பிரதமர் மகிந்த ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் ஒருவர், மகிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் மூன்றரை கோடி ரூபா பணத்தை ஆட்டையைப் போட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது மன்னிக்க முடியாத குற்றம். நம்பிக்கைத் துரோகம் என சிங்களப் பத்திரிகையொன்றுக்குப் பொங்கிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதற்கான விசாரணைகளைத் துரிதப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், இதுகுறித்து புலன் விசாரணைகளை நடத்த வேண்டாம் என்று மகிந்த ராஜபக்ச பணிப்புரை வழங்கியுள்ளாராம். நீண்ட காலமாக பிரத்தியேக செயலாளராக இருந்த நபரிடமும் பல இரகசியங்கள் இருப்பதால் இவ்வாறு விசாரணைகளை நடத்த வேண்டாம் என்று பணிப்புரை வழங்கியிருக்கலாம் என்று அலரி மாளிகையில் முனுமுனுக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது சம்பளம் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட போது, அந்தப் பணத்தை நீண்ட நாட்களாக சிறிது சிறிதாக வங்கி அட்டையைப் பயன்படுத்தி எடுத்துள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு மூன்றரை கோடி ரூபா களவாடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்ற போதிலும், சுமார் 5 கோடி ரூபா வரை திருடப்பட்டுள்ளதாக வேறு சில செய்தித் தளங்கள் கூறுகின்றன.

நீண்ட நாட்களாக தனக்கான ஊதியத்தை மகிந்த ராஜபக்ச பயன்படுத்தவில்லையாம். அந்த பணம் நீண்ட நாட்களாக குறித்த வங்கிக் கணக்கில் வைப்பில் கிடந்ததாக பிரதமர் அலுவலக அதிகாரியொருவர் ஊடகமொன்றக்குத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த வங்கிக் கணக்கில் இருந்த பணம் முற்றாக களவாடப்பட்டுள்ள தகவல் சில நாட்களுக்கு முன்னரே தெரியவந்துள்ளதாம்.

2015ஆம் ஆண்டு ஆட்சியைப் பறிகொடுத்து, எதிர்க்கட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச, பண்டார என்ற இந்தச் செயலாளரை பொதுவெளியில், முட்டாள் கழுதை என்று திட்டிய சம்பவம் அந்நாட்களில் வைரலாகியிருந்தது.

மகிந்தவுடன் மிகநெருக்கமாக இருந்த குறித்த பண்டார, தற்போது பணி நீக்கப்பட்டுள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்னும் சிந்தித்து வருவதாக தெரியவருகிறது. காரணம், இந்த பண்டாரவைப் பகைத்துக் கொண்டால், மகிந்தவின் வெளிநாட்டுக் கணக்குகள் குறித்தும் வாய்த்திறந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்றும் சிந்திக்கிறார்களாம்.

அதனால், இந்த விவகாரத்திற்கு தண்ணீர் தெளிக்க மகிந்த தரப்பினர் எத்தணித்தாலும், நெடிசன்கள் இந்த விவகாரத்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.

சம்பளத்தை எடுக்காமல், குடும்பத்துடன் எப்படி வாழ்க்கையை நடத்தினார் என்று நான் சிந்திக்கிறேன் என்று சிரேஸ்ட சிங்கள ஊடகவியலாளர் ஒருவர், தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

''மகிந்த ராஜபக்சவின் பணம் இதற்கு முன்னரும் திருடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கோடிக் கணக்கான பணம் களவுபோகும் வரை, தெரியாமல் இருந்தார் என்றால் அவர் வேறொரு உலகத்தில் இருந்திருக்கக் கூடும். திருடப்பட்ட கதை உண்மையென்றால் பண்டாரவிற்கு என்ன நடக்குமோ தெரியாது. சுனாமி நிவாரணம் வழங்கப்பட்ட காலத்திலும், வீட்டு வேலைக்கு இருந்த சந்திரா 4 லட்சம் ரூபா திருடினார் என்று சிரந்தி, குறித்த வங்கி முகாமையாளருக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். சந்திரா என்ற பெண்ணின் கணக்கை முடக்குமாறு உத்தரவிட்டிருந்தார். சந்திரா வங்கிக்குச் சென்றவுடன் பொலிசாரிடம் சிக்கினார். இந்தக் கதை பத்திரிகைளில் வெளியாகும் என்று சுதாரித்துக் கொண்ட மகிந்த, உடனடியாக சந்திராவை விடுவித்துக் கொண்டார். காரணம், பெரும் தொகைப் பணத்தை வீட்டில் வைத்திருக்கிறார் என்று விசாரணைகள் வரலாம் என்ற அச்சத்தில் மகிந்த நகர்வை எடுத்திருந்தார்.'' என்று அந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.

இந்தக் கதையில் உள்ள உண்மை, பொய் குறித்து தெரியாத போதும், அந்த ஊடகவியலாளர் எழுப்பும் கேள்வியில் நியாயம் இருக்கிறது. மகிந்த குடும்பத்தில் யாரும் தொழில் செய்யாத நேரத்தில், குடும்பத் தலைவரான மகிந்த, தனது சம்பளத்தை செலவிடாமல் எப்படி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். இது மிகவும் சீரியசான பிரச்சினை 1994ஆம் ஆண்டுக்கு முன்னர் மகிந்தவின் வாழ்க்கை முறையைப் பார்க்கும்போது, சுனாமி நிவாரணத்தில் ஆட்டையைப் போட்டதும் அனைத்து செயல்திட்டங்களிலும் 10 வீதம், 20 வீதம் ஆட்டையைப்போட்டது, போரை முன்னெடுக்கும் போது அதில் வந்த கமிசன் பணம் எனப் பட்டியல் நீளும் போது, மகிந்தவின் சம்பளம் எள்ளுருண்டைக்கு சமனானனது.

இதனால் தற்போது சிக்கியுள்ள பண்டார வாய்திறந்தால், சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தவிற்கு இருக்கும் மன்னர் என்ற விம்பத்தின் ஆடை அவிழ்ந்துவிடும் என்ற அச்சம் இருக்கிறது.

மகிந்த மன்னரின் வங்கிக் கணக்கை பண்டார முழுமையாக ஆட்டையைப் போட்டாரா, அல்லது மிச்சம் மீது எதுவும் இருக்கிறதா? பண்டார தண்டிக்கப்படுவாரா? தண்டிக்கப்பட்டால், மகிந்த மன்னருக்கு எதிராக வாய்திறப்பாரா என்ற மில்லியன் டொலர் கேள்விகள் தொடர்கின்றன.

விடைகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங் மூலம் இணையுங்கள்

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி