இந்துக் கோயில்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் கேள்விகள் எழுந்திருக்கின்றன. எண்பது கோடி இந்து மக்களை கொண்டிருக்கும்

இந்தியாவுக்கு அருகில் வாழும் ஈழத் தமிழ் இந்து மக்கள் தங்களுடைய தனித்துவமான மத இருப்பு தொடர்பில் அச்சம் வெளியிடும் நிலைமை ஏற்பட்டிருப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல. வெடுக்குநாறிமலை விவகாரம் மீண்டும் இந்துக் கோவில்கள் தொடர்பிலான கரிசனையை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். வடக்கு - கிழக்கைப் பொறுத்தவரையில் இந்து தமிழ் மக்களே பெரும்பான்மையினராவர் ஆனால், அவர்கள் அதிகாரமற்ற மக்களாக இருக்கின்றனர். 

இந்து ஆலயங்கள் தொடர்பான பிரச்னைகள் வெளிக்கொண்டு வரப்படும்போது இந்துத் தலைவர்களும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்துவரும் அரசியல் தலைமைகளும் குறித்த விடயத்தை நிதானமாகவும் தூரநோக்குடனும் கையாள வேண்டும்.

இதனை வடக்கு - கிழக்குக்கான பிரச்னையாக சுருக்குவதை முதலில் கைவிட வேண்டும். இவ்வாறான பிரச்னைகள் ஏற்படுகின்ற போது, இதனை ஓர் இலங்கை தழுவிய பிரச்னையாக அடையாளப்படுத்த வேண்டும். இது தொடர்பில் நாம் முன்னரும் குறிப்பிட்டிருக்கின்றோம். அதாவது, இவ்வாறான பிரச்னைகளின்போது அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து குரல் கொடுக்கும் பிரச்னையாக இதனை மாற்ற வேண்டும்.

அரசாங்கத்தோடு இருக்கும் தமிழ்க் கட்சிகளும் இந்தப் பிரச்சினையில் இணைய வேண்டும். அதேபோன்று, மலையகக் கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் இந்துக்களாக இணைய வேண்டும். வடக்கு - கிழக்கில் இவ்வாறான பிரச்னைகள் இடம்பெறும்போது இதனை ஒரு தமிழ்த் தேசிய விவகாரமாக சுருக்கக்கூடாது.

ஆனால், அவ்வாறான குறுகிய அணுகுமுறையில்தான் இந்த விடயம் இதுவரையில் அணுகப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் வடக்கு - கிழக்கில் செயல்படும் ஆதீனங்கள் இந்து மத ஸ்தாபனங்களின் தலைவர்கள் அனைவரும் இந்த விடயத்தை இலங்கை இந்துக்களின் பிரச்னையாக முன்வைக்க வேண்டும்.

அனைவரின் ஆதரவையும் ஒன்றிணைக்கும்போதுதான் அதிகாரமற்ற தரப்பாக இருக்கும் இந்து மத ஸ்தாபனங்கள் பலமான நிலையில் தங்களின் குரலை முன்வைக்க முடியும். அவ்வாறானதொரு சூழலில்தான் அரசாங்கமும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தும்.

 வடக்கு - கிழக்கில் பௌத்த ஆலயங்கள் தொடர்பான சர்ச்சை அவ்வப்போது எழுகின்றது. ஆனால், கத்தோலிக்க மத ஆலயங்கள் இருக்கின்ற இடத்திலோ அல்லது இஸ்லாமிய மதத் தலங்கள் உள்ள இடங்களின் அடிப்படையிலோ இவ்வாறான சர்ச்சைகள் எழுவதில்லை.

இது தொடர்பில் இந்து மதத் தலைவர்கள் மத்தியில் கவலைகள் காணப்படுகின்றன. வடக்கு - கிழக்கில் எங்கெல்லாம் பாரம் பரிய சிவன் ஆலயங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் பௌத்த ஆலயங்கள் தொடர்பான சர்ச்சைகள் எழுகின்றன.  இது அடிப் படையில் இந்து மதத்துக்கும் பௌத்தத்துக்கும் உள்ள பிணைப்பு தொடர்பானது.

ஆரம்ப காலங்களில், வடக்கு - கிழக்கில் பௌத்தம் தமிழ் மக்களாலும் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. அவ்வாறான இடங்கள் அனைத்தும் தங்களுக்கு சொந்தமானது என்பதிலிருந்தே இவ்வாறான பிரச்னைகள் எழுகின்றன. இந்த விடயங்கள் உரிய வகையில் சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்னையை கையாள முடியாது.

நன்றி - ஈழநாடு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி