இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 18 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவானத்தை பெறுவது என்ற அரசாங்கத்தின் இலக்கை கோடிட்டுக் காட்டியுள்ளார்.
முந்தைய பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல பிராந்தியங்களில் ஏற்றுமதித்துறை நிலையான வளர்ச்சியைக் காணும் நிலையில், நாடு இப்போது நிலையான மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என அதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி வளர்ச்சியைத் தக்கவைத்து விரிவுபடுத்த புதிய சர்வதேச சந்தைகளை அரசாங்கம் தீவிரமாகத் தேடி வருவதாகவும் இதன்போது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ தெரிவித்தார்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) நிலையான விலையில் (2015) 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கு 2,883,559 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது நேர் பெருமானத்தில் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், விவசாய நடவடிக்கைகள், தொழில்துறை மற்றும் சேவை நடவடிக்கைகள் முறையே 2.0 சதவீதம், 5.8 சதவீதம் மற்றும் 3.9 சதவீதம் விரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


