சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவானதால் இந்த நிலச்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் டாக்டர். வசந்த சேனாதீர தெரிவித்தார்.
நேற்று (11) மீகஹகிவுல மற்றும் தெமோதர ஆகிய பிரதேசங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், மக்கள் இது குறித்து தொடர்ந்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பிட்ட நிலப்பரப்புகளில் ஏதேனும் ஆபத்தான நிலைமை இருப்பதால், காலநிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, கட்டம் 2 (Stage 2) இன்கீழ் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவித்து விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை, 5 மாவட்டங்களின் 38 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அப்படியே நடைமுறையில் உள்ளது.
இது தவிர, கட்டம் 1 (Stage 1) இன்கீழ் விழிப்புடன் இருக்குமாறு தெரிவித்து விடுக்கப்பட்ட நிலச்சரிவு அறிவிப்பு, 3 மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குத் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் டாக்டர். வசந்த சேனாதீர கூறினார்.
பெய்யும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப இந்த அறிவிப்புகள் மாறக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் இது குறித்து தொடர்ந்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அல்லது வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றால் வெளியிடப்படும் அறிவிப்புகளில் மக்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் டாக்டர். வசந்த சேனாதீர கேட்டுக் கொண்டார். மீண்டும் அத்தகைய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்படாமல் இருக்க வழங்கப்படும் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
கடந்த நவம்பர் 20ஆம் திகதி முதல் இன்று (12) வரை ஆபத்தான கோரிக்கைகளைச் சோதிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 2,716 கோரிக்கைகள் கிடைத்துள்ளன என்றும், அவற்றில் 589 கோரிக்கைகள் முடிவடைந்துவிட்டதாகவும் வசந்த சேனாதீர கூறினார்.
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையில், இந்த நாட்களில் செய்ய வேண்டிய பொருத்தமான விடயம், அநாவசியப் பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடத்தில் வசிப்பதே ஆகும் என்று வலியுறுத்திய வசந்த சேனாதீர, வார இறுதியில் சுற்றுலா செல்ல முடியுமா என்று விசாரித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பொதுமக்களிடமிருந்து சில தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் தெரிவித்தார்.
நாட்டில் இன்னும் அபாயகரமான நிலைமை நிலவுவதால், "இது சுற்றுலா செல்ல வேண்டிய நேரம் அல்ல... நாம் ஆபத்தான நிலையில் இருக்கிறோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.


