எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற் செய்திகள் கிடைத்து  வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்காக தமது வாக்குகளைப் பயன்படுத்திய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற முடியாது எனவும், அவரின் முட்டாள்தனமான செயற்பாடுகள் அநுரவிற்கு ஆதரவாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டைப் பாதுகாக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்பை நிறைவேற்றி நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து ஐ.தே.க உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார். 

மஹியங்கனை பொது விளையாட்டரங்கில் இன்று (04) இடம்பெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

"இன்று தபால் வாக்களிப்புக்கள் ஆரம்பித்துள்ளன. நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. இரு வருடங்களுக்கு முன்பாக இப்படியொரு தேர்தலை நடத்தும் வாய்ப்பு இருக்கவில்லை. சிலர் பாராளுமன்றத்தை முடக்க வந்தனர். அதற்கு சந்தர்ப்பம் அளிக்காமல் அவர்களை வெறும் கையோடு திருப்பி அனுப்பினோம். 

மருந்து, எரிபொருள்,எரிவாயு வரிசைகள் இருந்தன. எவருமே ஏற்க இயலாது என்று சொன்ன போது, 'இயலும் ஸ்ரீலங்கா' என்று சொல்லி நாங்கள் பணிகளை ஆரம்பித்தோம். இன்று நல்ல நிலைத்தன்மை கிட்டியுள்ளது. அன்று தட்டுப்பாடாக இருந்த பொருட்கள் இன்று கிடைக்கின்றன. பொருட்களின் விலையும் குறைந்து வருகின்றன.

நாட்டில் புதிய பொருளாதாரத்தைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. மக்கள் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். பொருட்களின் விலைகளை இன்னும் குறைக்க வேண்டும். இதனை செய்யவே தேர்தலை நடத்துகிறோம். இந்த தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அமையும். நாம் எந்த வழியில் செல்லப்போகிறோம் என்பதை தீர்மானிக்கலாம்.  

இந்த நாட்டில் நாம் ஆரம்பித்த பயணம் எதிர்காலத்திலும் தொடர வேண்டும். மக்களுக்கு கஷ்டம் இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஒரே அடியில் சரிந்த பொருளாதாரத்தை மீட்க முடியாது. சர்வதேசத்தின் உதவி எமக்கு இருக்கிறது. 

அதனை கொண்டு வாழ்க்கைச் சுமையை குறைக்கவும், தொழில் வாய்ப்புக்களை பலப்படுத்தவும், வரி சுமையைக் குறைக்கவும், 'உறுமய', 'அஸ்வெசும' போன்ற மக்களுக்கான நிவாரணத் திட்டங்களைப் பாதுகாக்க வேண்டும்.

நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர் முதல் அடியாக குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்கினோம். இன்னும் அதிகமானவர்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாகவே அதனை செய்தோம். 

பின்னர் விவசாயிகளுக்கான உரத்தைப் பெற்றுக்கொடுத்து நல்ல விளைச்சலை கோரினோம். விவசாயிகள் தந்த ஆதரவினால் நாட்டை முன்னேற்ற முடிந்தது. இனிவரும் நாட்களில் வரிச்சுமையைக் குறைப்போம். விவசாய துறையை மேலும் பலப்படுத்துவோம். மக்களுக்கு காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளையும் தொடர்வோம்.

இங்கு மாதுறுஓய போன்ற திட்டங்களை ஆரம்பித்த காலத்தில் மக்களுக்கு காணி உறுதிகள் கிடைக்கவில்லை. சுமார் 85 வருடங்களுக்கும் மேலாக மக்களுக்கு காணி உறுதிகள் கிடைத்திருக்கவில்லை. அதனாலேயே தற்போது மக்களுக்கான உரிமைகளை வழங்குகிறேன். இனிவரும் காலங்களில் விவசாய நவீனமயமாக்கல் பணிகளையும் முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். அதனால் எதிர்காலத்தில் உலகின் பெருமளவானோரின் உணவுத் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியும். 

