Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
வாழ்க்கை

தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!

Menaka

Menaka

நவம்பர் 2, 2026 • 9:28 AM

தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்போதைய காலப்பகுதியில் சமூக வலைத்தளப் பயனாளர்களுக்கு இடையில் கடுமையான கருத்து மோதல்கள் வெடிக்கும் விபரங்களை இலகுவாக அவதானிக்க முடியும்.
  • அமெரிக்க மனநலச் சங்கத்தின் மனநலக் கோளாறுகளை அடையாளம் காணும் கையேடான 'DSM-5-TR' மற்றும் உலக சுகாதார அமைப்பின் நோய் வகைப்படுத்தல் அமைப்பான 'ICD-10' ஆகியவற்றில் இந்த உறுதிப்படுத்தல் சார்புநிலையானது தனித்ததொரு மனநோயாகப் பெயரிடப்பட்டுள்ளமைக்கான எத்தகைய சான்றுகளும் இல்லை.
  • இங்கு மாறுகின்ற விடயம் தகவல்கள் மாத்திரம் அல்ல; அதனைப் புரிந்துகொள்ளும் நபரின் முன்னைய நம்பிக்கைகளும் அந்த வியாக்கியானத்திற்குத் தாக்கம் செலுத்துகின்றன.
எழுத்து அளவு:

சமூக ஊடகங்களில் ஏனையோரின் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல் தங்களது சொந்தக் கருத்தை மாத்திரம் நியாயப்படுத்துவதற்காகப் போராடும் சிந்தனைப் போக்குக்குப் பின்னால் உள்ள உண்மையான உளவியல் பகுப்பாய்வு மற்றும் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகள் குறித்து பிரபல சிரேஷ்ட முதிர்ந்த மனநல மருத்துவர் ரூமி ரூபன் விளக்கியுள்ளார்.

தற்போதைய காலப்பகுதியில் சமூக வலைத்தளப் பயனாளர்களுக்கு இடையில் கடுமையான கருத்து மோதல்கள் வெடிக்கும் விபரங்களை இலகுவாக அவதானிக்க முடியும். சில சந்தர்ப்பங்களில் இந்தக் கருத்து முரண்பாடுகள் நாகரிகம் மற்றும் தார்மீகத்தின் எல்லைகளையும் தாண்டிச் செல்வதைக் காண முடிகிறது.

இத்தகைய மோதல்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைவது தனிநபர்களுக்கு இடையேயான சித்தாந்த ரீதியான முரண்பாடுகளாகும். தாம் வகிக்கும் நிலைப்பாடு சரியானது என்பதை உறுதிப்படுத்துவதற்கான தீவிரமான உந்துதலும் சிலவேளைகளில் இந்தப் பிணக்குகளை மேலும் தீவிரப்படுத்துகிறது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் சிலர், இதுவொரு மனநோயாகவோ அல்லது அதன் அறிகுறியாகவோ இருக்குமா எனத் தம்மிடம் வினவும் சந்தர்ப்பங்களும் ஏராளமாகவுள்ளதாக மருத்துவர் குறிப்பிடுகிறார்.

மனதுக்குத் திருப்தியையும் மறுப்பபையும் தரும் தருணங்கள்

நாம் பலரும் எமக்கு நம்பிக்கையான விடயமொன்று சரியானது என்பதை உறுதிப்படுத்தும் தகவலொன்றைக் கண்டுகொள்ளும் போது மகிழ்ச்சியையோ அல்லது மன அமைதியையோ உணர்கிறோம். அதுவொரு சாதாரண உளவியல் ரீதியான எதிர்வினையாகும். ஆனால், எமது நம்பிக்கைக்கு முரணான தகவலொன்று கிடைக்கும் போது நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம்?

