இலங்கை தொடர்பாக இந்திய அணுகுமுறை - இராஜதந்திர ஊடாட்டம் - பெரிதும் மாறிக்கொண்டிருக்கின்றது. அந்தப் புறநிலை

உண்மைகளை புரிந்துகொள்ளாமல், தமிழ் தலைமைகள் ஏதோ பழைய நினைவில் - பகல் கனவில் - உழல்வதாகத் தெரிகின்றது.

இதற்காக இந்தியாவைக் குறை சொல்வதில் பயனில்லை. மாறிவரும் உலகப்போக்குகளுக்கேற்ப தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதும், தனது நலனை வலுப்படுத்திக் கொள்வதும் இறைமையுள்ள ஒரு தேசம் என்ற முறையில் அதன் கடப்பாடு. தவிர்க்க முடியாத பொறுப்பு.

பல்வேறு இனங்களை - பல்வேறு மொழிகளை - பல்வேறு கலாச்சாரங்களை - கொண்ட பல்வகை மாநிலங்களின் கூட்டாட்சியே இந்திய உபகண்டம். தன் ஐக்கியம், தனித்துவம், பாதுகாப்பு, நலன், அபிவிருத்தி, பொருளாதாரம் போன்றவையே அதற்குப் பிரதானம். மற்றெல்லாம் அதற்குப் பின்னரே.

நாற்பது, நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தென்கோடி மூலையில் உள்ள அயல் தேசத்தின் ஒரு சிறுபான்மைக் குழுமமான தமிழர்களின் தனித்துவ உரிமைகளுக்காக குரல் எழுப்பிய நாடு என்பதற்காக, தன் நலனைத் துறந்து, ஈழத் தமிழரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்க முடியாது என்ற யதார்த்த நிலைமை அகன்ற பாரத தேசத்திற்கு.

மாறிவரும் உலகில், மாறிவரும் சர்வதேச ஊடாட்டங்கள், அணுகுமுறைகள், அயலுறவுகள் ஆகியவற்றிற்கேற்ப தனது கொள்கைக் கோட்பாடுகளையும் இந்தியா மாற்றி வருகின்றது. அது அதன் தேவையைப் பொறுத்தது.

அந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், இன்னமும் இந்தியா எங்களைக் கைவிட்டு விடாது என்று இந்தியப் புகழ் பாடிக்கொண்டுமதி இழந்தவர்களாக, ஈழத் தமிழர்களும் அவர்களின் தலைவர்களும் நடப்பதில் அர்த்தமில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விடயம் - - ‘water under the bridge’ என்றாகி விட்டது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கால அரசியல் நிலைமை வேறு. இப்போது மோடி அரசின் அணுகுமுறை, சர்வதேச ஊடாட்டங்கள், அயலுறவுகள் வேறு. பல அம்சங்களில் அவை தலைகீழானவை.

ஒன்றுக்கொன்று முரணானவையும் கூட.'அயல் தேசத்துக்கு முன்னுரிமை' என்ற இந்தியப் பிரதமர் மோடியின் கடந்த பத்து வருட அணுகுமுறை இந்திய தேச நலனில் - அனுபவத்தில் - பல எதிர்பாராத அதிர்ச்சிகளைத் தந்திருப்பது மறுக்க முடியாத உண்மை.

பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் இந்திய உறவைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை. அது அப்பட்டமாகத் தெரியும் விடயம். ஆப்கானிஸ்தான், மியான்மார் போன்றவற்றுடன் மிக சாதகமான நல்லுறவு இருப்பதாகக் கூற முடியாது. பூட்டான், நேபாளம் போன்றவை சிறிய பிரதேசங்கள் என்றாலும் அவற்றுடனான உறவுகளும் சாண் ஏற முழம் சறுக்கும் நிலைமையிலேயே உள்ளன.

தான் 53 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிக் கொடுத்த வங்காள தேசத்துடன் கூட அதற்கான நன்றிய உணர்வுடன் கூடிய உறவை இந்தியா உறுதியாகப்பெறவில்லை. கடல் வழியில் அயல் தேசமான மாலைதீவு பாரதத்துடன் முரண்பட்டுக் கொண்டு மற்றப் பக்கம் போய்விட்டது.

