இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும்.
2025 - 2026ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீ சுமன சமன் சிலையினை மலை உச்சிக்கைகொண்டு செல்லும் பவனி, நேற்று (03) அதிகாலை பெல்மதுளை கல்பொத்தாவல ராஜமஹா விகாரையிலிருந்து முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வு, ஸ்ரீபாதஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதிண்ண நாயக்க தேரரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.
இதேவேளை, சிவனொளிபாத மலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று ஸ்ரீபாதஸ்தானாதிபதி தெரிவித்துள்ளார்.
சிவனொளிபாத மலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என்றும், அவ்வாறு எந்தவொரு மண்சரிவும் ஏற்படவில்லை என்றும் ஸ்ரீபாதஸ்தனாதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவிக்கின்றார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஸ்ரீபாதஸ்தனாதிபதி தேரர், ஒவ்வொரு வருடமும் அதிக மழை பெய்யும் காலங்களில் சிவனொளிபாதமலை மட்டத்திற்கு கீழே உள்ள மலையில் வளரும் தாவர வகைகள் சரிந்து கீழே விழுவது வழமை என்று கூறினார்.
இது ஒரு இயற்கையான நிகழ்வு என்றும், இந்தச் சம்பவம் ரத்னபுரி வீதியில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சிவனொளிபாதமலை மட்டத்திற்கோ அல்லது சிவனொளிபாத மலைக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தேரர் மேலும் தெரிவித்தார்.
அதிக மழை பெய்யும் காலங்களில் ஸ்ரீபாத மலையில் வளரும் தாவர வகைகள் சரிந்து கீழே விழுவது வழமை என்றும், அவ்வாறான தாவரங்கள் அடங்கிய மண் குவியலொன்று ஹட்டன் மற்றும் இரத்தினபுரி வீதிகளை இணைக்கும் இந்திகட்டு பஹண (Idikatupahana) வீதியில் வீழ்ந்துள்ளதாகவும், அவ்வாறு வீழ்ந்த தாவரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.