சில வேளைகளில் அத்தகைய தகவல்களைப் பொருட்படுத்தாமல் விடுகிறோம். வேறு சில சந்தர்ப்பங்களில் அதன் குறைபாடுகளைத் தேடுகிறோம். அல்லது அத்தகவலை முன்வைக்கும் நபரின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் அவரது கருத்தை நிராகரிக்க முற்படுகிறோம்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நாம் முகங்கொடுப்பது வெறும் கருத்துமோதலுக்கு மட்டுமல்ல; மாறாக, மனிதச் சிந்தனைக்குள்ளேயே தொழிற்படும் மிக முக்கியமானதொரு உளவியல் நாட்டத்திற்கும் கூட இரையாகக்கூடும்.

உறுதிப்படுத்தல் சார்புநிலை (Confirmation Bias)

உளவியலில் இது 'உறுதிப்படுத்தல் சார்புநிலை' (Confirmation Bias) என அழைக்கப்படுகிறது. அதாவது, தனிநபியொருவர் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை, கருத்து அல்லது அனுமானமொன்றை உறுதிப்படுத்தும் தகவல்களை அதிகமாகத் தேடுவதற்கும், அவற்றுக்குக் கூடிய முக்கியத்துவம் வழங்குவதற்கும், அதற்கு முரணான சான்றுகளைப் பொருட்படுத்தாமல் விடுவதற்கும் அல்லது அவற்றுக்குத் தடையை ஏற்படுத்துவதற்கும் உள்ள சிந்தனைப் போக்கு இதன்போது வெளிப்படுகிறது.

இங்கு முக்கியமானது என்னவென்றால், தகவல்கள் எமக்கு வந்துசேரும் விதம் மாத்திரமன்று; மாறாக, நாம் அவற்றை எவ்வாறு தெரிவுசெய்கிறோம், புரிந்துகொள்கிறோம் மற்றும் மதிப்பீடு செய்கிறோம் என்பனவெல்லாம் எமது முன்னைய நம்பிக்கைகளினால் செல்வாக்குக்கு உட்படுத்தப்படலாம் என்பதைப் புரிந்துகொள்வதாகும்.

img-20261101-213551-mceclip0-Yto1Go.png

இதுவொரு மனநோயல்ல

இந்த உறுதிப்படுத்தல் சார்புநிலையானது பலரிடத்திலும் வெவ்வேறு மட்டங்களில் காணப்படக்கூடிய ஒன்றாகும். எனினும், இதனைத் தனிப்பட்ட மனநோயாகக் கருதத்தக்க நிலையொன்று இருப்பதாகக் கூற முடியாது.

இது மனிதச் சிந்தனை, தகவல் செயலாக்கம் மற்றும் தீர்மானம் எடுத்தல் என்பவற்றுடன் தொடர்புடைய ஒரு 'அறிவுசார் சார்புநிலையே' (Cognitive Bias) தவிர வேறொன்றுமில்லை.

அமெரிக்க மனநலச் சங்கத்தின் மனநலக் கோளாறுகளை அடையாளம் காணும் கையேடான 'DSM-5-TR' மற்றும் உலக சுகாதார அமைப்பின் நோய் வகைப்படுத்தல் அமைப்பான 'ICD-10' ஆகியவற்றில் இந்த உறுதிப்படுத்தல் சார்புநிலையானது தனித்ததொரு மனநோயாகப் பெயரிடப்பட்டுள்ளமைக்கான எத்தகைய சான்றுகளும் இல்லை.

எனவே, நபரொருவர் தனது கருத்தில் கடுமையாகப் பிடிவாதமாக இருக்கிறார் என்ற காரணத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அவருக்கு மனநோய் உள்ளது என முடிவு செய்வதும் தவறானதாகும்.

எவ்வாறாயினும், இந்தச் சார்புநிலையானது சாதாரண வாழ்க்கையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு மாத்திரம் சுருங்கிவிடுவதில்லை. மாறாக, விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள், அரசியல் கருத்துக்களைக் கட்டமைத்தல் மற்றும் மருத்துவர்களின் நோய் கண்டறிதல் போன்ற மிக முக்கியமான துறைகளிலும் இது தாக்கம் செலுத்தக் கூடும்.