எதிர்காலத்தில் விவசாய உற்பத்திகளை அதிகபடுத்தினால் யார் முன்னேற போகிறார்கள்? இன்று வீட்டில் போய் கண்ணாடியைப் பாருங்கள். யார் முன்னேறுவர் என்பது தெரியும். மற்றைய கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிவாரணங்கள் மக்கள் வறுமையைத் தக்க வைப்பதாக அமையும். ஆனால், நாம் மக்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டுச் செல்வதற்காக திட்டங்களைக் குறிப்பிட்டிருக்கிறோம். 

தேயிலையை போன்றே மற்றைய விளைச்சல்களையும் ஏற்றுமதியை இலக்கு வைத்து மேற்கொள்ள வேண்டும். எனவே பழைய வாத்திம் வாசிப்பவர்களை விட்டுவிடுங்கள். அடுத்த வருடத்திலிருந்து நாம் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவோம். ஸ்மார்ட் விவசாயம் செய்யவும் நிவாரணங்களை வழங்குவோம். மேலும் ஐம்பதாயிரம் பேருக்கு வௌிநாட்டு தொழில்களுக்கான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள 50 ரூபாய் கொடுப்பனவையும் வழங்குவோம். 

இளையோருக்கு எவ்வாறான தொழில் வாய்ப்புக்களை வழங்க போகிறார்கள் என்பது பற்றி மற்றைய கட்சிகள் கூறவில்லை. அதற்காக அவர்களிடம் நல்ல திட்டம் இருப்பதை காட்டினால் அவர்களுக்கு பரிசு கொடுப்பேன்.

இன்று இந்த கூட்டம் நடக்கும் மஹியங்கனை ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றி ஆசனமாகும். இன்றைய நிலையில் சஜித் பிரேமதாசவால் அனுர குமார திசாநாயக்கவை தோற்கடிக்க முடியாது. இலங்கையில் ஒவ்வொரு முறையில் ஜனாதிபதி தேர்தல்களின் போது இது வேட்பாளர்களுக்கு மட்டுமே முக்கிய இடமிருக்கும். நான் எதிர்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும், மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் மற்றுமொரு எதிர்கட்சிக்கு நாங்கள் இடமளிக்கவில்லை.  

அந்த வகையில் சஜித் பிரேமதாச இப்போதே தோற்றுப் போயுள்ளார். அவர் எதிர்கட்சி தலைவராக இருக்கும் காலத்தில் அவரை மிஞ்சிய வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க இருக்கிறார். நல்லாட்சி அரசாங்கம் இருந்த காலத்தில் கூட அனுர அந்த அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட்டார். ஆனால் இன்று அநுர சஜித்தை மிஞ்சி வந்துள்ளார். சஜித் செய்யும் சில முட்டாள்தனமான செயற்பாடுகள் அநுரவிற்கு சாதமாக அமைந்துள்ளன. எனவே ஐக்கிய தேசிய கட்சியை முன்னோக்கி கொண்டு வந்த தலைவர்களின் பணியை இன்று நானே ஆற்றுகிறேன் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  

அதனால் செப்டம்பர்  21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால். சிலிண்டரும் இருக்காது. உங்கள் விவசாயமும் பாதுகாக்கப்படாது." என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

"கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் கொவிட் தொற்று பரவிய போது இன்று ஆட்சியை கோரும் ஜேவீபியினர் மக்களுக்காக ஒன்றும் செல்லவில்லை. துரதிஷ்ட வசமாக கோட்டாபய ராஜபக்‌ஷவால் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள முடியாமல் போனது.  

அன்று அரசாங்கம் கைவிட்ட நாட்டை ஏற்றுக்கொள்ள எதிர்கட்சிக்கும் திராணி இல்லாத வேளையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலாக முன்வந்தார். அவருக்கு நாங்களும் ஆதரவை வழங்கினோம். ஜனாதிபதி தனது அனுபவம், சர்வதேச தொடர்புகளைப் பயன்படுத்தி நாட்டை மீட்டெடுத்தார். 

