ஓய்வுபெற்ற முப்படை வீரர்களை ரஷ்யா, உக்ரைன்
ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று கூலிப்படையில் அமர்த்தி மனிதக் கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொருவர் தெஹிவளை பகுதியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் சுமார் 120 பேரை ரஷ்யாவுக்கு சுற்றுலா விசாவில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், அதன்படி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் "ஆள் கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினரால்" கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரையில், “ஆள் கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின்” பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .சமரகோன் பண்டாவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்