எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை களம் இறக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் இப்போது

தமிழர் அரசியலில் பிரதான பேசுபொருள்.

கடந்த தடவைகள் ஜனாதிபதித் தேர்தல் சமயங்களில் எல்லாம் கருக்கட்டிய இத்தகைய திட்டம், உருப்பெற முன்னரே கருகி விழுந்து விடுவதுதான் வழமையாக இருந்து வந்துள்ளது. இந்த முறையும் அந்த நிலைமை போலவே தோன்றுகின்றது.

சரியோ, பிழையோ இந்த முடிவுக்குத் தமிழர் தரப்பில் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி இணங்கி வராவிட்டால் அந்த முயற்சி படுத்து விடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இத்திட்டத்தை தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் நிராகரித்து விட்டார் என்ற சாரப்பட செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்விடயத்தை ஒட்டி வெளிப்படையாகக் கருத்து கூறக்கூடிய சுகத்தில் - தெளிவில் - சம்பந்தன் இருக்கின்றாரா என்று சில வட்டாரங்கள் நியாயமான கேள்வியை எழுப்பினாலும், அவ்விடயத்தை ஒட்டி சம்பந்தன் வெளியிட்டவை என வெளியாகி உள்ள கருத்துக்கள் சம்பந்தனின் வழமையான நிலைப்பாட்டை ஒட்டியவை என்பதால் அவற்றை அவரது கருத்தாகவே நம்ப வேண்டியுள்ளது.

இதற்கிடையில் - இவ்விடயத்தை ஒட்டி தமிழரசுப் பிரமுகர் சுமந்திரனும் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சி இன்னும் கூடி முடிவு செய்யவில்லை, முடிவு செய்யும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற சாரப்பட சுமந்திரன் கூறினார் என்று ஓரிரண்டு நாள்களுக்கு முன் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதேபோன்ற பேட்டித் தகவல் ஒன்றை தொலைக்காட்சி சேவையொன்றுக்கு, சுமந்திரன் வழங்கியிருக்கின்றார். அது நேற்று ஒளிபரப்பானது.

பொதுத் தமிழ் வேட்பாளர் பற்றிய கேள்வி எழுந்ததும் ''ஏன் சிவாஜிலிங்கத்தை நிறுத்தப் போகின்றீர்களா?'' - என்ற கிண்டலுடன்தான் சுமந்திரனின் பதில் தொடங்கியது.

இன்னும் கட்சி முடிவு செய்யவில்லை. நிலைமை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற பாணியில் பதில் இருந்தாலும், அத்தகைய திட்டத்துக்கு - அதாவது தமிழ்ப் பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் இறக்கும் திட்டத்திற்கு - ஆதரவு அளிக்கும் போக்கு அவரிடம் தென்படவில்லை. அப்படி இறக்கினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை - பாதிப்புகளை - அவர் விவரிக்கின்றமையை நோக்கும் போது, தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டத்திற்கு தமிழரசு ஒத்துவராது என்றே தோன்றுகின்றது.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தமர்வு ஒன்றில் பங்கு பற்றிய தமிழரசுப் பிரமுகர் சிறீதரன் எம்.பியிடமும் கருத்துக்கூற வற்புறுத்தினர்.

சிறீதரனும் பிடி கொடுக்காமல்தான் பேசினார். அப்படி ஒரு திட்டம் எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டால் அப்போது பார்க்கலாம் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. அத்தகைய யோசனையை அவர் எதிர்க்கவில்லை. ஆயினும் வரவேற்கவும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

பொது வேட்பாளரை நிறுத்தும் யோசனைக்குத் தமிழரசு கட்சியின் எந்த மூத்த தலைவரிடம் இருந்தும் இதுவரை தலையசைப்பு வரவில்லை.

அக்கட்சியின் எல்லாத் தலைவர்களுமே இத்திட்டம் - இவ்விடயம் - தொடர்பில் ஒரே ஆவர்த்தனத்தில் வாசிப்பவர்களாகவே தோன்றுகின்றது.

இத்திட்டத்துக்கு தமிழரசின் ஆதரவை பெறுவது புலிப்பால் கறக்கும் வேலையாகத்தான் இருக்கும்...!

நன்றி - காலை முரசு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி