கொவிட் -19 தொற்றுநோய் நாடு முழுவதும் பரவி வருவதால், பொதுத் தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான 'ஜாதிக சமகி பலவேகய ' தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை 'ஜாதிக சமகி பலவேகய பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்துள்ளார்.

பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அதன் உறுப்பினர்கள் என்.ஜே. அபேசேகர மற்றும் ரத்னஜீவன் ஹூல் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடைபெற்று புதிய பாராளுமன்றம்  கூட்டப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் தினேஷ் விதானபதிரன தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாராளுமன்றத்தை மார்ச் 2 ம் திகதி கலைத்து, ஏப்ரல் 25 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் தேதியை ஜனாதிபதி அறிவித்தார்.

பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த முடியாததால் தேர்தலை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அரசியலமைப்பின் விதிகளுக்கு மாறாக"

ஜூன் 20 தேர்தலுக்கான காலக்கெடு அரசியலமைப்பின் விதிகள் மற்றும் பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு மற்றும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்டத் தவறியது போன்றவற்றுக்கு முரணானது என்று மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

அக்டோபர் 23, 2019 அன்று பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டம், ஏப்ரல் 30 வரை மட்டுமே அரச நிதியைச் செலவழிக்க தற்போதைய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது.

இந்தப் பின்னணியில், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தேவையான நிதிக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

அரச நிதிகள் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுவது அரசியலமைப்பை மீறுவதாகும் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வருவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறுவது தொடர்பான தீர்ப்பையும் மனுதாரர் கோருகிறார்.

இறுதி முடிவு எடுக்கும் வரை ஜூன் 20 ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பையும், மார்ச் 2 ம் தேதி வெளியிடப்பட்ட ஜனாதிபதி வர்த்தமானியையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி