வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை இந்தத் தைப்பொங்கலுக்கு முன்னர்

நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்கத் தயார் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

'தி ஐலண்ட்' ஆங்கில நாளிதழின் சகோதர சிங்களப் பத்திரிகையான 'திவயின' இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கின்றது.

கடந்த 10 ஆம் திகதி புதன்கிழமை சம்பந்தன் எம்.பி. நாடாளுமன்றுக்குச் சென்றிருந்தார். அச்சமயத்தில் இந்தச் செவ்வியை அவர் மேற்படி பத்திரிகைக்கு வழங்கியிருக்கக் கூடும். அது உண்மையில் அவர் வழங்கிய கருத்துகளின் பிரதிபலிப்புத்தானா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆயினும் இந்தப் பேட்டி ஊடாக சம்பந்தன் சில விடயங்களை குறிப்பிட முனைகின்றார் என்றே தோன்றுகின்றது.

'பொங்கலுக்குள் தீர்வு வரும்', 'புத்தாண்டுக்குள் தீர்வு கிட்டும்' என்று தமிழ் மக்களுக்கு அவ்வப்போது நம்பிக்கை கொடுத்த ஒரே தலைவர் அவர்தான். அவர் மட்டும்தான்.

நல்லாட்சி அரசுடன் முழுமையாகச் சேர்ந்து, ஒன்றுபட்டு, அவரும் அவரது கூட்டமைப்பும் இயங்கிக் கொண்டிருந்த போது தீர்வுக்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. அவற்றின் மீது முழு நம்பிக்கை வைத்தே, அப்போதைய நல்லாட்சி அரசுடன் நடந்த சமரச முயற்சிகளை ஒட்டிய கயிற்றை தாம் விழுங்கிக் கொண்டே, தமிழ் மக்களுக்கு அப்படி நம்பிக்கையூட்டும் கயிறுகளை அவர் கொடுத்துக்கொண்டிருந்தார்.

கடந்த காலத்தில் இருந்து இந்த நாட்டின் ஒவ்வோர் ஆட்சியாளர்களும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக தைப்பொங்கலையும் சிங்கள – இந்து புத்தாண்டையும் தெரிவு செய்த போதிலும், அந்த வருடங்களில் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்றும், சம்பந்தன் இப்பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆனால், ஆட்சியாளர்கள் யாரும் மக்களுக்கு, குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு அப்படி நம்பிக்கை அறிவிப்பை பொங்கலை, வருடப்பிறப்பை, தீபாவளியைக் குறிப்பிட்டுத் தரவில்லை. சில சமயங்களில் சம்பந்தனுக்கு அப்படி நம்பிக்கை ஊட்டும் செய்திகளையோ தகவல்களையோ ஆட்சியாளர்கள் கயிறாகக் கொடுத்து கொண்டு இருந்தார்களோ தெரியவில்லை.

அதே சமயத்தில் சம்பந்தனின் இந்தப் பேட்டி - செவ்வி - இன்னும் ஒரு கருத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. நல்லாட்சி அரசின் காலத்தைய இவ்வளவு ஏமாற்றங்களின் பின்னரும் இப்போதைய ரணில் ஆட்சிப் பீடத்தின் ஒன்றரை வருடகால ஏமாற்று ஆரவாரங்களின் பின்னரும் - இன்னமும் கூட, ரணில் விக்கிரம சிங்கவை அவர் நம்புவதற்குத் தயாராக இருக்கின்றார், நம்பி இருக்கின்றார் என்பதுதான் அந்த பேட்டி ஊடாக வெளிப்படுத்தப்படும் செய்தி.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நாட்டின் வடக்கு - கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற அதீத ஆசை அன்றிலிருந்து இருந்ததாகவும், அவரைச் சுற்றியிருந்த ஏனையவர்கள் அதற்கு இடம் கொடுக்காமல் இழுத்தடித்தனர் எனவும், அதனால் தமிழ் மக்களின் நம்பிக்கைகள் கலைந்தன எனவும் சம்பந்தன் ஏமாற்றம் தெரிவிக்கின்றார்.

ஆக, 'ரணில் விக்கிரமசிங்க நல்லவர். வடக்கு - கிழக்குப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதீத ஆசை அன்றிலிருந்து இன்று வரை அவருக்கு இருக்கின்றது. ஆயினும் சுற்றி இருந்தவர்கள்தான் அதற்கு இடம் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றார்கள்' - என்று இன்னமும் நம்புகின்றார் சம்பந்தன்.

இவ்வளவு பட்டறிவுக்குப் பின்னரும் - ரணில் விக்கிரமசிங்கவிடம் பாடம் படித்த பின்னரும் – இந்த வயோதிபத் தலைவர் இன்னமும் சுயபுத்தியைப் பெறவில்லை என்பதைத்தான் அவரது பேட்டி வெளிப்படுத்தி நிற்கிறது.

எதிரி ஏமாற்றுகின்றான் என்பதைப் புரிந்துகொள்ளாத ஏமாளி இருக்கும் வரை ஏமாற்றுதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இன்னும் கூட்டமைப்பின் தலைவர் என்று கருதப்படும் சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்கவை இன்னமும் நம்புகின்றவராக இருப்பாரானால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழர்களுக்கு சாதகமான மாற்றம் வரப்போவதில்லை என்பது உறுதி.

-காலைமுரசு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி