அரசாங்கப் பணத்தை வீணடிக்காமல் அந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முறையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டப் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.விஜேபண்டார குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கங்களால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுகள் மற்றும் குழு ஆய்வுகள் தொடர்பில் முதன்மையாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அரசாங்கப் பணத்தைச் செலவழித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் சில பகுதிகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் சட்டப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, அதிகாரப்பகிர்வு கட்டமைப்புகள் உள்ளிட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள பகுதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி புதிய அரசியலமைப்பை தயாரிப்பதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டமாகும் எனவும், இதற்காக நாடு முழுவதிலுமுள்ள பொதுமக்களின் கருத்துக்கள் எடுக்கப்படும் எனவும் சட்டப் பணிப்பாளர் நாயகம் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆய்வுகள் மற்றும் குழு அறிக்கைகளை பரிசீலித்ததன் பின்னர், அமைச்சரவை அது தொடர்பான பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு ஒதுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அது பொதுமக்களுக்கு முன்வைக்கப்பட்டு, கலந்துரையாடலின் பின்னர், தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்புடன் ஏற்றுக்கொள்ளப்படும்.'
2015ஆம் ஆண்டு சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான குழுவொன்று புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்டதுடன், அந்தக் குழு தனது 222 பக்க அறிக்கையை 2016ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தது.
மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட அம்சங்களில், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல், சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்துதல், மாகாண மற்றும் உள்ளூர் அரசாங்க மட்டங்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்குதல் மற்றும் ஒரு சுயாதீனமான மற்றும் திறமையான பொது சேவையை நிறுவுதல் போன்ற திட்டங்கள் அடங்கும். ஆனால் அதன் பிறகு கமிட்டி அறிக்கை குறித்து எதுவும் நடக்கவில்லை.


