நாளாந்த சம்பளத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் வாக்குறுதி மேலும் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
தோட்டக் கம்பனிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர், சம்பளத்தை அதிகரிக்க முடியாமை குறித்து முதலாளிகள் கூறும் காரணங்களை நியாயப்படுத்த முயற்சித்துள்ளார்.
"உலக சந்தையில் இலங்கை தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தேயிலைக்கு சரியான விலை கிடைக்கவில்லை எனவும், உற்பத்திக்கு அதிக செலவாகிறது எனவும், தொழிலாளர்களுக்கான ஏனைய நலன்புரித் திட்டங்களுக்கு அதிக பணம் செலவிடப்படுவதாகவும் அவர்கள் கூறினார்கள். சம்பள உயர்வை வழங்க முடியாது என்று அவர்கள் கூறவில்லை. சம்பள உயர்வை வழங்க முடியாமைக்கான காரணங்களை அவர்கள் விளக்கினார்கள்," என ஊடக சந்திப்பொன்றை நடத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக அரசாங்கம் பின்பற்றும் கொள்கை இலங்கையின் சாதாரண மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக உலக வங்கி அறிவித்த அதே நாளிலேயே, தோட்ட முதலாளிகளின் காரணங்களை பிரதி அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் கடந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு இணையாக, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தையும் 1700 ரூபாவாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு இணக்கப்பாட்டை எட்டுவதற்காக, தோட்டக் கம்பனிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் செப்டம்பர் 9 ஆம் திகதி பெருந்தோட்ட அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது.
"பொருளாதார ஸ்திரத்தன்மையை பெருமளவில் மீட்டெடுத்த நிதி நடவடிக்கைகளாலேயே ஏற்படுத்தப்பட்ட உயர் மறைமுக வரிகள் மற்றும் அரச துறையின் உண்மைச் சம்பளக் குறைப்பு என்பன குடும்பங்களை பாதகமாக பாதித்துள்ளன" என உலக வங்கியால் அன்றைய தினம் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான புதிய அறிக்கை கூறுகிறது.
சம்பளம் வழங்குவதை உற்பத்தித்திறன் அடிப்படையில் மேற்கொள்ள அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாக, கலந்துரையாடலுக்குப் பின்னர் தோட்டக் கம்பனிகள் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"உற்பத்தித்திறன் அடிப்படையிலான சம்பள உயர்வுக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. அதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு அரசாங்கம் கோரியது. நாங்கள் அடுத்த வாரம் அந்தத் திட்டத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்போம். தொழிலாளர்கள் அதிக பணம் சம்பாதிக்கக்கூடிய வகையில் ஒரு திட்டத்தை தயாரிப்பது குறித்து கலந்துரையாடுகிறோம்."
இன்னும் ஒரு மாதத்தில் இது தொடர்பாக மீண்டும் ஒரு கலந்துரையாடல் நடத்தப்படும் எனக் குறிப்பிடும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் கடந்த காலத்தில் தொடர்ச்சியாகக் கூறியது போல், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக சந்திப்பில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை உறுதியளித்துள்ளார்.
வர்த்தமானி (Gazette)
உழைப்புக்கு ஏற்ற சம்பள உயர்வைக்கோரி பல ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தின் விளைவாக, தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தொழில் திணைக்களம் வெளியிட்டது.
நாளாந்த குறைந்தபட்ச கொடுப்பனவாக 1,350 ரூபாவும், உற்பத்தித்திறன் அடிப்படையிலான ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 350 ரூபாவும் தொழிலாளர்களின் சம்பளத்தில் தினமும் சேர்க்கப்படும் வகையில் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் திகதி அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம், தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்மொழியப்பட்ட 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தலையிடும் என்று அறிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட மேற்கூறிய வர்த்தமானி அறிவித்தலையோ அல்லது ஜனாதிபதி அநுரவின் வாக்குறுதியையோ தோட்டத் தொழிலாளர்களுக்காக இதுவரை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. தோட்டத் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுவது போல, சில ஆண்டுகளுக்கு முன்பு போதுமானதாக இருந்த 1700 ரூபாய் நாளாந்த சம்பளம், இன்றைய பொருளாதார சூழ்நிலையில் போதுமானதாக இல்லை.


