சட்டக் கல்லூரியில் இரண்டு வருடக் கல்வி அறிவு, நீண்ட காலம் நீதிமன்றச் செய்தியாளன் என்ற அனுபவம் கொண்டவன் நான். அதனால்

சட்டத்துறை தொடர்பான சில விடயங்களை தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்து வைக்கும் பொறுப்பு - கடப்பாடு - எனக்கு இருக்கின்றது.

அந்த வகையில் முக்கிய இரண்டு விடயங்களை இன்று குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது - சட்டத்தரணிகளாக இருந்து கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்கின்றவர்கள் சட்ட - நீதித்துறை விவகாரங்களை ஒட்டி மக்களை முட்டாள்களாக்கும் விதத்தில் தெரிந்து கொண்டு தவறான அரசியல் பிரசாரங்களை செய்யக்கூடாது. அது தப்பு.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் ஒரு சட்டத்தரணி. நேற்று கல்முனையில் 14 ஆவது நாளாகப் போராடும் தமிழ் மக்கள் மத்தியில் போய் நின்று ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்.

''(கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவு விடயம் தொடர்பில்) நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள். அந்த வழக்கினை மீறி கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகம் எனக் கூறி கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. வழக்கினைத் தாக்கல் செய்தவர்கள்(தமிழ் தேசிய கூட்டமைப்பினர்)பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஏன் திருகோணமலையில் நீதிமன்ற அவமதிப்பு என்று வழக்கு தாக்கல் செய்த உங்களுக்கு இங்கு இவ்வாறு வழக்குத் தாக்கல் ஒன்றினை நீதிமன்ற அவமதிப்பு என்று மேற்கொள்ள முடியாதா? முடியும். ஆனால் எங்களது தலைவர்கள் கல்முனை வடக்கை சிங்கள - பௌத்த பேரினவாதத்துடனும் சில அரசியல் தலைவர்களிடமும் விற்றுவிட்டார்கள்.'' - என்று முழங்கியிருக்கின்றார் அவர்.

சுத்த சுத்துமாத்து பேச்சு இது. அரசியல் என்பதற்காக சட்டத்தைத் தம் இஷ்டப்படி வளைத்து சுகாஷ் பேசக்கூடாது.

தமிழரசு கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. கலையரசன் சார்பில் வழக்கு போட்டிருக்கின்றார்கள். சுமந்திரன் முன்னிலையாகி வாதாடுகின்றார். மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கை பொறுப்பேற்றிருக்கின்றது. சில இடையீட்டுத் தரப்பினர் - முஸ்லிம் பிரதிநிதிகள் - நுழைந்துள்ளனர். இடைக்கால தடை உத்தரவு கேட்கும் மனிதாரரின் கோரிக்கை இன்னும் விசாரிக்கப்படவில்லை. விசாரணை இனித்தான் நடக்க வேண்டும்.

நீதிமன்றம் வழக்கை பொறுப்பேற்றுமையைத் தவிர, எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. அப்படி இருக்கையில் என்ன விவகாரத்துக்கு நீதிமன்ற அவதூறு வழக்கு தொடுப்பதாம்? நீதிமன்றத்தின் எந்த உத்தரவை மீறினர் என்று வழக்கு போடுவதாம்? அவற்றின் விவரங்களை மக்கள் விளங்கக் கூடியதாக சுகாஷ் எழுத்தில் தருவார் எனின் நாம் பிரசரிப்போம். அவரின் விதண்டாவாதத்தையும் அம்பலப்படுத்துவோம்.

சட்டத்தரணிகளைக் கொண்ட கட்சிதானே சுகாஷின் அணி, தமிழர்கள் சார்பிலான மேல்நிலை நீதிமன்ற வழக்குகள் கொஞ்சத்தை கையாளும் பொறுப்பை அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு இத்தகைய விதண்டாவாதங்களை மக்கள் முன் வைத்தால் கொஞ்சம் பொருத்தமாக இருக்கும்.

இனி, அடுத்த விடயம். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை வழக்குத் தொடர்பானது. அதைப் பார்க்கலாம்.

அந்த வழக்கையொட்டி சிறீதரன் எம்.பி. சூழ்ச்சி,அது,இது என்றெல்லாம் சலித்துக் கொண்டார். பின்னணி என்ன என்று கொஞ்சம் தேடிப்பார்த்து நோண்டினேன்.

அதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு 'ஃபிளாஷ்- பாக்'கிற்கு போக வேண்டி உள்ளது.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் வழக்குகள் தாக்கலாகி தடை உத்தரவுகள் பெறப்பட்ட அன்று ஒரு செய்தி வெளிவந்தமை வாசகர்களுக்கு நினைவு இருக்கலாம்.

கட்சிக்குத் தடை உத்தரவு விதித்திருக்கும் வழக்குத் தொடர்பாக கட்சிக்காகத்தான் முன்னிலையாகி வாதாடுவார் என்று உடனடியாகவே சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்தார். அது அன்றைய 'மாலை முரசு' இதழிலும் வெளிவந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

ஆனால் திருகோணமலை வழக்கில் சுமந்திரனும் ஓர் எதிராளி என்று குறிப்பிடப்பட்டமையால் அந்த வழக்கில் தமக்காக மட்டுமே சுமந்திரன் முன்னிலையாக முடியும், கட்சிக்காகவல்ல என்பது பின்னர் தெரிய வந்தது.

