வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவர்

மரணமடைந்துள்ளதுடன், மற்றும் ஒரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, பூவரசன்குளம், மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவு இயந்திரம் ஒன்று மாலை பயணித்துள்ளது.

இதன்போது திடீர் என சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் முற்றாக குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.

இதன்போது,  உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக குறித்த இரு சிறுவர்களும் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

எனினும், இருவரில் ஒரு சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே  மரணித்துள்ளதாக வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 15 வயதான ச.சதுசன் என்ற சிறுவன் மரணமடைந்ததுடன், மற்றொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்