குறிப்பாக வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 150 அலகுகள் வரை, அதாவது ஓரளவு ஆரோக்கியமற்ற நிலைக்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வுப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எல்லைகளுக்கிடையே நிகழும் காற்று சுழற்சி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்கு முன் நிலவிய வளிமண்டலக் குழப்பத்துடன் வடக்குப் பகுதியிலிருந்து நாட்டின் உட்பகுதிக்குள் காற்று மாசுபடுத்திகள் நுழைந்துள்ளதாகவும் அஜித் குணவர்தன குறிப்பிட்டார்.
இது தொடர்பான தகவல்களை ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது இலங்கையிடம் இருப்பதாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் குறியீட்டு மதிப்பு 150 முதல் 200 வரை உயர்ந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை எதிர்காலத்தில் குறையும் என்று கணிக்க முடியும் என்றும், சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு இந்தச் சூழ்நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அஜித் குணவர்தன தெரிவித்தார்.


