கொழும்பு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரு குறுகிய சந்திப்பு இடம்பெற்றது.
விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி இராஜதந்திர உத்தியோகபூர்வ சந்திப்பான இது, அவர் இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு சற்று முன்னர் இடம்பெற்றது.
இதன்போது, தற்போதைய நிலைவரம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த வருகைக்காக சீனத் தூதுவர் குய் சென்ஹாங்கிற்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, "இராஜதந்திர ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் எமக்கிடையே நிலவும் நீண்டகால நட்பை மகிழ்ச்சியுடன் நினைவுகூருகிறேன்" எனக் குறிப்பிட்டார்.
"தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்"
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை விஜேராம இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குப் புறப்பட்டார்.
கொழும்பு 07 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "எம்மை போகச் சொன்னார்கள், நாங்கள் போகிறோம்" என்றார். தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
'புலம்பெயர் சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளனர்'
இல்லத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு சுமார் ஒரு வார காலம் ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
"நாங்கள் ஒரு வாரத்தில் வீட்டை ஒப்படைப்போம். இருப்புப் பட்டியல் (inventory) அனைத்தையும் பூர்த்தி செய்த பின்னர். ஐயா இன்று உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலைக்குச் செல்கிறார்," என ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சட்டத்தரணி மனோஜ் கமகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்:
"நாளையிலிருந்து இந்த நாடு சுபீட்சமாக மாறும் என்று நினைக்கிறேன். நாளையிலிருந்து அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் செலவுகளைக் குறைத்து மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும், பெற்றோல் விலையைக் குறைக்கும், தேங்காய் விலையைக் குறைக்கும், அரிசி விலையைக் குறைக்கும்... நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் இன்றிலிருந்து தீர்க்கப்படும் என்று நினைக்கிறேன். தேர்தல் வாக்குறுதி இந்த நாட்டு மக்களுக்கு அல்ல, எல்.டி.டி.ஈ. புலம்பெயர் சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இன்று நிறைவேற்றியுள்ளனர்."
மஹிந்தவை வரவேற்க கார்ல்டன் இல்லத்தில் பெருந்திரளான மக்கள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டு, நேற்று (11) பிற்பகல் தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்திற்கு வருகை தந்தார்.
அதிவேக நெடுஞ்சாலை வழியாக வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ, மாலை 5.00 மணியளவில் தங்காலை நகரை வந்தடைந்தார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதியை வரவேற்பதற்கும் காண்பதற்கும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் கார்ல்டன் இல்லத்தின் முன்பாக கூடியிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது உத்தியோகபூர்வ வாகனத்திலிருந்து இல்லத்தின் முன் இறங்கி, மகா சங்கத்தினரையும் மக்களையும் முன்னே கொண்டு கார்ல்டன் இல்லத்திற்குள் பிரவேசித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ தனது கார்ல்டன் இல்லத்திற்குள் நுழைய முடியாத அளவிற்கு மக்கள் அந்த இடத்தில் கூடியிருந்தனர். பின்னர், மகா சங்கத்தினர் ஆசீர்வாத பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினர்.
தங்காலை ரன் கொத்மலு விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய இதா தெமலியே பஞ்ஞாரத்ன தேரர் மற்றும் தகல வஜிரகிரி விகாரையின் விகாராதிபதி மிரிஸ்ஸே தம்மவன்ச தேரர் ஆகியோர் விசேட அனுசாசன உரைகளை நிகழ்த்தினர்.
இந்த சிறிய நிகழ்வில் நன்றியுரை ஆற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, மக்களின் இதயங்களில் வாழும் இந்த நெருக்கமான தலைவரை அவரது தனிப்பட்ட இல்லத்தில் காண்பதற்காக கூடியிருக்கும் இந்த மக்கள் கூட்டம் இதயப்பூர்வமாக வந்த கூட்டம் என்று குறிப்பிட்டார்.


