Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

'மாவீரர் துயிலும் இல்லம்' உருவான வரலாறு தெரியுமா?

T

The Leader Desk

நவம்பர் 9, 2025 • 4:10 AM

'மாவீரர் துயிலும் இல்லம்' உருவான வரலாறு தெரியுமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பேரினவாதம் மேலாண்மை வெறிப் போக்கோடு கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதுதான் இந்தத் தீவின் துன்பியல் வரலாறு.
  • இந்திய அமைதி காக்கும் படை வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்து நிலைகொண்டிருந்த சமயம் அந்தப் படைகளை எதிர்த்து வன்னிக் காடுகளில் நிலைகொண்டபடி போராடி வந்த விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலில் 1989ஆம் ஆண்டு முதல் மாவீரர் தின அனுஷ்டிப்பைப் புலிகள் தொடங்கினார்கள்.
  • ஆனால் அந்தக் காலத்திலோ அல்லது 1990ஆம் ஆண்டில் தமிழர் தாயகத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மீள வந்த பின்னரோ உடனடியாக மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்படவில்லை.
  • என் நினைவு சரி என்றால் இது 1990ஆம் ஆண்டு கடைசி மாதங்களாக இருக்கலாம்.
எழுத்து அளவு:

பேரினவாதம் மேலாண்மை வெறிப் போக்கோடு கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதுதான் இந்தத் தீவின் துன்பியல் வரலாறு.

மிக மோசமாக - மிகக் கொடூரமாக - மிகக் குரூரமாக - மிலேச்சத்தனமாக - காட்டுமிராண்டிப் போக்கில் - வெறி கொண்டு முன்னெடுக்கப்பட்டது பேரினவாதம்.

பஞ்சசீலம் போதித்த புத்த பகவானின் பெயரிலேயே இந்த அடாவடித்தனமும் அட்டூழியமும் இலங்கைத் தீவில் அரங்கேறின.

உலக சரித்திரத்தில் மிக மோசமான விலங்கு மனப்பான்மை மிக்க காட்டுமிராண்டித்தனமாகக் கட்டவிழ்ந்தது பல்லாயிரம் போராளிகள் விதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை புல்டோஸர்கள் கொண்டு உழுது, மண்ணோடு ஐக்கியமான அந்த வித்துடல்களை சிதைத்துச் சின்னாபின்னமாக்கி, அவர்களது நினைவாக நடப்பட்ட நடுகற்களை உடைத்து நாசமாக்கி, நிரந்தரத் துயில் கொண்ட போராளிகளை, அவர்களின் துயில் குழப்பி அந்தரிக்க வைத்த பேரினப் பிசாசுக் குணம் அல்லது பேய்த்தனம்.

கொன்றவர்களை மீண்டும் கொன்றொழிக்கும் கொடூரத்தை சைத்தான்கள்கூட செய்யுமா என்பது சந்தேகம்தான். ஆனால் நமது நாட்டில் 'பேரினவாத சைக்கோக்கள்' அதனைச் செய்தன. கௌதம புத்தரின் உயரிய நெறியை - பஞ்சசீலத்தை - பின்பற்றுவதாக கூறிக்கொண்டு ஓர் அநாகரிகக் கும்பல் இந்த நர வேட்டையை நம் மண்ணில் நடத்தியது.

உயிரிழந்தவர்கள் யாராயினும் அவர்களின் பிரேதத்தை எழுந்து நின்று மதித்து கௌரவிப்பதுதான் மனித பண்பு இயல்பு. அந்த அடிப்படை பண்பியல்பே தெரியாத ஓர் இனக்குழுமம் தன்னை நாகரிக மனித இனமாகக் கருதுவது வேடிக்கையானது.

தன்னோடு போரிட்டு உயிரிழந்த தமிழ் மன்னன் எல்லாளனை கௌரவிக்கும் பண்பியல்பைத்தான் - மனித நாகரிகத்தைத் தான் - துட்டகைமுனு கூட தன் சந்ததியரான சிங்களவர்களுக்கு முன்மாதிரியாக - ஒழுங்கு விதியாக - சொல்லிக் கொடுத்தான். ஆனால் அதைக்கூட பின்பற்றுவதற்கு அறிவற்ற ஒரு சமூகம்தான் இதுவரையில் நம் நாட்டில் ஆட்சியை முன்னெடுத்து வந்தது.

அத்தகைய கொடூர ஆட்சியாளர்களுக்கு, அத்தகைய கொடூர நடவடிக்கைகளுக்கு, 'வீடு எரிக்கும் ராஜாவுக்கு கொள்ளி கொடுக்கும் மந்திரிகளாக' இருந்தவர்கள்தான் இப்போது ஆட்சி பீடத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதும் மறைக்கத்தக்கது அல்ல.

ஆயினும், முன்னைய ஆட்சியாளர்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை காட்டுவதற்காக, இந்த நாட்டின் சிறுபான்மை இன மக்கள் இறந்த தம்தமது உறவினர்களுக்கு விளக்கேற்றி நினைவஞ்சலி செலுத்தும் உரிமையை அனுமதிக்கும் அடிப்படை நாகரிகத்தையாவது வெளிப்படுத்த அவர்கள் முனைகிறார்கள். அது வரவேற்கத்தக்கது.

துயிலும் இல்லங்களை புல்டோஸர் கொண்டு சீரழித்த பேரினவாதச் சிங்களம், அவற்றின் மீது இராணுவ முகாம்களை அமைத்து தனது காடைத்தனத்தையும், மிலேச்சத்தனப் போக்கையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. அந்தத் துயிலும் இல்லங்களில் இருந்து ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவதன் மூலமாகவாவது தமிழ் மக்களின் வாக்குகளைத் திரட்ட முடியதா, அதன் மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெற வாய்ப்புக் கிட்டுமா என்ற தந்திரங்களை தேசிய மக்கள் சக்தி இப்போது ஆரம்பித்து இருக்கின்றது.

எது, எப்படியாயினும், தம்மினத்துக்காக தங்களையே தற்கொடையாகத் தந்த உயரிய மாவீரர்களின் வித்துடல்கள் புதைக்கப்பட்ட பரிசுத்த மண்ணை சிங்களப் படைகளின் சப்பாத்து கால்களினின்றும் விடுவிப்பது வரவேற்கத்தக்கது. வெப்பியாரத்தோடு இருக்கும் தமிழினத்துக்கு சற்று ஆறுதல் தரும் நடவடிக்கையாக அது இருக்கும் என்பது நிச்சயம்.

இந்த மாவீரர் துயிலும் இல்லங்களின் தோற்றுவாய் குறித்து நமது புதிய தலைமுறைக்குத் தெரியாமல் இருக்கும் என்பதால் எனக்கு நினைவில் நிற்கும் சில நினைவோட்டங்களை இங்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்திய அமைதி காக்கும் படை வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்து நிலைகொண்டிருந்த சமயம் அந்தப் படைகளை எதிர்த்து வன்னிக் காடுகளில் நிலைகொண்டபடி போராடி வந்த விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலில் 1989ஆம் ஆண்டு முதல் மாவீரர் தின அனுஷ்டிப்பைப் புலிகள் தொடங்கினார்கள்.

ஆனால் அந்தக் காலத்திலோ அல்லது 1990ஆம் ஆண்டில் தமிழர் தாயகத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மீள வந்த பின்னரோ உடனடியாக மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்படவில்லை.

ஆரம்பத்தில் மாவீரர்களின் புகழுடல்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, அவரவர்களது சொந்த இடங்களில் உள்ள மயானங்களில் அவரவரது மத அனுஷ்டானங்கள் படி இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு எரிக்கப்பட்டன அல்லது புதைக்கப்பட்டன.

இந்திய படைகள் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர், புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக ராஜன் (தற்போது லண்டனில் வசிக்கிறார்) நியமனம் பெற்றார். என் நினைவு சரி என்றால் இது 1990ஆம் ஆண்டு கடைசி மாதங்களாக இருக்கலாம். அவர் இந்தியப் படையின் காலத்தில் ஆரம்பத்தில் சென்னையில் சொற்ப காலமும் பின்னர் யாழ். மாவட்டத்துக்குள் இருந்து தலைமறைவுப் போராளியாகவும் செயற்பட்டவர். அந்தச் சமயங்களில் அவரோடு ஒரு செய்தியாளனாக நான் ஊடாடி இருக்கிறேன்.

யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளர் பதவியை ஏற்ற பின்னர், 1991 நடுப்பகுதியில்தான் வீரர்களுக்கென்று தனியான சுடுகாடு ஒன்று அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த முயற்சியை அவர் ஆரம்பித்தார். அப்போதுன் கூட, ஆரம்பத்தில் அதற்கு 'மாவீரர் துயிலும் இல்லம்' என்று பெயரிடப்படவில்லை.

அதுவரை காலமும் மாவீரர்களின் வித்துடல்கள் அவரவர்களது சமய மரபு வழக்கப்படி எரிக்கப்பட்டும் புதைக்கப்பட்டும் வந்தமையால், கோப்பாயில் முதல் முதலாக அமைக்கப்பட்ட மாவீரர்களுக்கான மயானத்தில் வித்துடல்களை எரிப்பதற்கான மேடை ஒன்றும் அமைக்கப்பட்டது. அது பின் நாள்களில் மற்றைய மாவீரர் துயிலும் இல்லங்களிலும் அமைக்கப்பட்டனவாயினும் அங்கு போராளிகள் எரிக்கப்படவில்லை.

கோப்பாயில் மாவீரர்களுக்கான மயானத்தை அமைப்பதற்கு அரச காணி இருக்கின்றது என்பதை அடையாளம் காட்டி, அதை ஒழுங்குப்படுத்திக் கொடுத்தவர் தேவா அண்ணன் என்பவர். அவர் இன்னமும் அரியாலையில் வசிக்கின்றார் என்று நினைக்கிறேன்.

