வேண்டிய 2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை உரிய நேரத்தில் இலங்கை மின்சார சபைக்கு செலுத்தாததன் மூலம், இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பொன்றை வழங்குமாறு கோரி சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (11) அனுமதி வழங்கியது.
குறித்த மனு, சட்டத்தரணி விஜித குமாரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அதன் பிரதிவாதிகளாக இலங்கை மின்சார சபை உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டிருந்தனர்.
இந்த மனு பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி வீரகொட, நாமல் ராஜபக்ஷவின் திருமண விழாவிற்காக வழங்கப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை உரிய நேரத்தில் இலங்கை மின்சார சபைக்கு செலுத்தத் தவறியமை தொடர்பில் மனுதாரர் மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்துக் குறிப்பிட்டார்.
குறித்த மின் கட்டணம் தற்போது செலுத்தப்பட்டுவிட்டதால், குறித்த செயலினால் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்திடம் இருந்து ஒரு பிரகடனத்தை மாத்திரமே இந்த வழக்கின் மூலம் எதிர்பார்ப்பதாக அந்த சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டார்.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, குறித்த மின் கட்டணம் தற்போது முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டனர்.
இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது.
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் திருமண விழாவின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக 2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியிருந்த போதிலும், அந்த மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என மனுதாரர் மேலும் கூறியுள்ளார்.
அதன் பின்னர், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, குறித்த மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாதாரண பொதுமக்களின் சிறிய பெறுமதியுடைய மின் கட்டணங்களைக் கூட உரிய நேரத்தில் செலுத்தவில்லை எனக் குற்றம் சுமத்தி இலங்கை மின்சார சபை மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை சுட்டிக்காட்டிய மனுதாரர், இவ்வளவு பெரிய மின் கட்டணத்தை உரிய நேரத்தில் அறவிடுவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்காமை ஒரு பாரதூரமான தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் இந்த அசாதாரணமான செயற்பாட்டின் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பொன்றை வழங்குமாறு கோரியே அந்த சட்டத்தரணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.