மனித மனம் செயற்படும் விழிப்புணர்வு முறை

நாம் காணும் மற்றும் கேட்கும் அனைத்தையும் ஒரே விதமாகப் புரிந்துகொள்வதில்லை. உண்மையில் மனித மனம் ஒவ்வொரு தகவலையும் ஒரே அளவிலான கவனத்துடன் பகுப்பாய்வு செய்வதில்லை.

எமக்குரித்தான பரிச்சயமான கருத்துக்களுடன் ஒத்துப்போகும் தகவல்களை இலகுவாக ஏற்றுக்கொள்வதற்கு நாம் முற்படுவதுடன், அவற்றுக்கு முரணான தகவல்களை ஏற்றுக்கொள்வதற்காகக் கூடுதலான மன உழைப்பைக் கொட்டவேண்டிய நிலை ஏற்படலாம்.

ஒருவருடைய முன்னைய அனுபவங்கள், சமூகப் பின்னணி, கல்வி, உணர்வுகள் மற்றும் தனது அடையாளம் பற்றிய புரிதல் என்பனவும் இச்செயன்முறையில் தாக்கத்தைச் செலுத்தலாம். அதற்கமைய, இந்த உறுதிப்படுத்தல் சார்புநிலையானது பிரதானமாகப் பின்வரும் வடிவங்களில் வெளிப்படலாம்:

  • தமது கருத்துடன் ஒத்துப்போகும் தகவல்களை மட்டும் தேடுதல்: தான் வகிக்கும் கருத்து சரியானது என்பதை உறுதிப்படுத்தும் தகவல்களை மாத்திரம் தேடிப் பிடிப்பதற்கு நபரொருவர் முற்படலாம். எனினும், அக்கொள்கைக்கு முரணான ஆராய்ச்சிகள், விமர்சனங்கள் அல்லது மாற்று விளக்கங்களைப் பொருட்படுத்தாமல் இருப்பதற்கும் அவர் முற்படுவார். உதாரணமாக, குறித்த சிகிச்சையொன்று வெற்றியளிப்பதாக நம்பும் நபரொருவர் அதனை ஆதரிக்கும் அனுபவங்களையும் பிரசுரங்களையும் மாத்திரம் தேடிக்கொண்டு, அதன் வரையறைகள் அல்லது தோல்வி முகம் கண்ட முடிவுகள் குறித்த தகவல்களைத் தவிர்த்துவிடுவார்.

  • சான்றுகளைச் சார்பான முறையில் வியாக்கியானம் செய்தல்: ஒரே தகவலானது இரு வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதமாகக் தோன்றலாம். தனது கருத்திற்குச் சார்பான நபரொருவர் ஒரு சம்பவத்தைத் தனது கருத்துக்கு ஆதரவளிக்கும் சான்றாகப் பார்க்கின்ற வேளையில், அதற்கு எதிரான கருத்தைக் கொண்டவரோ அதே சம்பவத்தை முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் வியாக்கியானம் செய்வார். இங்கு மாறுகின்ற விடயம் தகவல்கள் மாத்திரம் அல்ல; அதனைப் புரிந்துகொள்ளும் நபரின் முன்னைய நம்பிக்கைகளும் அந்த வியாக்கியானத்திற்குத் தாக்கம் செலுத்துகின்றன.

  • எதிர்ச் சான்றுகளைப் பொருட்படுத்தாமல் இருத்தல்: தான் நம்பும் கருத்துக்கு முரணான சான்றொன்று கிடைக்கப்பெறும் போது, அதன் குறைபாடுகளை மட்டும் தேடுதல், அதனை முன்வைக்கும் நபரை விமர்சித்தல் அல்லது அச்சான்று தேவையற்றது எனக் கூறுதல் என்பன இதன் ஏனைய அம்சங்களாகும். எதிர்ச் சான்றுகளை மாத்திரம் கடுமையாகப் பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு, தனது கருத்துக்குச் சார்பான சான்றுகளை அவ்வாறான தீவிர விமர்சனப் பரிசோதனைக்கு உட்படுத்தாது விடுமிடத்து அங்கே சார்பான மதிப்பீடு மட்டுமே நிகழும்.

  • ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல்: ஒரே நம்பிக்கைக்கு ஆதரவளிக்கும் தகவல்களைத் திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலமோ அல்லது கேட்பதன் மூலமோ அக்கொள்கை மிகவும் சரியானது என்ற எண்ணம் உருவாகலாம். எனினும், தகவலொன்று தொடர்ச்சியாகச் செவிமடுக்கப்படுவதற்கும் அது உண்மை என்பதற்கான சுயாதீனமான சான்றுகள் இருப்பதற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. பரிச்சயமான தன்மை என்பது உண்மைத் தன்மைக்குச் சமமானதன்று.

Opinion | Faith vs. Facts - The New York Times

மருத்துவர்களுக்கும் கூட இவ்வாறு தவறுகள் நேருமா?

உறுதிப்படுத்தல் சார்புநிலையின் தீவிரத்தன்மை மருத்துவத் துறையை நோக்கும் போது மிகத் தெளிவாகப் புலப்படும். மருத்துவரொருவர் நோயாளியைப் பரிசோதித்த பின்னர் ஆரம்பத்தில் ஏதேனும் நோயொன்று இருப்பதாகச் சந்தேகிக்கலாம்.

அதுவொரு நியாயமான ஆரம்ப அனுமானம் என்றாலும், அதன் பின்னர் கிடைக்கப்பெறும் அனைத்துத் தகவல்களுமே அந்த அனுமானத்திற்குப் பொருந்துமாறு மாத்திரம் வியாக்கியானம் செய்யப்பட்டால் அங்கே தவறானதொரு நோய் கண்டறிதலுக்கு இட்டுச் செல்லும் ஆபத்து உள்ளது.

இந்த ஆபத்தைக் குறைத்துக்கொள்வதற்காக மருத்துவர்கள் அனுமானங்களைப் பரிசோதிப்பதற்கும், அவற்றின் அடிப்படையில் முடிவுகளை எட்டுகின்ற முறையான முறைகளையும் (Hypothetico-deductive method) பயன்படுத்தலாம். கிடைக்கப்பெறும் சான்றுகள் ஆரம்ப அனுமானத்துடன் பொருந்தாவிட்டால் அதனைத் திருத்திக் கொள்வதோ அல்லது வேறு அனுமானங்களைக் கருத்திற்கொள்வதோ அவசியமாகிறது.

சமூக ஊடகங்கள் எதிரொலிக்கும் அறைகளா? (Echo Chambers)

தற்போதைய காலகட்டத்தில் இந்த உறுதிப்படுத்தல் சார்புநிலையானது மிகத் தெளிவாக அவதானிக்கப்படக்கூடிய பிரதான களமாகச் சமூக ஊடகங்கள் விளங்குகின்றன. நபரொருவர் குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றை, மதக் நம்பிக்கையொன்றை அல்லது சுகாதாரம் தொடர்பான கருத்தொன்றை ஏற்றுக்கொண்டிருக்கும் போது, அதற்குச் பொருத்தமான காணொளிகள், கட்டுரைகள் மற்றும் பிரசுரங்களை மாத்திரம் பின்தொடர முற்படுகிறார்.

இதன் ஊடாகத் தனது கருத்துக்கு ஆதரவளிக்கும் தகவல்கள் அதிகமாகக் கிடைப்பதுடன், ஏனைய கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகவல்களைக் காணக்கூடிய சந்தர்ப்பமும் தடைப்பட்டுப் போகிறது.

