மாறியுள்ளது என உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு (2026) சிறுபோகம் வரை நுகர்வுக்குத் தேவையான உப்பு கையிருப்பு நாட்டில் உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை மத்திய வங்கியின் ராஜகிரியவில் உள்ள "விது பியச"வில் நேற்று (30ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் ரைகம் குழுமத்தின் தலைவர் கலாநிதி ரவி லியனகே, ரைகம் வயம்ப சோல்டன் நிறுவனத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் கனக்க அமரசிங்க உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
நாட்டின் வருடாந்த உப்புத் தேவை 185,000 மெட்ரிக் தொன்கள் எனவும், மாதாந்தத் தேவை 15,000 மெட்ரிக் தொன்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டு உப்புத் தொழிலுக்கு 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகள் சவாலான ஆண்டுகளாக இருந்தன என ரைகம் வயம்ப சோல்டன் நிறுவனத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் கனக்க அமரசிங்க தெரிவித்தார்.
இம்முறை பெரும் போகத்தில் உப்பு அறுவடை வெற்றிகரமாக உள்ளதாகவும், இம்மாதம் நடுப்பகுதி வரை பெரும் போக உப்பு அறுவடை மேற்கொள்ளப்படும் எனவும் சிரேஷ்ட பணிப்பாளர் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றம் காரணமாக மழைவீழ்ச்சி முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், உப்பு உற்பத்தி வலயங்களில் எதிர்பாராத மற்றும் பருவகாலமற்ற மழை பெய்யும் காரணத்தால் உப்பு உற்பத்திக்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதற்குக் காரணம் உப்பு உற்பத்திக்கு தொடர்ச்சியாக 45 நாட்கள் சூரிய ஒளி தேவைப்படுவதே ஆகும் என ரைகம் குழுமத்தின் தலைவர் கலாநிதி ரவி லியனகே தெரிவித்தார்.
இந்த நிலையை எதிர்கொள்ள மிகவும் பொருத்தமான தீர்வு, உப்பு உற்பத்திக்கு ஏற்ற பிற வலயங்களைக் கண்டறிந்து உப்பளங்களை அபிவிருத்தி செய்வதே ஆகும் என அவர் கூறினார்.
இலங்கையில் உப்பு நுகர்வு முறையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும், பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்ட கல் உப்புக்கு பதிலாக தூள் உப்பை (மேசை உப்பு) இல்லத்தரசிகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் எனவும் சிரேஷ்ட பணிப்பாளர் குறிப்பிட்டார்.