போதாக்குறைக்கு இந்துத்துவா சக்திகளின் ஆட்சியில் இருக்கும் பாரதம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், மாலைதீவு என்று அயலில் பரந்திருக்கும் இஸ்லாமிய நாடுகளின் வைரித்தனத்தையும் எதிர்கொண்டு நிற்கின்றது.

இந்தப் பின்புலத்தில் -சமுத்திர எல்லை கொண்ட அயல் நாடான மாலைதீவு முழுமையாக சீன வலையில் விழுந்துவிட்டது. கடலால் பிரிக்கப்பட்ட மற்ற அயல் நாடான இலங்கை - பாரதத்துடன் மிக நெருக்கமான பக்கத்தில் உள்ள தேசம். மாலைதீவு போல 2,000 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நாடு அல்ல. 20 மைல் தொலைவில் உள்ள பக்கத்து நாடு.

சீனாவின் கடன் பொறியில் சிக்கியிருக்கும் இலங்கையும் அந்த அழுத்தத்தாலும், இயல்பாகவே உள்ள பௌத்த மார்க்க ஈடுபாட்டாலும் சீனா பக்கம் சாய்ந்து விடும் வாய்ப்பு அதிகம் இருப்பதைப் புரிந்து கொண்டுள்ள புதுடெல்லி கொழும்பை மடக்குவதற்கு - வளைத்துப் போடுவதற்கு - எந்த எல்லை வரையும் செல்லவும் தயாராக இருக்கின்றது - ஈழத் தமிழர்களின் நலனைக் கண்டே கொள்ளாமல் கைவிட்டு அசண்டையீனமாக நடப்பது வரையில்.

இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகள் என்று தங்களைப் பெருமையுடன் கூறிக்கொண்டு, இந்தியாவுக்குப் பந்தம் பிடித்துக்கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களைச் சந்திப்பதற்கு புதுடெல்லிக்கு அழைப்பார் எனக் கூறிய மோடி, அதை மறந்து ஐந்து ஆண்டுகளாகிவிட்டன.

இந்திய அமைதிப்படையின் வருகையை ஒரு விடயமாகக் காட்டி, அதற்கு எதிரானதாகத் தமது ஆயுதக் கிளர்ச்சியை நியாயப்படுத்திய ஜே.வி.பிக்கு - சீனச் சார்புக் கட்சிக்கு - இப்போது வெற்றிலை வைத்து, இராஜதந்திர வரவேற்புக் கொடுத்திருக்கும் புதுடில்லியின் இந்த போக்கு, அதைப் பொறுத்தவர போக்கிலித்தனம் அல்ல. அவர்களின் தேச நலன் நோக்கிய இராஜதந்திரம்.

இந்த இராஜதந்திரங்களைப் புரிந்து கொள்ளாமல், இந்தியா உதவும் என்று இன்னும் நம்பிக்கொண்டு, பழைய பல்லவியைப் பாடி மாரடித்துக் கொண்டிருப்பதை விடுத்து, சர்வதேச உறவில் புதிய கதவுகளை தமிழர்களாகிய நாம் தட்ட வேண்டும். புதிய பாதைகளைத் தேடவேண்டும். அதற்கான காலம் வந்து விட்டது.

இந்தியாவிடம் கையேந்தும் நம் தலைவர்களுக்கு இது நன்கு புரியும். ஆனாலும் 'நாவிழந்தோர்' அது பற்றி எதுவும் கூற முடியாது என்பதுதான் அவர்கள் இக்கட்டு.

இலங்கைத் தீவில் உண்மை நண்பன் யார், தோழனாகத் தோளில் கைபோடும் கபட வேடதாரி யார் என்பதைப் பட்டுத் தெளிந்து உணர பாரதத்தை விட்டுவிடுவதே பொருத்தமானது.

-நன்றி - காலைமுரசு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி