தற்போது தீவிரப் பிரச்சினையாக உள்ள மனித-யானை மோதலைத் தீர்ப்பதற்கான பல முன்மொழிவுகளை அவர் முன்வைத்திருப்பதைக் காண முடிந்தது.
எவ்வாறாயினும், பெரும்பாலான விலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த முன்மொழிவுகளில் நிலையான தன்மை இல்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர். இவை கடந்த காலத்தில் மனித-யானை மோதல் காரணமாக சமூகத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் ஆக்கபூர்வமான முயற்சி செய்கிறது என்பதைக் காட்டுவது மட்டுமே என்று அவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, இந்த முன்மொழிவுகள் குறித்து விலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பதையும் காண முடிகிறது.
பண்டைய வழிகாட்டுதல்
தற்போதைய அரசியல் சூழலில் யானைகள் தொடர்பான மனப்பான்மை இவ்வாறிருந்தாலும், நாம் கடந்த காலத்தைப் பார்க்கும்போது, உலகளாவிய அரசியல் இது குறித்துக் கொண்டிருந்த ஆக்கபூர்வமான அணுகுமுறையை நன்கு புரிந்துகொள்ள முடியும். கி.மு. நான்காம் நூற்றாண்டில், இந்தியத் தத்துவஞானி, பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரி கௌடில்யர் (சாணக்கியர் அல்லது விஷ்ணுகுப்தர் என்றும் அழைக்கப்படுகிறார்) அர்த்தசாஸ்திரத்தை எழுதினார். இது இதுவரை எழுதப்பட்ட அரசாட்சி பற்றிய மிகவும் சிக்கலான நூல்களில் ஒன்றாகும்.
முக்கியமாகப் பொருளாதாரம், சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் பற்றிய ஆய்வுக் கட்டுரையாக இருந்தாலும், அதில் யானைகள், அவற்றின் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் நலன் குறித்துப் பல விரிவான பத்திகள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். அக்காலத்தில் யானைகள் குறித்து இவ்வளவு பெரிய அளவு இந்நூலில் சேர்க்கப்பட்டதற்குக் காரணம், இன்று இருப்பது போன்று பாரிய இயந்திரங்கள் இல்லாத அந்தக் காலத்தில், யானைகளைத் தவிர இதுபோன்ற பணிகளுக்குப் பயன்படுத்த வேறு மாற்று வழிகள் இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. இத்தகைய ஒரு விடயம் அரசாட்சி பற்றிய நூலில் சேர்க்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், யானைகளைப் பாதுகாத்தல், வாழ்விட மேலாண்மை மற்றும் நிர்வாக ஒழுக்கம் பற்றிய கௌடில்யரின் கருத்துக்கள் பல நவீன அரசாங்கங்களின் நடைமுறைகளையும் விஞ்சி நிற்பது ஆச்சரியமளிக்கிறது.
பண்டைய மாதிரிக்கும் இலங்கையின் தற்போதைய சிரமத்திற்கும் இடையிலான முரண்பாடு குறிப்பிடத்தக்கது மற்றும் வழிகாட்டுதலையும் வழங்குகிறது.
யானைகள்: அரசின் தூண்கள்
அர்த்தசாஸ்திரத்தில், யானைகள் ஒரு தொந்தரவாகவோ அல்லது செல்வத்தை வீணடிக்கும் ஒரு சொத்தாகவோ கருதப்படவில்லை, மாறாக அரசின் தூண்களாகக் கருதப்பட்டன. கௌடில்யர் அவற்றைத் தேசிய அதிகாரத்தின் அத்தியாவசியச் சொத்துக்களாக, அதாவது இராணுவத்தின் முதுகெலும்பாகவும், அரச கௌரவத்தின் அடையாளமாகவும் கருதினார். “யானைகள் வாழும் காடுகளை வன அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும்,” என்றும், யானையைக் கொலையிடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் எழுதினார். இது விலங்குகள் மீது இரக்கம் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட வேண்டுகோள் அல்ல; இது ஒரு பகுத்தறிவுள்ள கொள்கையாக இருந்தது. பொருளாதாரத்திற்கும் இராணுவ பலத்திற்கும் யானைகள் அத்தியாவசியமானவை என்பதை கௌடில்யர் புரிந்துகொண்டார். அவற்றைப் பாதுகாப்பது என்பது ராஜ்யத்தின் செழிப்பையும் பாதுகாப்பையும் பாதுகாப்பதாகும்.
இன்று, அரசாட்சி அத்தகைய கொள்கையிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளது என்பதை நாம் காணலாம். நவீன இலங்கையில், யானைகள் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் வாழ்விடங்கள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் தற்போதைய திட்டத்தின் மையமான மின்சார வேலிகள், மோசமான பராமரிப்பு அல்லது தவறான நிர்வாகம் காரணமாக பெரும்பாலும் தோல்வியடைகின்றன. இதற்கு மாறாக, பண்டைய மௌரியப் பேரரசு அத்தகைய அலட்சியத்தை அரசுக்கு எதிரான குற்றமாகக் கருதியது.
பண்டைய காலத்திய விரிவான மேலாண்மை
கௌடில்யரின் நிர்வாகத்தில் கஜாத்யாட்சா அல்லது யானைகளின் கண்காணிப்பாளர் ஒருவர் இருந்தார், அவர் யானை மேலாண்மையின் ஒவ்வொரு அம்சத்தையும் மேற்பார்வையிட்டார். யானைகள் வாழும் காடுகளைப் பராமரித்தல், இனப்பெருக்கத் திட்டங்கள், சுகாதாரப் பதிவுகள், மற்றும் யானை பயிற்சியாளர்கள் மற்றும் பாகன்களின் நலன் ஆகியவை அவரது பொறுப்புகளில் அடங்கும். ஒவ்வொரு யானையும் ஆவணப்படுத்தப்பட்டது, அதன் வயது, அளவு, பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விரிவான பதிவுகள் வைக்கப்பட்டன. நவீன வார்த்தைகளில் சொல்வதானால், இது கணினிகள் அல்லது காகிதப் பதிவுகள் கூடப் பயன்படுத்தப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த வனவிலங்கு மேலாண்மை தரவுத்தளத்தின் பண்டைய வடிவம் ஆகும். நவீன தொழில்நுட்பம் இருந்தபோதிலும், இலங்கை இன்னும் அத்தகைய ஒருங்கிணைந்த மற்றும் வெளிப்படையான அமைப்பை அடையவில்லை.
வாழ்விடப் பாதுகாப்பில் முக்கியத்துவம்
அர்த்தசாஸ்திரத்தின் மிகவும் தொலைநோக்குள்ள பகுதிகளில் ஒன்று யானைகளின் வாழ்விடங்களின் பாதுகாப்பை வலியுறுத்துவதாகும். யானைகள் வாழும் காடுகளைப் பாதுகாத்து பராமரிக்குமாறும், அவற்றில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீராதாரங்களைப் பராமரிக்குமாறும், அத்துமீறுபவர்கள் அந்தக் காணிகளுக்குள் நுழைவதோ அல்லது அவற்றைச் சுரண்டுவதோ கூடாது என்றும் கௌடில்யர் கட்டளையிட்டார். யானை வழித்தடங்கள் மற்றும் வனப் பாதுகாப்புப் பகுதிகளை அழிப்பது மோதல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் தற்போதைய பாதுகாப்பு முயற்சிகளுக்கு இந்த கோட்பாடுகளை ஒரு அடிப்படையாகப் பயன்படுத்தலாம். இலங்கையும், யானைகள் வாழும் பிற நாடுகளும் "யானை-மனித சகவாழ்வு" பற்றிப் பேசினாலும், கௌடில்யர் மிக நீண்ட காலத்திற்கு முன்பே பரிந்துரைத்த வகையான ஒழுக்கமான சுற்றுச்சூழல் நிர்வாகம் இன்று அரிதாகவே காணப்படுகிறது.
