ஊசியினால் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாக தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் (IDH) ஒரு நோயாளி சிக்கலுக்கு உள்ளாகி இறந்ததாகக் கருதப்படும் சம்பவத்தை அடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சம்பந்தப்பட்ட தடுப்பூசியைப் பயன்படுத்துவதைத் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை (NMRA) நிறுத்தியுள்ளது.
குறித்த ஊசியை எடுத்துக் கொண்ட கண்டி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நோயாளிகளும் சிக்கல்கள் காரணமாக இறந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவுகிறது. இது குறித்து கண்டி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சந்தன ஜயந்தவிடம் வினவியபோது, குறித்த ஊசியை எடுத்துக் கொண்ட நோயாளிகள் இருவர் இறந்ததாக எந்த அறிக்கையும் இல்லை என்று அவர் கூறினார்.
அதேவேளை, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுக்கவே இந்த ஊசி நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தவிர, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறுவர்களுக்கு வாந்தி ஏற்படும்போதும் இந்த ஊசி கொடுக்கப்படுவதாகவும், அத்துடன் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளுக்கும் இது வழங்கப்படுவதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர் கே. எம். ஜி. கே. பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட NMR/PA3/ADR 04/2025 இலக்க கடிதம் கடந்த 12ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஊசியை வழங்கியதன் பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பாதகமான எதிர்வினைகள் காரணமாக இந்த ஒளடதம் தற்காலிகமாகப் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் (Indian Pharmacopeia - IP) தரத்தின் கீழ் இந்த மருந்து நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாகவும், அவை இங்கு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்றும் வைத்திய சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இது தொடர்பில் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவிடம் வினவியபோது, தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு இந்த ஊசி வழங்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஏதோவொரு சிக்கல் காரணமாக அந்த நோயாளி உயிரிழந்துள்ளார் என்று கூறினார். அத்துடன், அந்த மரணம் இந்த ஊசிகளால் ஏற்பட்டதா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த Ondansetron VSP 8 mg/A ml (Ondanman 8) ஊசியை நோயாளிகளுக்கு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அது குறித்து விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து நேரடியாக ஒளடதங்களை நாட்டுக்குள் கொண்டு வர தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும், அவ்வாறு கொண்டு வரப்படும் ஒளடதங்கள் இங்கு பரிசோதிக்கப்படுவதில்லை என்றும் மருத்துவர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் வைத்தியர் சாமல் சஞ்சீவ கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில் (Indian Pharmacopeia) பதிவு செய்யப்பட்ட ஒளடதங்களை நாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், அவற்றை இங்கு பரிசோதனை செய்யும் ஒரு பொறிமுறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று (14ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