How to Break Out of Your Social Media Echo Chamber | WIRED

இதற்குச் சமூக ஊடகத் தளங்களின் அல்கோரிதம்களும் (Algorithms) பரிந்துரைக்கும் முறைமைகளும் (Recommendation systems) நேரடியாகப் பங்களிப்புச் செய்கின்றன. பயனாளரின் முந்தைய நடத்தைகளின் அடிப்படையில் அவருக்குக் காட்டப்படும் உள்ளடக்கத்தைத் தெரிவுசெய்யும் ஆற்றல் இந்தப் பொறிமுறைகளுக்கு உண்டு.

சிந்தனைக்கும் உணர்ச்சிக்கும் இடையிலான மோதல்

உறுதிப்படுத்தல் சார்புநிலையைப் புரிந்துகொள்வதில் மனித மனத்திற்குள் தொழிற்படும் அறிவுசார் (Cognitive) மற்றும் உணர்வுபூர்வமான (Emotional) செயற்பாடுகளுக்கு இடையிலான தொடர்பும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் எளிமையான வேறுபாடு என்பது 'சிந்தித்தல்' (Thinking) மற்றும் 'உணர்தல்' (Feeling) என்பவற்றுக்கிடையிலான வித்தியாசமாகும்.

தீர்மானம் எடுக்கும் போது இந்த இரண்டு செயற்பாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய முறையிலேயே தொழிற்படுகின்றன. எனினும், சில சந்தர்ப்பங்களில் தர்க்கரீதியாகச் சிந்திப்பதைத் தாண்டி உணர்வுபூர்வமான பிரதிபலிப்புக்கள் முன்னிலை வகிக்கலாம்.

தனது கருத்துத் தவறு என்பதை ஏற்றுக்கொள்ளுதல் சிலவேளைகளில் அவமானமாகவோ, அசௌகரியமாகவோ அல்லது தோல்வியாகவோ உணரப்படலாம். எனவே, அக்கொள்கைக்குச் சவால்விடும் சான்றுகள் கிடைக்கும் போது அவற்றைத் தர்க்கரீதியாகப் பரிசீலிப்பதற்குப் பதிலாகக் கோபம், வெறுப்பு, நிராகரிப்பு அல்லது பாதுகாப்பான நடத்தைகள் வெளிப்படுகின்றன.

இந்தச் சார்புநிலையிலிருந்து விடுபடுவது எவ்வாறு?

இந்த உளவியல் போக்கைக் கட்டுப்படுத்துவதற்குத் தான் வகிக்கும் கருத்துத் தவறாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இன்றியமையாததாகும்.

தனது கருத்திற்கு முரணான தகவல்களுக்கும் நியாயமான கவனத்தைச் செலுத்துவது, தகவலின் உண்மைத் தன்மையை மூலங்களின் அடிப்படையில் பரிசீலிப்பது, முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் உணர்ச்சிகளின் தாக்கத்தை அடையாளம் காண்பது மற்றும் மாற்றுக்கருத்துக்களுக்குச் செவிமடுப்பது என்பன இதற்குரிய முக்கியமான படிகளாகும்.

தமது கருத்தை மாத்திரம் தேடாமல், அக்கொள்கை தவறாக இருப்பதைக் காட்டக்கூடிய சான்றுகளையும் தேடிப்பார்ப்பது அவசியமாகும்.

தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதை ஒரு தோல்வியாகக் கருதாமல், புதிய அறிவு மற்றும் சான்றுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அறிவுசார் திருத்தமாகப் பார்ப்பதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

குறிப்பு:

விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் (Dr. Rumi Ruben)

தலைமை விசேட மனநல மருத்துவர், போதனா வைத்தியசாலை - கராப்பிட்டிய, காலி

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

#Stubborn a Mental Illness
Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...