போராளியாக செயற்பட்ட கமல் மாஸ்டர் அந்தச் சமயத்தில் வரைபட கலைஞரான ரவி என்பவரை அரசியல் நிர்வாக பொறுப்பாளரான ராஜனுக்கு அறிமுகப்படுத்த அந்த ரவி மூலமே மாவீரர் துயிலும் இல்லத்துக்கான வடிவமைப்பு முதலில் உருவாக்கப்பட்டது. அந்த ரவி பின்னர் லண்டனுக்கு சென்று அங்கு காலமாகிவிட்டார்  என அறிந்தேன். அவரோடு இந்த விடயத்தில் செயல்பட்ட இன்ஜினியர் காந்தன் அண்ணன் என்பவர் இன்னமும் யாழ். கந்தர் மடத்தில் வசிக்கின்றார் என்று நினைக்கிறேன்.

கோப்பாயில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் மாவீரர் மயானம் அமைப்பதற்காக அந்த இடம் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வரவேற்புப் பெற்ற டியூட்டரியை நடத்திக்கொண்டிருந்த இன்றைய சூழலியலாளர் ஐங்கரநேசன் தமது டியூட்டரி மாணவர்களை இணைத்து 'தேனீக்கள்' என்று ஒரு தொண்டு நிறுவனம் போன்ற கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அந்த அமைப்பின் உறுப்பினர்களே கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை துப்புரவு செய்தார்கள் என்று ஒரு நினைவு எனக்கு உண்டு. முதல் போராளியின் வித்துடல் அவரது சமய முறைப்படி கோப்பாயில் எரிக்கப்பட்டது. புதைக்கப்படவில்லை. தங்களின் பாரம்பரிய சொந்த மயானத்திலிருந்து அந்தப் போராளியின் வித்துடலை கோப்பாயில் மாவீரர்களுக்கு எனப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மயானத்திற்கு எடுத்து வருவதற்கு அந்த மாவீரரின் பெற்றோருக்கு ஆரம்பத்தில் நீண்ட விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டி இருந்தது என்று அறிகிறேன்.

கோப்பாயில் அமைக்கப்பட்ட மாவீரர் மயானம் மற்றும் அங்கு எரிக்கப்பட்ட முதல் போராளியின் இறுதி நிகழ்வு போன்றவற்றை வீடியோ ஒளிப்படக் காட்சியாக பார்த்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தமது யோசனையாக போராளிகளை எரிக்காமல் அவர்களது வித்துடல்களை விதைத்து, தமிழர் மரபுப்படி நடுக்கற்களை நடுவோம் என்று முடிவெடுத்தார். அச்சமயத்தில்தான் 'மாவீரர் துயிலும் இல்லம்' என்று பெயரிடும் முடிவும் எடுக்கப்பட்டதாக நான் அறிந்தேன்.

அதற்கு முன்னர் அந்த விடயம் பற்றிய செய்திகளில் 'மாவீரர் துயிலும் இல்லம்' என்று குறிப்பிடாமல் 'மாவீரர் மயானம்' என்று குறிப்பிட்ட ஞாபகம் எனக்கு உண்டு. மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டதும் மாவீரர் தின நிகழ்வுக்கான மையங்களாக அவை மாறின. ஆரம்பத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களின் முற்பகுதியில் அமைக்கப்படும் வளைவுகள் மாவீரர் தின வாரத்தில் முக்கிய வீதிகள், சந்திகளிலும் அமைக்கப்பட்டன.

யாழ். மாவட்ட அரசியல் நிர்வாகப் பொறுப்பாளராக ராஜன் இருந்த காலத்திலேயே இந்த விடயங்களும் முன்னெடுக்கப்பட்டன. அப்போது மாவட்டத்தில் ஆங்காங்கே பொது மக்களால் அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களுடன் அமைக்கப்படுகின்ற சிறந்த - உணர்வுபூர்வமான - வளைவுகளுக்கு பரிசளிக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. அத்தகைய வளைவுகளை பார்வையிட்டு, அவற்றுக்கான புள்ளிகளைக் கொடுத்து, உரிய தெரிவுகளைச் செய்யும் பணியில் 'தேனீக்கள்' அமைப்பின் நிர்வாகி ஐங்கரநேசனும் ஈடுபட்டிருந்தார் என்ற ஞாபகம் இருக்கின்றது.

இப்போது மாவீரரை நினைவு கூரும் இந்த மாதத்தில் அது பற்றிய பழைய நினைவுகளை எங்கோ ஓரிடத்தில்
பதிய வேண்டும் என்பதற்காக இங்கு பரிமாறினேன். அவ்வளவுதான்.

-மூத்த ஊடகவியலாளர் என். வித்தியாதரன் அவர்களால், காலை முரசு பத்திரிகையில் எழுதப்பட்ட 'இரகசியம் பரகசியம்...' பத்தியே இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'மாவீரர் துயிலும் இல்லம்' உருவான வரலாறு தெரியுமா? | Tamil Leader | We Lead the Nation