மத்திய கிழக்குப் பிரச்சினையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசின் அணுகுமுறை இரட்டை வேட

நாடகம் போன்றிருக்கின்றது.

 'பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும்' போக்குப் போன்றதாக உள்ளது. 'ஊருக்கடி உபதேசம் உனக்கு இல்லையடி…' என்ற பாணியிலும் இலங்கைத் தரப்பு நடந்து கொள்கின்றது.

 காசாவில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் வகைத்தொகையின்றிக் கொன்றொழிக்கப்படுகிறார்கள். இஸ்ரேல் மேற்கொண்டிருக்கும் கொடூரப் பயங்கரவாதத் தாக்குதல்கள் பாலஸ்தீனம் என்ற தேசத்தையே முழுமையாக துவம்சம் செய்யும் இலக்கை - வெறியை - நோக்காகக் கொண்டது என்பது வெளியிடைமலை.

அதைத் தடுக்க - தவிர்க்க - செய்வதற்கு இலங்கை உட்பட எந்த சர்வதேச நாடும் காத்திரமான நடவடிக்கையை எடுக்கவில்லை. வெறும் கண்டன அறிவிப்புகளோடு சர்வதேசங்களின் மனசாட்சியே அடங்கி செத்துவிட்டது என்பது தெளிவு.

இஸ்ரேலின் கொடூர - ஈவிரக்கமற்ற - மிருகத்தனமான - மனிதநேயமே இல்லாத - காட்டுமிராண்டித்தனமான - பயங்கரவாதத் தாக்குதல்களினால் காசாவில் சிக்குண்டு சீரழிந்து தினசரி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு அடிப்படை மற்றும் அத்தியாவசிய விநியோகம் கூட கிடைக்கவில்லை. அவற்றைப் பெற்றுக் கொடுப்பதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையும் உட்பட்ட சர்வதேச சமூகத்தினால் இயலவே இல்லை.

இந்தப் பின்புலத்தில்தான் காசாவுக்கான அடிப்படை விநியோகங்கள் உறுதிப்படுத்தப்படாவிட்டால் செங்கடல் ஊடான இஸ்ரேலுக்கான விநியோகங்களை முடக்கும் விதத்தில் தாக்குதல்களை நடத்து வோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.

 காசாவில் நாள் கணக்கில் ஷெல், பீரங்கி மழைகளைப் பொழிந்தபடி, கண்மூடித்தன ன விமானக் குண்டு வீச்சுகளை நடத்தி, பேரழிவு ஆக்கிரமிப்பை முன்னெடுத்து, ஒரு தேசத்தையே முழுமை யாக இஸ்ரேல் துவம்சம் செய்து கொண்டிருப்பதை 'பயங்கரவாதமாக' அடையாளம் காணாத இலங்கை உட்பட சர்வதேச சமூகம், செங்கடலில் இஸ்ரேலுக்கான விநியோகத்தை முடக்கும் தாக்குதலை பயங்கரவாதமாக அடையாளம் கண்டு, அதை அடக்குவதற்காக அமெரிக்கா தலைமையில் சிலிர்த்தெழுந்திருக்கின்றது.

இலங்கை மக்களின் பெயரில் இந்தப் பெரும் அநியாயத்துக்கு ரணிலின் அரசு துணை போகின்றது. அதுவும் பத்து அரபு நாடுகளின் தூதர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு, காசா மீதான தாக்குதல் பயங்கரவாதத்தை அங்கு பகிரங்கமாக ஒப்புக்கொண்டபடி, செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கைக்கு தனது நாட்டின் கடற்படை துணைபோகும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பது முரண்நகையான செயற்பாடாகும்.

அரபு நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை பேணுவதே இப்போது இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்று தத்துவம் பேசியபடி, பாலஸ்தீன முஸ்லிம் மக்களுக்கு எதிரான அழிப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவது போல செங்கடலைப் பாதுகாக்கும் பணியில் தனது நாட்டுக் கடற்படையை இறக்குகின்றார் இலங்கை ஜனாதிபதி.

எந்த ஒரு நாடும் இன்னொரு தேசத்தை அழிக்க அனுமதிக்கக் கூடாது என்று அரபு நாடுகளின் தூதுவர்களின் முன்னால் தத்துவம் வேறு பேசுகின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

அவரது கட்சி தலைமையிலான அரசுகள்தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் மூலமும், புலிகளுடன் சேர்ந்து விடுத்த ஒஸ்லோ அறிவிப்பு மூலமும் இலங்கை யில் தமிழருக்கு தனியான தேசம் இருப்பதையும், அதற்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கின்றமையையும் சர்வதேச மட்டத்தில் அங்கீகரித்து ஒப்புக்கொண்டன.

ஆனால் அவரது தற்போதைய அரசும் சேர்ந்துதான் இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தை அழிக்கும் கொடூரத்தை தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கின்றன.

அப்படிச் செய்து கொண்டு, இஸ்ரேல் நாடு பாலஸ்தீன தேசத்தை அழிப்பது குறித்து அரபு நாடுகளின் தூதுவர்கள் முன்னிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலைக் கண்ணீர் வடிப்பது 'ஊருக்கடி உபதேசம், உனக்கு இல்லையடி!' என்ற போக்கில் அமைந்ததுதான்.

-காலைமுரசு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி