வைத்திருப்பதாகத் தெரிகிறது.
ஏனைய தமிழ் கட்சிகளையும் தென்னிலங்கையில் எதிரணித் தரப்புகளையும் சேர்த்துக் கொண்டு மாகாண சபை தேர்தலை நடத்த செய்வதற்கான அழுத்தப் போராட்டங்களை நடத்துவது பற்றி ஆராயப்பட்டாலும் அதற்கு ஆளும் தரப்பு செவிமடுக்குமா என்பது கேள்விக்குறியே.
தமிழர் பக்கத்திலும் கஜேந்திரகுமார் அணியைச் சேர்ந்த தரப்புகள் இந்தப் போராட்டக் களத்துக்கு வரப்போவதில்லை என்பதும் ஓரளவுக்குத் தெளிவானது. ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டம் முடிவுற்ற நிலையில், இந்தியா உட்பட்ட சர்வதேச தரப்புகளிடம் இவ்விடயத்தை முறையிட்டு, அவற்றின் மூலம் கொழும்பின் மீது செலுத்தக்கூடிய அழுத்தங்கள் கூடப் பயன் தருமா என்பது கேள்விக்குறிதான்.
ஆயினும் முன்னர் இரத்து செய்யப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டங்களை உடனடியாக மீளக் கொண்டு வந்து இந்தத் தேர்தலை நடத்தச் செய்யும் எண்ணம் இந்த அரசுக்குக் கிஞ்சித்தும் இல்லாத போதிலும் இது விடயத்தில் அரசை இறுக்கி, நெருக்கடிக்குள் சிக்க வைக்கும்வாய்ப்பு தமிழரசுக் கட்சிக்கு உள்ளது.
பழைய மாகாண சபை தேர்தல் சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்தச் செய்வதற்கு வழி செய்யும் சட்டமூலத்தை தனிநபர் சட்டம் மூலமாகத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சமர்ப்பித்துள்ளார்.
கடந்த ஜூன் ஆறாம் திகதி அது நாடாளுமன்ற சமர்ப்பிக்கப்பட்டது. தனிநபர் சட்டம் மூலம் என்பதால் ஆறு மாதத்திற்கு அது முன்னெடுக்கப்படாமல் தேங்கி கிடக்கும். விரும்பினால் அச்சமயத்தில் அரசாங்கம் அதனை முன்னெடுக்கலாம். ஆனால் ஆறாம் மாதம் முடியும் போது அதனை இரண்டாவது வாசிப்புக்கு அந்தத் தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பித்தவர் முன் நகர்த்தலாம்.
அதன்படி டிசம்பர் முதல் வாரத்துக்குப் பின்னர் அந்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்திற்கு இரண்டாம் வாசிப்புக்காக ஜனவரியில் முன்நகர்த்த முடியும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதங்கள் தொடர்வதால் அச்சமயத்தில் இதனை முன் நகர்த்த முடியாது.
வருட இறுதி விடுமுறைக்குப் பின்னர் ஜனவரி முதல் வாரத்தில் நாடாளுமன்றம் கூடும் போது அதில் இரண்டாவது வாசிப்புக்கு இந்தச் சட்டமூலத்தை முன்நகர்த்துவதற்கான அறிவித்தலை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு டிசம்பர் நடுப்பகுதியில் சாணக்கியன் கொடுப்பாராயின் ஜனவரியில் அது நாடாளுமன்றுக்கு வரும்.
ஆளும்தரப்பினரின் ஆதரவின்றி அந்தச் சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது என்றாலும், அத்தகைய சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு வந்தால், இப்படி காலத்தை இழுத்தடிக்காமல் அதற்கு ஒரு பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு - கட்டாயம் - நெருக்குவாரம் - ஆளும் கட்சிக்கு வரும்.
அது மாத்திரமல்ல, அந்தச் சட்டமூலத்தின் மூலம் உடனடியாக மார்ச், எப்ரல் மாதங்களிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு கிட்டிய வாய்ப்பை, அதற்கு ஒத்துழைக்காதமை மூலம் அரசு தரப்புப் போட்டு அடித்தது என்ற குற்றச்சாட்டையும் அரசின் மீது நேரடியாகச் சுமத்த முடியும்.
ஆக, சாணக்கியன் சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலத்தை ஜனவரி முதல் வாரத்தில் இரண்டாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் நகர்த்துவதன் மூலம், அரசுக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த முடியும்.
இதே சமயம், நாடாளுமன்றுக்கு அடுத்த மட்டத்தில் மாகாண ரீதியான அரசியல் பரவலாக்கலுக்கு மாகாண சபைகள் உள்ளன. அதற்கு அடுத்த மட்டத்தில் இருப்பது உள்ளூராட்சி சபைகள். எதிரணிகள் அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் உள்ளூராட்சி சபைகள் எல்லாவற்றிலும் மாகாண சபைத் தேர்தலை விரைந்து, இனியும் தாமதம் இன்றி, நடத்துமாறு கோரும் தீர்மானங்களை அந்த அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் நிறைவேற்றுவதன் மூலம் அரசுக்கு நெருக்கடியை அதிகரிக்கச் செய்யலாம் என்ற ஒரு திட்டமும் இருப்பதாகத் தெரிகிறது.
ஆயினும்,அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய எந்தத் திட்டமும் மக்கள் பங்களிப்போடும் முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே அதற்கு பயனும் பிரயோசனமும் கிட்டும் என்பதை தமிழரசு உட்பட கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
(மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனால் காலை முரசு பத்திரிகைக்கு எழுதப்பட்ட இரகசியம்-பரகசியம் பத்தி)


