'படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்' என்பார்கள். அப்படித்தான் நடந்து கொள்கின்றன இலங்கையின் பௌத்த - சிங்களப் பேரினவாதமும்

அதே போக்கில் ஊறிய அரசாங்கமும்.

நாட்டு மக்களுக்கு உபதேசிப்பதோ புத்தரின் பஞ்சசீலங்கள். ஆனால் நாட்டின் சிறுபான்மையினருக்கு - குறிப்பாக தமிழர்களுக்கு - எதிராகக் கட்டவிழ்த்து விடுவதோ பஞ்சமா பாதகங்கள்.இதுதான்  பேரினவாதத்தின் ஒரே வெறிப் போக்காக இருந்து வருகின்றது.

 இலங்கை தீவில், தமிழர் தேசத்தின் தனித்துவத்தையும், தாயகத்தையும், அதன் இருப்பையும் அழித்தொழித்து, இல்லாமலாக்குவதற்குக் கங்கணம் கட்டி நிற்கும் பேரினவாத அரசும், அதன் கட்டமைப்புகளும் அந்த அடாவடித்தனத்தைத் தமது ஒவ்வொரு செயலிலும் நடவடிக்கையிலும் நிரூபித்து செயல்படுத்தி வருகின்றன.

 தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டிடமான வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி தினமான நேற்று முன்னிரவில் அரங்கேறிய அராஜகமும் அதே பேரினவாத வெறியாட்ட வடிவம்தான்.

மகா சிவராத்திரி தினத்தையொட்டி தமிழ் சைவர்களின் வழிபாட்டு உரிமைகளை பேரினவாதமும், அதை முன்னெடுக்கும் தென்னிலங்கை பௌத்த - சிங்கள பேரினவாத அரசும் நேற்று சூறையாடி இல்லாதொழித்து, மறுத்திருக்கின்றன.

தெற்கில் காவி உடை தரித்த பிக்குகள் புத்தரின் பஞ்சசீல உபதேசம் செய்வதுபோல, நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகா சிவராத்திரியை ஒட்டி நல்லிணக்கம் குறித்து நல்லுபதேசம் செய்கின்றார்.

அதேசமயம் அந்த பிக்குகளின் சகாக்கள் வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் வரலாற்று பாரம்பரிய மத இடங்களை அடாவடித்தனம் பண்ணி, அட்டகாசம் புரிந்து, சூறையாடி, ஆக்கிரமித்து வருகின்றனர்.

அதுபோல ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பொலிஸூம் படைகளும் தம்பாட்டுக்கு அதே வெறியாட்டத்தை முன்னின்று மேற்கொள்கின்றன.

பஞ்சசீலம் உபதேசித்துக் கொண்டு, பஞ்சமா பாதகம் போன்று அடாவடித்தனம் பண்ணுவதுதான் தென்னிலங்கை அதிகார பீடத்தினதும் பௌத்த - சிங்கள பேரினவாதத்தினதும் பரவணிப் பண்பியல்புகள். அதன் ஒரு கொடூர முகத்தையே நாறுகிறது பேரினவாத வெடுக்கு நேற்று மாலை வெடுக்குநாறிமலையில் மீண்டும் ஒரு தடவை நேரில் அவதியோடு அனுபவித்து எதிர்கொண்டோம்.

'அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க, உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால், சிவபெருமானி டம் செய்த பிரார்த்தனையை நினைவு கூருவதாக சிவராத்திரி அமைந்திருக்கிறது'' - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் தாம் விடுத்த சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.

'மனிதர்களிடம் இருக்கும் மமதையையும், அகந்தையையும் அகற்ற உதவும் ஞானத்தைப் பரவச் செய்யும் வகையில் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்” என்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

ஆனால், அவரின் கீழ் இயங்கும் பொலிஸாரும், படையினரும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் காவியுடை தரித்த பேரினவாதிகளும் அன்றைய சிவராத்திரி தினத்தில்தான், புத்தர் கூறிய ஞானத்தைத் தொலைத்து - காற்றில் பறக்கவிட்டு விட்டு - பேரினவாத மமதையும், அகந்தையும் கொண்டு அடாவடி காட்டி யிருக்கின்றார்கள். சிவராத்திரி அனுஷ்டிப்பதற்காக வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்துக்கு வந்த தமிழ் - சைவ பக்தர்கள் மீது வெறியாட்டம் காட்டியிருக்கின்றார்கள்.

'மகா சிவராத்திரி தினத்தை அர்த்த முள்ளதாக்கும் வகையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தி, மமதை, அகங்காரம் இல்லாத நாடாக அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்திற்கான திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்' - என்று கூறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தனது கூற்றுக்கு மாறாக, தனது நாட்டில் கட்டவிழும் பௌத்த - சிங்களப் பேரினவாத மேலாண்மை வெறிப்போக்கைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அதுதான் உண்மை.

மகா சிவராத்திரி தினத்தில் இந்து மக்களினால் ஏற்றப்படும் ஒளியானது, முழு இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிடும் நாட்டின் ஜனாதிபதியினால் பௌத்த - சிங்களப் பேரினவாத தீவிரப் போக்குவெறியாளர்கள் மூட்டும் இனவாதத் தீயின் சுவாலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

 மகா சிவராத்திரி தினத்தில் இந்து மக்களினால் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் ஏற்றப்பட இருந்த ஞான ஒளியை பேரினவாத வெறித் தீ சூறையாடிவிட்டது.

இது ஜனாதிபதிக்குத் தெரியுமோ, புரியுமோ தெரியவில்லை...!

  • நன்றி - முரசு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி