச் சிப்பாய் ஒருவரினால் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை பற்றிய செய்தி அதிர்ச்சி தருவதாக வெளியாகி இருக்கின்றது.
பாலியல் குற்றங்களும் துஷ்பிரயோகங்களும் சமூகத்தில் தவிர்க் முடியாத விவகாரமாகத் தொடர்ந்து இடம்பெற்று வந்தாலும் இந்தக் குற்றங்கள் எல்லா மட்டங்களிலும்இடம்பெ ற்று வருகின்றமை மறுக்கப்படக்கூடியது அல்ல.
2007 நவம்பரில் நீர் கொழும்பு பொது வைத்தியசாலையில் 23 வயதுடைய - ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற - ஓர் இளம் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு ஆறாவது மாடியில் இருந்து தள்ளி விழுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
ஏழு ஆண்டுகள் தாமதத்தின் பின்னர் - 2014இல் - அந்தக் குற்றத்தை இழைத்த மருத்துவ அதிகாரி பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றங்களில் குற்றவாளியாகக் காணப்பட்டார். அவர் ஏழு வருடங்கள் சிறையிலிருந்த பின்னர் தற்போது பிணையில் வெளியில் இருக்கின்றார்.
அநுராதபுரத்தில் தற்போது பெண் மருத்துவ அதிகாரி கொடூரத்துக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி பரபரப்பாக வெளியானமையை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றும் மருத்துவர்களின் பாதுகாப்புத் தொடர்பான நெருக்கடிகள், சிக்கல்கள் பற்றி பல்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில் - கிராம சேவையாளர்கள் தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கோரிஎநேற்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களினால் இந்த தொழில்சார் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளும் இதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர்களில் அறுபது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் எனவும், பெரும்பாலான கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசங்களில் அமைந்துள்ளன எனவும் அவர் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர்கள் பல்வேறுசந்தர்ப்பங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளனர் எனவும் நெவில் விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அரச மற்றும் பொது ஊழியர்களின் சேவை நேரப் பாதுகாப்புத் தொடர்பில் விசேட கவனம்செலுத்த வேண்டிய ஒரு தேவை எழுந்திருக்கின்றது. அரசு சிரத்தை எடுத்து நட்வடிக்கை எடுக்க வேண்டிய விவகாரம் இது.
-முரசு ஆசிரியர் தலையங்கம்.