கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே தனுஷ் குணசேகரவின் மாத்தறை
பிரதேசத்தில் உள்ள வீடு, நேற்று (09) இரவு 11.00 மணியளவில் பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டைச் சோதனை செய்வதற்கான எந்தவொரு சட்ட aஅனுமதியுமின்றி, பொலிஸ் பரிசோதகர் எம்.ஆர். தயானந்தா தலைமையிலான குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் இரண்டு குழுக்கள் கொழும்பிலிருந்து மாத்தறைக்குச் சென்று, இரவிரவாக அந்த வீட்டைச் சோதனை செய்ததாக, லங்கா நியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அனைவரும், சிவில் உடையிலேயே அங்கு சென்றதாகவும், தங்கள் அடையாள அட்டைகளை காண்பிக்குமாறு கேட்டபோதும், அவர்கள் அதைச் செய்ய மறுத்துவிட்டு, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நேரத்தில், பஸ்நாயக்க நிலமேவின் 84 வயது தாயார் மட்டுமே அந்த வீட்டில் இருந்துள்ளார்.
இது குறித்து நாம் விசாரித்தபோது கருத்துத் தெரிவித்த கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர, இந்த சோதனை குறித்து மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கோ அல்லது அந்தப் பகுதிக்குப் பொறுப்பான மாலிம்பட பொலிஸ் நிலையத்துக்கோ அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று கூறினார்.
நீதிமன்றத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோன், தனது வீட்டில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உயரதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பின்னர் தெரியவந்ததாக அவர் மேலும் கூறினார்.
கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே இன்று (10) காலை கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை தலைமையகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வரவிருந்த நிலையிலேயே, இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி: