என்ர குஞ்சு என்ர ராசா

என்ர கடவுள் வந்திட்டான்

என்ர அப்பு என்ர ஐயா

எப்பிடியடா இருக்கிறாய்

துரும்பா இளைச்சிட்டுது பிள்ளை

தாடி தலையெல்லாம் நரைச்சிட்டுது

தொடர்ந்து காகம் கத்தேக்கயே

தெரியுமடா நீ வருவாய் எண்டு

 

அடைச்சு வச்சிருந்த நேரம்

அடிச்சவங்களோடா தம்பி

துடைச்சு சுத்திப் போடுறன்

துப்புடா மூண்டு தரம்

 

முந்நூறு நாள் சுமந்த தவமே

முந்தானை பிடிச்சு நடந்த மகவே

கண்ணூறு பட்டிட்டுது

என் கண்ணு சாந்தனுக்கு

 

படலை ஒருநாளும் சாத்திறேல

கடவுள் நீ வருவாய் எண்டு தெரியும்

கொடியில விட்டிட்டு போன உடுப்பு

மடிச்சுப் பக்குவமா வச்சிருக்கிறன்

 

அம்மா எண்டு ஆரும் கூப்பிட்டா

ஆர் சாந்தனோ எண்டு ஓடுவன்

சுகமா இருக்கிறியோ எண்டு

சின்னவனிட்ட அடிக்கடி கேப்பன்

 

உலையில போடுற அரிசி

உனக்கும் சேத்துத்தான்டா

ஊரில இருக்கிற கோயில்

ஒண்டுவிடாம நேத்திதான்டா

 

பிள்ளை வந்த சந்தோசத்தில

கையும் ஓடேல காலும் ஓடேல

நல்லெண்ணை தலைக்கு வைக்கிறன்

அள்ளி நல்லா முழுகுடா தம்பி

 

வல்லையில பிடிச்ச மீன்

வாங்கிவந்து வச்சிட்டு

கொல்லையில சின்னவன்

கோழியெல்லோ உரிக்கிறான்

 

சமைச்சுப்போட்டு பிள்ளைக்கு

நானே கையால ஊட்டிவிடுறன்

களைச்சுப் போய் வந்திருப்பாய்

கொஞ்சநேரம் படடா அம்மா மடியில

 

எப்படியெல்லாம் கொஞ்சியிருப்பாள் அந்தத்தாய் ??

 

இணுவை நித்தியதாஸ்

இந்த ஓவியத்தை வடிவமைத்த

Jeny's Digital மற்றும் இந்த ஓவியம் உருவாக கரு கொடுத்த Kirisanth Senthilnathan இருவருக்கும் நன்றிகள் ❤? See less

— with MaThi Sutha.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி