எதிராக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
போலியான தகவல்களைப் பரப்புவதாக குற்றம் சாட்டப்படும் நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அச்சட்டத்தின் கீழ் இதுவரை 60இற்கும் அதிகமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கைப் பிரஜைகளுக்கான அவசரகாலச் சட்டம் அடக்குமுறைக்காகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று உறுதியளித்திருந்த போதிலும், இவ்விசாரணைகள் அடக்குமுறைகளுக்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட டிட்வா சூறாவளி இலங்கையைத் தாக்கும் என்று அதிகாரிகளும் அரசாங்கமும் முன்னதாகவே அறிந்திருந்தார்களா, அதனால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தார்களா என்பது குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான நீரோட்ட ஊடகங்களில் மட்டுமல்லாமல் பாராளுமன்றத்திலும்கூட சூடான விவாதங்கள் எழுந்துள்ளன.
சமீபத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் வழக்கறிஞர் சுனில் வட்டகல, 'மக்களின் பாதுகாப்புக்காக குறைவின்றி செயற்படும் ஜனாதிபதி மற்றும் அரசியல் அதிகாரிகளுக்கு' எதிராக இத்தருணத்தில் அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக அவசரகால விதிமுறைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரெட்ரிக் உதயகுமார வூட்லர் கூறுகையில், நாட்டின் நலனைப் பாதுகாப்பதற்காக இந்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த ஏற்பாடுகளும் அதிகாரங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
"இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அதி மேதகு ஜனாதிபதி அவர்கள் அவசரகால நிலையின் ஒழுங்குமுறைகள் மற்றும் அதிகாரங்களை உள்ளடக்கிய அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். குறிப்பாக பொது ஒழுங்கைப் பேணுதல், பொது ஒழுங்கைப் பாதுகாத்தல், மக்களின் அத்தியாவசிய விநியோகங்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றிப் பேணுதல், மற்றும் நாட்டின் நலனைப் பாதுகாத்தல் என்பவற்றுக்காக இந்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த ஏற்பாடுகளும் அதிகாரங்களும் அமுலுக்கு வருகின்றன."
2025 டிசம்பர் 03ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக் கூட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரெட்ரிக் உதய குமார வூட்லர், சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பப்படும் பொய்யான, உறுதிப்படுத்தப்படாத மற்றும் தவறான வதந்திகள் மற்றும் அறிக்கைகள் 57 தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று வெளிப்படுத்தியுள்ளார்.
"கடந்த சில நாட்களில், குறிப்பாக ஸ்ரீலங்கா பொலிஸாரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசேட நடவடிக்கப் பிரிவு ஒன்றின் மூலம் பொய்யான, உறுதிப்படுத்தப்படாத, தவறான வதந்திகள் மற்றும் பொய்யான அறிக்கைகள் சமூகத்தில் பரப்பப்படுவதைக் கண்காணித்துள்ளனர். இத்தருணத்தில், CID இன் கணினிப் பிரிவு அத்தகைய 57 அவதானிப்புகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது."
நவம்பர் 30 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அவசரகாலச் சட்டம் அடக்குமுறைக்காகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இலங்கைப் பிரஜைகளுக்கு உறுதியளித்திருந்தார்.
"இந்த நாட்டின் பிரஜைகளுக்கு நான் ஒரு உறுதிமொழியை வழங்க விரும்புகிறேன். இந்த அவசரகாலச் சட்டம் இந்த அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கும், எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் திறம்பட உதவுமே தவிர, வேறு எந்த அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கும் நாங்கள் இதைப் பயன்படுத்த மாட்டோம்."
ஜனாதிபதி வெளியிட்ட அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகையின் 20 ஆவது பிரிவின் மூலம் குற்றமாகக் கருதப்படும் விடயங்கள் குறித்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரெட்ரிக் உதய குமார வூட்லர் நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவித்துள்ளார்.
"இந்த அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகையின் 20 ஆவது பிரிவின் மூலம், பொதுமக்களைப் பயமுறுத்தக்கூடிய அல்லது குழப்பமடையச் செய்யக்கூடிய எந்தவொரு வதந்தியையும் அல்லது பொய்யான அறிக்கையையும் வாய் வார்த்தையாக, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மூலம், செயற்கை நுண்ணறிவு உட்பட தானியங்கு அமைப்புகள் மூலம், ஏதாவது எழுத்து, இலத்திரனியல், டிஜிட்டல் அல்லது வேறு ஏதாவது ஊடகம் மூலம் பொய்யான அறிக்கையொன்றைத் தொடர்பாடல் செய்தல், வெளியிடுதல், உருவாக்குதல் அல்லது பரப்புதல் குற்றமாகக் கருதப்படுகிறது. இந்த குற்றங்கள் தொடர்பில் கௌரவ நீதவான் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதன் பின்னர் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது."
கொழும்பு மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் வழக்கறிஞர் சுனில் வடகல, ஜனாதிபதி மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறுகளை வெளியிடுபவர்கள் குறிப்பாக வெளிநாடுகளில் வசிப்பவர்களே என்று குறிப்பிட்டிருந்தார்.
"சமூக ஊடகங்கள் வழியாக ஜனாதிபதிக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசியல் அதிகாரிகளுக்கும் எதிராக மிக மோசமான முறையில் ஆதாரமற்ற அவதூறுத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இது மேலும் வளரக்கூடும். இப்போது, வெளிநாடுகளில் வசிக்கும் நபர்கள் சமூக ஊடகங்களில் இதைச் செய்கிறார்கள். இது ஜனாதிபதிக்கும், மற்ற அரசியல் அதிகாரிகளுக்கும் எதிரான தாக்குதல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் சாதாரணமாகிவிடலாம்."
இந்தச் சந்தர்ப்பத்தில், 2025 நவம்பர் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியான 2464/31 இலக்க அதி விசேட வர்த்தமானியில் உள்ள பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 5 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட அவசரகால விதிமுறைகளை 'நேரடியாகக் கையில் எடுக்குமாறு' கொழும்பு மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.
ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்னவும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் வழக்கறிஞர் சுனில் வடகல, இந்தப் வர்த்தமானி அறிவிப்பின் சிறப்பம்சத்தை பிரஜைகளுக்குப் புரிய வைக்குமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு மேலும் வலியுறுத்தினார்.
"இந்த வர்த்தமானிப் பத்திரிகையின் சிறப்பு என்னவென்றால், கைது செய்யப்படுவது சந்தேகநபர் அல்ல. கைது செய்யப்படுவது குற்றவாளி. அதை பிரஜைகளுக்குப் புரிய வையுங்கள்."
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரெட்ரிக் உதய குமார வூட்லர் டிசம்பர் 3 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அனைத்துப் பிரஜைகளுக்கும் தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் பங்களிப்பு, முயற்சி மற்றும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு நினைவுபடுத்தினார்.
"எனவே, இத்தருணத்தில், பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, குறிப்பாக தீங்கிழைக்கும் விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசாங்கமும் அதனுடன் இணைந்த அனைத்துத் தரப்பினரும் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகச் செய்யும் பங்களிப்பு, முயற்சி, மற்றும் முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தலுடன் கேட்டுக் கொள்கிறோம்."
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் 2025 டிசம்பர் 04 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய நிலைமை அறிக்கைகளின்படி, திட்வா சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளது. குறைந்தது 341 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