எனினும் யாழ்ப்பாண வழக்கில் அவர் எதிராளி அல்லர் என்பதால், அதில் அவர் முன்னிலையாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை மறுத்து ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா ஒரு பகிரங்கக் கருத்து வெளிப்பாட்டை முன்வைத்தார்.

''வழக்கில் பல விடயங்களில் சுமந்திரனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். சாட்சியாகவோ, வேறு வழியிலோ நேரடியாக தொடர்புபட்டுள்ளார். ஆகவே அந்த வழக்கில் அவர் ஒரு தரப்பு சார்பாக முன்னிலையாக முடியாது. இது ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரனுக்கு தெரியாதா?'' - என்ற சாரப்பட நையாண்டிப் பாணியில் கருத்து வெளியிட்டிருந்தார் கே.வி.தவராஜா.

நான் சுமந்திரனுடன் தொடர்பு கொண்டு கேட்டேன்.

''ஆம். கே.வி.தவராஜா சொல்வது சரி. வழக்கில் என் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தால் நான் அதில் ஒரு தரப்புக்காக முன்னிலையாகக் கூடாது. முதலில் வழக்கின் விவரம் எனக்கு தெரியவில்லை. அதனால் கட்சிக்காக நான் முன்னிலையாவேன் என்று உங்கள் பத்திரிக்கைக்கு உடனடியாகக் கூறினேன். இப்போது குலநாயகம் வழக்கின் விவரங்களை என் பார்வைக்கு அனுப்பினார். அதன் பிரகாரம் கட்சி சார்பாக நான் முன்னிலையாக முடியாது'' - என்றார் சுமந்திரன்.

இதுதான் அந்த 'ஃபிளாஷ்-பாக்.'

இந்த விடயத்தை வைத்துத்தான் திருகோணமலை வழக்கில், சிறீதரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய இருவருக்குமாக முன்னிலையாகும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜாவுக்கு ஆப்பு வைக்கும் கைங்கரியம் அரங்கேறி இருக்கிறது.

தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு முன்னர் பொதுக்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பில் பல சர்ச்சைகள் இருந்தமை வாசகர்களுக்கு தெரியும். அதில் முக்கியமானது கொழும்புக் கிளை விவகாரம். அதன் தலைவர் இதே ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜாதான்.

அவர் தலைமையில் பொதுக்குழுவுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்ய நடத்தப்பட்ட கொழும்புக் கிளைக் கூட்டம் சட்டப்படியானது அல்ல என்று மூன்று உறுப்பினர்கள் கட்சிக்கு முறைப்பாடு செய்திருந்தனர்.

அவர்களில் ஒருவர் கொழும்பு கிளையின் நீண்ட கால உறுப்பினரான சின்னையா இரத்தினவடிவேல். சட்டத்தரணி கே.வி.தவராஜாவுக்கு எதிராக இவ்விடயத்தை ஒட்டி கட்சிக்கு நீண்ட பல பட்டோலைகளை சமர்ப்பித்தவர்.

அவர்தான் கடந்த தவணையில் தன்னையும் ஒரு தரப்பாக வழக்கில் சேர்க்கும்படி விண்ணப்பித்திருக்கின்றார். அவரின் சமர்ப்பணங்களில் பல இடங்களில் தவராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதங்கள், ஆவணங்கள் அணைக்கப்பட்டுள்ளன.

சின்னையா இரத்தினவடிவேலை ஒரு தரப்பாக நீதிமன்றம் ஏற்கும் சாத்தியங்கள் உண்டு. அல்லது அது பற்றிய விசாரணையை நடத்தும் ஏதுக்களும் தாராளமாக உண்டு.

அப்படியான சூழலில், முன்னர் இந்த வழக்கில் பிற தரப்புகளுக்காக சுமந்திரன் ஏன் முன்னிலையாக முடியாது என்று தவராஜா கூறினாரோ, அதே காரணங்களுக்காக தவராஜாவும் முன்னிலையாக முடியாது என்ற இக்கட்டு வந்துள்ளது.

தவராஜாவின் பெயர் பல இடங்களில் குறிக்கப்பட்ட ஆவணங்களுடன் வழக்குக்குள் இரத்தினவடிவேல் நுழைந்திருக்கின்றமை தவராஜாவை வழக்குக்காக முன்னிலையாவதில் இருந்து தள்ளி வைக்கும் வேலையாக சுட்டப்படக்கூடியது.

வழக்கில் தமது சட்டத்தரணியையே 'அவுட்' ஆக்கும் சூழ்நிலை வந்ததால் சிறீதரன் குழம்புவதில் நியாயம் இருக்கத்தானே செய்யும்?

அதுதான் புதிது புதிதாக உறுப்பினர்கள் வழக்குக்குள் நுழைகின்றார்கள், அதில் சூழ்ச்சி உள்ளது என்று சிறீதரன் கரித்துக் கொட்டியிருக்கின்றார் போலும். அப்படித்தான் நான் நினைக்கிறேன். சரியோ, பிழையோ என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்...!

நன்றி – காலைமுரசு (மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனால் எழுதப்படும் இரகசியம் – பரகசியம் பத்தி)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி