ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிப்பாராயின் அவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
"அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் குறிப்பிட்ட ஒருவரை முன்வைக்கவில்லை. எந்த நேரத்திலும் சரியான நபரை முன்வைப்போம். எமது கட்சி மொட்டு சின்னத்தில் வேட்பாளரை முன்வைக்கும்."
கேள்வி - ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக மாட்டாரா?
"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் மொட்டு சின்னத்தில் முன்வைக்கப்படுவார். ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி எமது கட்சியின் உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு நடந்தால் நாங்கள் பரிசீலிப்போம்." என்றார்.