வடக்கில் ஆரம்பமான யுத்தம் நிறைவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ் இளைஞர்கள் அரச பாதுகாப்புப்

படையினரால் துரத்தப்படுவதால் அவர்களது பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், அரச ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்களை,  பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு (CTID) அழைப்புக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாக, மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆறு வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருக்கும் தமது மகனை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டதையடுத்து தாம் அச்சமடைந்துள்ளதாக, வவுனியா - ஓமந்தை பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர், ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வசிக்கும், வவுனியா - ஓமந்தை பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் ரதீபன் (வயது 32) என்பவரை, குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு, கடந்த வருடம் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் திகதியன்று, சிங்கள மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை பொலிஸார் கையளித்ததாக மாகாண செய்தியாளர்களிடம் தெரிவித்த இளைஞனின் பெற்றோர், அதில் எழுதப்பட்டவை தமக்கு புரியவில்லை என்றும் அதனால், அதுபற்றி தாம் பொருட்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம் பொலிஸார் தமது வீட்டிற்கு வந்து, மகனைப் பற்றி விசாரித்ததாகக் கூறிய பெற்றோர்கள், தமது பிள்ளை 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் மாகாண செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.

பல வருடங்களாக வெளிநாட்டில் இருக்கும் தமது பிள்ளையின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக தயக்கமாக இருப்பதாகவும், மாகாண செய்தியாளர்களிடம் அந்தப் பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பதினாறு வருடங்களாக வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு இராணுவத்தினர் சென்றுள்ளதாகவும் இதனால், அவரது உறவினர்களும் அச்சமடைந்துள்ளதாகவும், மன்னார் மாவட்ட செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த உயிர் மாறன் எனப்படும் சகாயநாதன் சந்தியப்பு என்பவர், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட நிலையில், அதிலிருந்து விலகி, 2008ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வசித்து வருவதாக, மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சகாயநாதன் சந்தியப்பு, இராணுவத்தில் இருந்து புனர்வாழ்வு பெறாதவர் என்பதை வலியுறுத்தி, அண்மையில் இவரது வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினர், அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டியதால் அவரது உறவினர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதித்துறை நடைமுறையின்றி சிறைத்தண்டனையாக மனித உரிமைகள் துறையினால் கருதப்படும், இராணுவ ஆட்சியின் கீழ் நடத்தப்பட்ட அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முகாம்களில், பாலியல் வன்முறை உள்ளிட்ட சித்திரவதைகள் பற்றிய நம்பகuமான சான்றுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஷஇதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினருமான அரவிந்தன் எனப்படும் செல்வநாயகம் ஆனந்தவர்ணனை, பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் (CTID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவரது முகநூல் கணக்கு தொடர்பான விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக, மார்ச் 12ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மார்ச் 9ஆம் திகதி அவருக்கு அறிவிக்கப்பட்டதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் வவுனியாக் கிளையின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.ஏ.யு.எஸ்.கே. ஹேவாவசம் கையொப்பமிட்ட கடிதம் மூலம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினம் தனது கடமையின் பிரகாரம் விசாரணையில் பங்கேற்க முடியாது என சி.டி.ஐ.டிக்கு தெரிவித்த செல்வநாயகம் ஆனந்தவர்ணன், அதற்கு வேறு திகதியை கோரியுள்ள நிலையில், இதுவரை தான் விசாரணைக்கு செல்லவில்லை என மாகாண செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட ஊடகப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் திருச்செல்வம் திவாகரும் மார்ச் 15ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிற்கு (CTID) அழைப்பாணைக்கான காரணங்களை தெரிவிக்காமல் அழைக்கப்பட்டிருந்தார்.

சுதந்திர ஊடகவியலாளரான திருச்செல்வம் திவாகரும், முல்லைத்தீவு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிற்குச் சென்று அங்குள்ள நிலைய உயரதிகாரியிடம் தம்மை ஏன் கொழும்பிற்கு வரவழைத்தார்கள் என வினவியபோதும், அதற்கான காரணத்தை அவர்கள் அறிவிக்கவில்லை.

திருச்செல்வம் திவாகர் கடந்த மார்ச் 15ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிற்குச் சென்று வாக்குமூலம் வழங்கியதாகவும், இது தொடர்பில் அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி