முஸ்லிம் காங்கிரஸ் போன்ற
திருட்டு கட்சிக்காரர்களை சேர்க்கமாட்டோம் என ஜேவிபி அநுரகுமார பேசிவரும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வரும் தனிநபர்களை தன் கட்சியில் சேர்ப்பதன் மூலம் அநுரகுமார தன் சொந்த கொள்கைக்கு முரண்படுகிறாரா என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று தன்னை சந்தித்த கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
அதாவுல்லாஹ்வின் கட்சியில் மாகாண சபை உறுப்பினராக இருந்து பின்னர் முஸ்லிம் காங்கிரசில் சேர்ந்து அதன் தலைமை நிர்வாகத்தில் இருந்த ஒருவரை ஜேவிபி, தேசிய மக்கள் சக்தி தன்னோடு இணைத்துக் கொண்டுள்ளது.
இதன் மூலம் இப்போதே அநுரகுமார தன் கொள்கையிலிருந்து விலகி திருடர்களை இணைக்காமல் வெற்றியைப் பெற முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளாரா?
திருட்டுக்கட்சிகளை இணைப்பதும் திருட்டுக்கட்சிகளோடு துணைபோய்விட்டு இப்போது தனி நபர் என்று இணைப்பதும் ஒன்றுதான். இதைத்தான் ஏனைய கட்சிகளும் காலாகாலமாக செய்கின்றன.
நாம் சொல்கிறோம், மாற்றம் என்பது ஆட்களை மாற்றுவதால் ஏற்படாது, நல்ல அரசியலை உருவாக்கும் மன மாற்றம் மக்கள் மனதிலும் அரசியல்வாதிகள் உள்ளத்திலும் வரவேண்டும். இந்த நாட்டில் ஆட்சிகளை மாற்றுவதால் பெரிதாக நன்மை கிடைக்கவில்லை.
மஹிந்தவுடன் மஹிந்த கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரி பெல்டி அடித்ததும் அவர் நல்லவராகிவிட மாட்டார் என அப்போதே சொன்ன ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சியாகும். இல்லையில்லை என முஸ்லிம் சமூகம் மறுத்து செத்துப்போனவனும் வந்து மைத்திரிக்கு ஓட்டுப்போட்டான். கடைசியில் மஹிந்த ஆட்சியைவிட மோசமானது ஹக்கீம், ரிசாத், தமிழ் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்த மைத்திரி ஆட்சி.
ஒரு கட்சியில் இருந்து சுக போகம் அனுபவித்து விட்டு தேர்தல் சந்தர்ப்பத்துக்கு கட்சி மாறுபவன் நிச்சயம் பெரும் மோசடிக்காரன். இப்படியான இன்னும் பல மோசடிக்காரர்கள் ஜேவிபியில் இணைந்தால் மீண்டும் மைத்திரி ஆட்சி போல் திருட்டு ஆட்சியே ஏற்படும்.