விலங்கு நலன் குறித்த விஞ்ஞானப்பூர்வமான கவனம்
யானைகளின் நடத்தை மற்றும் ஆரோக்கியம் குறித்த கௌடில்யரின் விஞ்ஞானப்பூர்வமான புரிதலும் குறிப்பிடத்தக்கதாகும். அவற்றின் பருவகால மனநிலைகள், குறிப்பாக மதம் பிடித்த ஆண் யானைகளின் அபாயங்கள், அவற்றின் உணவுத் தேவைகள், மற்றும் மூலிகை மருத்துவத்தைப் பயன்படுத்தி காயங்கள் மற்றும் நோய்களுக்குச் சிகிச்சையளிப்பது கூட அவர் விவரித்தார். யானைகளுக்கு அரிசி, பார்லி, கரும்பு மற்றும் வன உணவுகள் வழங்கவும், தினமும் குளிப்பாட்டவும், போதுமான ஓய்வு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. யானைகளின் நலன் குறித்த இந்த நுணுக்கமான கவனம் அரச கொள்கையில் வேரூன்றி இருந்தது. நவீன உலகின் பல பகுதிகளில், குறிப்பாகத் தெற்காசியாவில் உள்ள யானை முகாம்கள் முதல் ஆப்பிரிக்காவில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் வரை, அத்தகைய நிலையான கவனிப்பை உறுதிப்படுத்துவது இன்னும் கடினமாக உள்ளது.
சட்டத்தின் மூலம் பாதுகாப்பு
அர்த்தசாஸ்திரத்தில், யானைகள் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சொத்துக்களாகக் கருதப்பட்டன. யானை உரிமையாளர்கள் மீதான வரிகள் விதிக்கப்பட்டன, மேலும் யானைகளை வாடகைக்கு விடும்போது அவற்றின் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. யானைக்குக் காயப்படுத்திய அல்லது கொன்ற எவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு மாறாக, தற்கால இலங்கையில், விஷம் வைத்தல், மின்சாரம் தாக்கி இறத்தல் அல்லது சட்டவிரோதமாகச் சுட்டுக் கொல்லப்படுதல் போன்ற காரணங்களால் ஏற்படும் யானை மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டுத் தண்டிக்கப்படுவது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. பலர் பல்வேறு செல்வாக்குகளைப் பயன்படுத்திச் சட்டத்திலிருந்து தப்பிவிடுகின்றனர். யானைகள் உட்பட வனவிலங்குகள் தேசியச் செல்வத்தின் ஒரு பகுதி என்றும், அதை இழப்பது அரசுக்குச் செல்வ இழப்பு என்றும் இந்த பண்டைய நூல் அங்கீகரித்திருந்தது.
பண்டைய நடைமுறை மற்றும் காலத்தால் அழியாத கொள்கை
கௌடில்யரின் தர்க்கம் அவரது காலத்தின் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பண்டைய உலகில், யானைகள் நாகரிகத்தின் இயந்திரங்களாக இருந்தன. போர், விவசாயம், மரம் வெட்டுதல் மற்றும் கட்டுமானப் பணிகளில் அவற்றின் உதவி தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டது. இயந்திரங்கள் இல்லாத சமூகத்தின் இருப்பு அவற்றின் மீதே தங்கியிருந்தது. எனவே, அவற்றின் நலன் மற்றும் மேலாண்மையை அவர் வலியுறுத்தியது பகுத்தறிவுடையது. ஆயினும், கௌடில்யரின் சிந்தனை வெறுமனே பயன்பாட்டைத் தாண்டியது. அவரது அமைப்பு, மனிதர்களும் விலங்குகளும் ஒரு பரந்த இயற்கை ஒழுங்கிற்குள் பரஸ்பர சார்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற விழிப்புணர்வைப் பிரதிபலித்தது.
இன்று, பல மனிதத் தொழில்களில் யானைகளுக்குப் பதிலாக இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஆனால் அவ்வாறு இருந்தும், இந்த இராட்சதர்களுக்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளை ஒதுக்கி வைக்க முடியாது. செழிப்பு வாழ்க்கைக்கான மரியாதையின் மீது கட்டமைக்கப்பட வேண்டும் என்ற கௌடில்யரின் ஆட்சியில் பொதிந்திருந்த நெறிமுறைக் கோட்பாடு காலத்தால் அழியாதது. கௌடில்யர் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால், அவருக்குத் தனது இராணுவத்திற்கோ அல்லது விவசாயத்திற்கோ யானைகள் தேவைப்பட்டிருக்காது. ஆனால் அவர் நிச்சயமாக அவற்றின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார மதிப்பைப் புரிந்துகொண்டிருப்பார். அவர் அர்த்தசாஸ்திரத்தில் பல்லுயிர் பாதுகாத்தல், நிலையான வளர்ச்சியை நிர்வகித்தல் மற்றும் அனைத்து உணர்வுள்ள உயிரினங்களுக்கும் மனிதநேயமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்தல் பற்றிய புதிய அத்தியாயங்களை எழுதியிருப்பார்.
நவீன ஆட்சியாளர்களுக்கான பாடம்
ஒரு நவீன ஆட்சியாளருக்குக் கௌடில்யர் இந்த வார்த்தைகளால் அறிவுரை கூறுவார் என்று ஒருவர் நினைக்கலாம்: “யானைகள் ஒரு காலத்தில் கடினமாக உழைத்த இடத்தில், இப்போது இயந்திரங்கள் சேவை செய்யலாம். ஆனால் ராஜாவின் கடமை மாறவில்லை. காடு அழிந்து, யானைகள் அழியும் போது, நாடும் வீழ்ச்சியடையும். மக்களின் செல்வத்தை மட்டுமல்ல, பூமியின் சுவாசத்தையும் பாதுகாக்கவும்."
இது தற்போதைய அரசியல்வாதிகள் பாடமாகக் கொள்ள வேண்டிய விடயமாகும்.
பல அர்த்தங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் அவரது தத்துவம் இன்றும் நமக்குக் கற்பிக்கும் விடயங்களின் சாராம்சம் உள்ளது. கௌடில்யர் போன்ற சிந்தனையாளர்களின் வழிகாட்டுதலுடன், பண்டைய இந்தியா நடைமுறையையும் இரக்கத்தையும் கலக்க முடிந்தது. பாதுகாப்பு என்பது ஒரு தனிப்பட்ட சித்தாந்தமாக இருக்கவில்லை, அது அரசாட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. அது பகுத்தறிவுடையது, கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் கடமையில் வேரூன்றியது.
இலங்கையின் தற்போதைய சவாலும் அதே உணர்வைக் கோருகிறது. ஜனாதிபதியின் மின்சார வேலிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் இழப்பீடுகளுக்கான அண்மைய ஏற்பாடுகள் முக்கியமான முதல் படிகளாகும், ஆனால் அர்த்தசாஸ்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எதிர்பார்த்த ஆழமான நிர்வாக ஒழுக்கம் மற்றும் சுற்றுச்சூழல் தொலைநோக்கு இல்லாமல் அவை வெற்றிபெற முடியாது. உண்மையான பாதுகாப்பு என்பது மரணங்களைத் தடுப்பது மட்டுமல்ல; அது சகவாழ்வு நீடிக்கக்கூடிய, நிலையான மற்றும் சட்டபூர்வமான ஒரு அமைப்பை உருவாக்குவதாகும்.
இயற்கையின் தாளத்தை மதிக்கும் போது நாகரிகம் செழிக்கும் என்பதை கௌடில்யரின் ஞானம் நமக்கு நினைவூட்டுகிறது. யானைகள் ஒரு காலத்தில் மன்னர்களின் படைகளுக்கு முக்கியத்துவம் அளித்தன; இன்று அவற்றின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்கான கடமையும் பொறுப்பும் நம்மிடம் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான அர்த்தசாஸ்திரம் இந்நிகழ்ச்சியில் நமக்கு நினைவூட்டுவது இதுதான்.
(குறிப்பு | நிரஞ்ஜன் சாமிந்த கருணாதிலக)


