யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சர்வதேச ரீதியில் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக கொழும்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீடுகளை வழங்கும் அலுவலகம் என்று அது தொடர்பாக பல சட்டங்களைக் கொண்டு வந்து, அவற்றின் அடிப்படையில் கட்டமைப்புக்களை கொழும்பு ஆட்சிப் பீடங்கள் அவ்வப்போது கண்துடைப்பு நடவடிக்கைகளாக அமைத்தாலும், அவற்றை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்வதாக இல்லை.
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு வரை நேரடியாகச் சென்று, சர்வதேச நியமங்களுக்கு அமைவான பன்னாட்டு விசாரணை முறைமைகளையும், நடவடிக்கைகளையும் மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என்று தமிழர் தரப்பு விடாப்பிடியாக கூறி வருகின்றது.
இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சிறிதரன் வரை எல்லோரும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இதனைத்தான் வலியுறுத்தி வருகின்றனர். யுத்த காலத்திலும் பின்னரும் இடம்பெற்ற - வலிந்து காணாமலாக்கப்பட்ட - நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட உறவுகளும் மேற்படி காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீடுகளை வழங்கும் அலுவலகம் ஆகியவற்றை அடியோடு நிராகரித்துப் புறக்கணித்திருக்கின்றனர்.
ஆனால் அத்தகைய அலுவலகம் ஒன்று தொடர்பில் அரசமைப்பின் கீழ் இயங்கும் அரசமைப்பு கவுன்ஸிலின் ஒரே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனின் நடவடிக்கை தொடர்பில் சில சர்ச்சைக் குறிப்புகள் இப்போது வெளியாகி உள்ளன.
இழப்பீட்டுக்கான அலுவலக உறுப்பினர் இருவரைத் தேர்வு செய்வதற்கான விடயம் அரசமைப்பு கவுன்ஸிலுக்கு வந்த போது அதற்காக விண்ணப்பித்தோரின் பட்டியலில் 12 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. அவர்களை நேர் முகம் கண்டு, தகுதியான இருவரைத் தெரிவு செய்வதற்காக அரசமைப்பு கவுன்ஸில் தனது உறுப்பினர்களிடையே அறுவர் கொண்ட குழுவைத் தெரிவு செய்தது.
அரசமைப்பு கவுன்ஸிலில் இடம்பெற்றிருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளான கலாநிதி பிரதாப் இராமானுஜம், கலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தர, கலாநிதி டினேஷா சமரரத்ன ஆகியோரோடு நாடாளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, அஜித் பி பெரேரா, சிவஞானம் சிறிதரன் ஆகிய அறுவரே அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
அந்தப் பன்னிருவரிலிருந்து கடைசியாக நேரமுகக் குழு இருவரைத் தெரிவு செய்து அனுப்பி இருந்தது. அந்த இருவரையும் சிறிதரன் எம்.பியையும் உள்ளடக்கிய அரசமைப்பு கவுன்ஸில் எந்த எதிர்ப்புமின்றி அங்கீகரித்து உள்ளது.
அந்த இருவர் பற்றிய விவரம் வெளியான போதுதான் தமிழர் தரப்பில் அதிர்ச்சி நிலைமை வெளியிடப்பட்டிருக்கின்றது. தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவர் தமிழர் என்றாலும், அவர் இலங்கைக் கடற்படையின் முன்னாள் மூத்த அதிகாரி ரியல் அட்மிரல் ஜே.ரி.ஜி.சுந்தரம்.
1971 முதல் 2001 வரை கடற்படையில் பணியாற்றியவர். 'வீரய்யா' என்ற கடற்படை கப்பலுக்கு தளபதியாக இருந்தவர். கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாகவும் செயற்பட்டவர். முப்பது ஆண்டுகாலக் கடற்படைப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் கொத்தலவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராகவும் பணியாற்றியவர்.
இழப்பீட்டு அலுவலகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மற்ற உறுப்பினர் ஒரு பெண் மணி. திருமதி வசந்தா பெரேரா. இவர் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகக் கோலோச்சிய போது காணி அமைச்சின் மேலதிக செயலாளராகவும், அதற்கு மேலதிகமாக பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளராகவும் பணியாற்றியவர்.
அச்சமயத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் காணிகள் தொடர்பான விடயங்களை பாதுகாப்புச் செயலாளரின் சார்பில் பெரும்பாலும் கையாண்டவர் இவர் தான்.
யுத்தத்தின் முடிவில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் காணிகளை விடுவிப்பதற்காக இரா.சம்பந்தன் எம்.பி தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவோடு நேரடியாக ஊடாடிய சமயங்களில், அந்த விவகாரங்களை ஒட்டி, நேரடியாக இந்தப் பெண்மணியோடுதான் தமிழ்ப் பிரதிநிதிகள் மோத வேண்டி இருந்தது.
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை விட தமிழர்களின் காணிகளை விட்டுக் கொடுக்க முடியாது என்ற தீவிரமான நிலைப்பாட்டில் இவரே இருந்தார் என்று தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளே அந்தச் சமயத்தில் அதிகம் அதிருப்தியும் எரிச்சலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இத்தகைய இருவரைத்தான் அரசமைப்பு கவுன்ஸில், தமிழர் தரப்பினால் நிராகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்துக்கான உறுப்பினர்களாகத் தெரிவு செய்திருக்கிறது.
அந்தத் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுக் குழுவில் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறிதரன் இடம்பெற்றிருக்கிறார். அது மாத்திரமல்ல. அதற்குப் பின்னர் அந்த இருவரையும் அந்தப் பதவிக்கு நியமிக்கும் அரசமைப்பு கவுன்ஸிலின் கூட்டத்திலும் இருந்து, அந்த நியமனம் அங்கு அங்கீகரிக்கப்பட இடமளித்திருக்கின்றார்.
அந்த நியமனங்களை ஆட்சேபிப்பதாகவோ, எதிர்ப்பதாகவோ, தன்னுடைய அதிருப்தியை தெரிவிப்பதாகவோ சிறிதரன் எம்.பி பதிவு செய்யவில்லை என்று சுட்டிக் காட்டப்படுகின்றது. ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 60ஆவது அமர்வின் பக்க நிகழ்வில் கலந்துகொண்டு, சர்வதேச பங்களிப்பில்லாத இலங்கையின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உரையாற்றி விட்டு வந்துதான், மேற்படி நியமனங்கள் மற்றும் அதை உறுதிப்படுத்தும் அரசமைப்புக் கவுன்ஸிலின்
கூட்டத்தில் தான் பங்கு பற்றியமை பற்றிய கூட்ட அறிக்கையை சிறிதரனும் சேர்ந்து அங்கீகரித்து இருக்கிறார் என அறியவந்தது.
இத்தகைய நியமனங்கள் குறித்து குறைந்தபட்சம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களாவது தங்களின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்புவது அவர்களது கடமையாகும். இதே சமயம் அரசமைப்பு கவுன்ஸிலுக்கு ஆளும் தரப்பு மற்றும் பிரதான எதிர்க்கட்சி ஆகியவற்றைச் சாராத 24 எம்.பிக்களின் சார்பாகவே சிறிதரன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பது
தெரிந்ததே.
இந்த 24 எம்.பிக்களில் தமிழரசுக் கட்சியின் எட்டு எம்.பிக்கள் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய பத்து தமிழ் எம்.பிக்களைத் தவிர்ந்த மற்றைய 14 பேரும் தங்கள் சார்பில் அரசமைப்பு கவுன்ஸிலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிதரன், அங்கு பெரும்பாலும் ஆளும் தரப்பின் நிலைப்பாட்டையே ஆதரித்துச் செயற்படுகின்றார் என்ற அடிப்படையில் தங்கள் ஆட்சேபத்தை வெளிப்படுத்தும் வழிவகை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள் என்று அறிய வந்தது.
-காலை முரசு