உலகின் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியால் நலிவடைந்துள்ளன. ஆனால் இலங்கையை மீட்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்தது. பொறுப்பு கிடைத்தபோது ஓடிப்போனவர்கள். இன்று வந்து ஆட்சி அதிகாரத்தை கோருகிறார்கள். எனவே அவர்களைத் தெரிவு செய்வதா அல்லது கஷ்டங்களிலிருந்து மக்களை மீட்ட தலைவர் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். " என்றார். 

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க

"எந்த நெருக்கடியிலும் நாட்டை ஏற்றுக்கொண்டு மீட்டெடுக்க கூடிய தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே. சிலர் நாடு அனுரவிற்கு என்கிறார்கள். ஆனால் அநுரவிற்கு சரியாக நாட்டை நிர்வகிக்க முடியுமா என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே அனுபவம் மிக்க ஒரு சாரதி இருக்கும்போது, புதிய சாரதியிடம் வாகனத்தை கொடுத்து படுகுழியில் தள்ளிவிடக்கூடாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். " என்றார். 

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ

"செப்டம்பர் 21 வாக்குசீட்டில் சரியான இடத்திற்கு வாக்களிக்க தவறினால் மக்கள் அதன் பிரதிபலன்களை அனுபவிக்க நேரிடும். இன்று வேறு நிற ஆடைகளை அணிந்துகொண்டிருந்தாலும், திசைக்காட்டி என்று பெயர் மாற்றிக்கொண்டாலும் அவர்கள் முந்தைய ஜே.வீ.பீ.காரர்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். 

அதேபோல் பழைய தொலைபேசியிலும் பயனில்லை. இந்த தேர்தலில் மக்களுக்கு இலகுவான இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன. ஒரு புறத்தில் நாட்டையும் மக்களையும் மீட்ட தலைவர் இருக்கிறார். மறுப்புறத்தில் நெருக்கடியின் போது ஓடிய ஔிந்த தலைவர்கள் உள்ளனர். யாருக்கு உங்கள் வாக்கு என்பதை தீர்மானிக்க வேண்டும்.

நாடு அனுரவிற்கு என்கிறார்கள். அனுரவிற்கு நாடு சென்றால், நாடு இருளை நோக்கி செல்லும் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது. தற்போது அனுரவிற்கு ஒரு பயம் ஏற்பட்டுள்ளது. தவறியேனும் ஜனாதிபதி பதவி கிடைத்துவிட்டால் தான் என்ன செய்வது என்ற பதட்டம் அவருக்கு ஏற்பட்டுள்ளது." என்றார். 

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

" ஜே.வீ.பீ யுகம் மீண்டும் இந்நாட்டு மக்களுக்கு வேண்டுமா? நான் எல்லா அரசாங்களிலும் அமைச்சராக இருந்தாக அனுர குமார திசாநாயக்க கூறுகிறார். எனது காலத்தில் நாட்டுக்காக பல சேவைகளை செய்திருக்கிறேன். நாங்கள் கட்சி மாறியதாக கூறுகிறார்கள். ஆனால் ஜே.வீ.பி, சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு ஆதரவளித்த வேளையில் அதற்கான ஒப்பந்தத்தை நானே தயாரித்தேன். நல்லாட்சியின் காலத்திலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தனர் என்பதை இன்று மறந்துள்ளனர். 

வன்முறைகளின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலேயே ஜே.வீஇபியினர் ஈடுபட்டுள்ளனர். மறுமுனையில் சஜித் பிரேமதாச எதைக் கேட்டாலும் கொடுப்பேன் என்கிறார். அவை அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகள். ஆனால் முடிந்ததை மட்டுமே சொல்ல வேண்டும். சொல்வதை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்ற கொள்கையையே ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க பின்பற்றுகிறார். எனவே வேடிக்கை பாத்திரங்களை விடுத்து நாட்டுக்கு நல்ல தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும்." என்றார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி