எஸ்.ஆர்.லெம்பேட்ர்

பயங்கரவாத தடைச் சட்டம் என்பது
சர்வதேச விதி முறைகளுக்கு மேலான ஒரு கொடிய சட்டம். அந்தச் சட்டத்தின் கீழ் கைதாகி புதிய மெகசின் சிறைச்சாலையில்  15 வருடங்களுக்கு மேலாக உள்ள அரசியல் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.
 
அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 
புதிய மெகசின் சிறைச்சாலையில்  உள்ள அரசியல் கைதிகளை இன்று புதன் கிழமை(19) நேரில் சென்று சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
 
புதிய மெகசின் சிறைச்சாலையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதியாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மொறிஸ் என அழைக்கப்படும்  கிருபாகரன் உள்ளிட்ட அரசியல் கைதிகளை
இன்று(19) புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினேன்.
 
குறித்த அரசியல் கைதிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
 
சுமார் 15 வருடங்களுக்கு மேலாக அவர்கள் சிறைக் கூடங்களில் வாழ்கின்றபோதும் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் அவர்கள் மீது புதிது புதிதாக வழக்குகள் தொடுத்து அவர்களை சிறைச்சாலைக்குள்ளேயே மரணிக்க செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் அரசாங்கம்  செயற்பட்டு வருகிறது.
 
பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சர்வதேச விதி முறைகளுக்கு மேலான ஒரு கொடிய சட்டம்.
 
அவ்வாறான ஒரு சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளபோதும் இன்று வரை குறித்த சட்டம் நீக்கப்படாமல் இந்த சட்டத்தின் கீழ் போலியான வழக்குகள் மீண்டும் மீண்டும் தொடரப்பட்டுவரும் நிலை காணப்படுகிறது.
 
கிருபாகரன் மீதும் கடந்த வாரம் புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த 29 வருடங்களுக்கு முன்னர் 19 வயதில் கைது செய்யப்பட்ட நபர்கள் ஆயுட்தண்டனை வழங்கப்பட்டு சுமார் 2 ஆயுள் தண்டனை காலம் முடிவடைந்துள்ள நிலையிலும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
 
எனவே, இவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி