கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே

சிறுவர் வைத்தியசாலையில், நோயுற்ற சிறுநீரகத்துடன் ஆரோக்கியமான சிறுநீரகம் அகற்றப்பட்டமையால், மூன்று வயது ஹம்தி பஸ்லீம் என்ற சிறுமி உயிரிழந்தமை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்படாமை குறித்து, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

"டிசம்பர் 2022 இல், ஹம்தி என்ற மூன்று வயது சிறுமியின் இடது சிறுநீரகம் கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அகற்றப்பட்டது.  சிறுநீரகம் செயலிழந்தமையே இதற்குக் காரணம். ஆனால் அந்த ஒபரேஷன் முடிந்து, அந்த சத்திர சிகிச்சைக்கு பின், அந்த சிறுமி சாதாரண நோயாளர் விடுதியில் சேர்த்த பின், இடது சிறுநீரகம் அகற்றப்பட்டதாக, அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த சிறுநீரகம் அகற்றப்பட்ட ஏழு மாதங்களுக்குப் பின்னர், இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுமி ஜூலை 2023 இல் உயிரிழந்துவிட்டாள். அந்த சிறுதி உயிரிழந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது."

சத்திர சிகிச்சையில் ஈடுபட்ட இரண்டு வைத்தியர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்றைய தினம் ( 23) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

சிறுநீரகம் வைத்தியசாலையில் இல்லை

“இதில் விசேடம் என்னவெனில், இந்த சத்திர சிகிச்சையை செய்தவரின் பெயர் டொக்டர் நளின் விஜயகோன். நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.  அதாவது இந்த சத்திர சிகிச்சை முடிந்தவுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அதை ஸ்கேன் செய்த டொக்டர் நுவான் ஹேரத்தும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதில் தொடர்புடைய இருவரும் இன்று இந்த நாட்டில் இல்லை. இப்போது அந்த சிறுநீரகங்கள் வைத்தியசாலையில் இல்லை என்பது அடுத்த பிரச்சினை.எப்படியிருந்தாலும், சிறுநீரகத்தை அகற்றினால், அது வைத்தியசாலையில் இருக்க வேண்டும். தற்போது அது வைத்தியசாலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே இது மிகவும் பாரதூரமான நிலை என நான் கருதுகிறேன், இது கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம்.”

ஜூலை 27, 2024 அன்று சிறுமி இறந்து ஒரு வருடம் கடந்துவிட்டது எனுவும், ஆனால் இது தொடர்பாக எந்த விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அறிக்கையின் நிலை என்னவென, சுகாதார அமைச்சரிடம் கேட்டார்.

“விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. இதுவரை எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை.
அத்துடன் நான் நினைக்கின்றேன், முன்னாள் அமைச்சரும், ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது  அறிக்கையை முன்வைப்பதாக குறிப்பிட்டார், ஆனால் அறிக்கைகள் வரவில்லை.  எனவே, நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், குறிப்பாக இப்போது அந்த சிறுமி இறந்து ஒரு வருடம் ஆகிறது. சுகாதார அமைச்சு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அந்த அறிக்கைகளின் நிலை ஆகியவற்றை உங்கள் ஊடாக அறிய விரும்புகிறேன்.”

தற்போது அந்த கேள்விக்கு தம்மிடம் பதில் இல்லை என நாடாளுமன்றத் தலைவரிடம் தெரிவித்த சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன, ஒரு வாரத்திற்குள் பதில் அளிப்பதாக முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யிடம் உறுதியளித்தார்.

“பிரதி சபாநாயகர் அவர்களே, இது தொடர்பாக என்னிடம் இப்போதைக்கு பதில் இல்லை.
நான் அந்த அறிக்கையைப் பெற்று ஒரு வாரத்தில் பதில் தருகிறேன்.” என்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி