காணி நிர்ணய சட்டத்தின் மூலம் வடக்கில் சுமார் 6,000 ஏக்கர் நிலப்பரப்பை கபளீகரம் பண்ணுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசு
-சிரேஷ்ட ஊடகவியலாளர் என். வித்தியாதரன் அவர்களால் ‘காலைமுரசு’ பத்திரிகையில் எழுதப்பட்ட ‘இரகசியம் பரகசியம்’ பத்தியையே இங்கு நாம் பதிவு செய்திருக்கிறோம்.
காணி நிர்ணய சட்டத்தின் மூலம் வடக்கில் சுமார் 6,000 ஏக்கர் நிலப்பரப்பை கபளீகரம் பண்ணுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசு எடுத்த நடவடிக்கையை சட்டரீதியான எதிர் நடவடிக்கை மூலம் 'பிரேக்' போட வைத்துத் தடுத்து இருக்கிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
அந்த முயற்சிக்கான பாராட்டுக்கள் சமூகஊட கங்களில் வெளிவந்தாலும், அவற்றையும்தாண்டி, சில சுமந்திரன் எதிர்ப்பாளர்கள் - 'கற்றறிந்த அதிமேதாவிகள்'(?) - தங்கள் காழ்ப்புணர்வை வெளிப்படுத்த முகப்புத்தகங்கள் ஊடாக அடுக்கும் கொள்கைக் கோட்பாட்டு வியாக்கியானங்களைப் பார்க்கும்போது தமிழினம் உருப்பட இவர்கள் இடமளிக்கப் போவதில்லை என்ற எண்ணம்தான் வந்தது.
அந்த விடயத்துக்குள் இறங்க முன்னர், இத்தகைய முகநூல் வாய்ச்சவடால் பேர்வழிகளின் போக்கும் சிந்தனையும் கிறுக்குப் புத்தியும் எத்தகையது என்பதை உணர்த்துவதற்கு நான் சந்தித்த அல்லது எதிர்கொண்ட இதே போன்ற ஒரு வியாக்கியானத்தைமுதலில் குறிப்பிடுவ து பொருத்தம் என்று நினைக்கிறேன்.
இது நடந்தது 2009 மே மாதத்திற்குப்பிறகாக இருக்கலாம். யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த 2009 பெப்ரவரி மாதத்தில் பல நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில், கொழும்பில் ஒரு பிரபல மலர்ச்சாலையில் நடைபெற்ற என் உறவினரின் சாவு வீட்டில் வைத்து, பல நூற்றுக்கணக்கானோரின் முன்னிலையில், திடீரென மோசமான முறையில் என்னைத்தாக்கி, என் சேட்டையே கிழித்து அதன்மூலம் என் கண்களைக் கட்டி, கைகளை பின்புறமாக விலங்கிட்டு, அதைத் தடுக்க முயன்ற பலரையும் வன்முறையாலும், அயுதங்களை 'லோர்ட்' செய்தும் அச்சுறுத்தியும் விட்டு, வெள்ளை வானில் கடத்திச் சென்றார்கள். பெரும் மோசமான மனச்சிதைவை எதிர்கொள்ளும் அவலங்களை அடுத்து நான் சந்திக்க நேரிட்டது.
நான் கடத்தப்பட்ட சமயத்தில், சிலமணி நேரங்களின் பின்னர், ஆஸ்திரேலிய செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி அளித்த அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ என்னை ஒரு பயங்கரவாதி என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.
கொழும்பில் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல்களை நடத்துவதற்கு இணைப்பாளராக செயல்பட்ட பயங்கரவாதி நான் என்பதைத் தாம் பொறுப்போடு கூறிக் கொள்கிறார் என்று அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ. ஆனால் அவராலோ, அவரது பிரதான நான்கு தேசியப் புலனாய்வு தரப்புகளாலோ என்னை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துக் கொண்டு, பயங்கரவாதியாக நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதனையும் எத்தகைய முறையில் என்னைக் குடைந்தெடுத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நான் விடுதலைப் புலிகளின் தலைமையில் இருந்து நாட்டின் ஜனாதிபதிவரை அனவருடனும் - படைத் தளபதிகள் முதல் நாடுகளின் ராஜதந்திரிகள் வரை அனவருடனும் - உரையாடினேன், ஊடாடினேன், நெருங்கிப் பழகினேன் என்பதைக் கண்டறிந்த கோட்டாவின் புலனாய்வாளர்களினால், அந்த ஊடாட்டம் ஓர் ஊடகவியலாளனின் சட்ட ரீதியான உரிமைகள், கடப்பாடுகள், பணிகள் என்ற எல்லையைத் தாண்டியவை என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் கண்டறியவே முடியவில்லை.
எனது கைதுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜாவின் வழிநடத்தலில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் உயர்நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், எனக்கு எதிராகக் குற்றம் சுமத்துவதற்கு எதுவும் இல்லை என்பதை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் பதிந்து, ஒப்புக்கொண்டு, அதன் அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் என்னை விடுதலை செய்ய வேண்டியவர்கள் ஆனார்கள். என் மீதான கடத்தல் கொடூரம் அத்தோடு முடிவுக்கு வந்தது.
நான் விடுதலையான அடுத்த தினங்களில் முகப்புத்தகம் ஒன்றின் பதிவு இப்படி இருந்தது:-
'இலங்கையில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் எல்லோரும் காணாமல் போய்விட்டனர் அல்லது படுகொலை செய்யப்பட்டு விட்டனர். இவர் மாத்திரம் எப்படி மூன்று மாதத்தின் பின்னர் உயிருடன் வெளியேவந்தார்? இந்தத் தடுப்புக்காவல் காலத்தில் அவர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் செய்துகொண்ட மறைமுக ஒப்பந்தம் என்ன? அதை அவர் வெளிப்படுத்துவாரா?'' இப்படி கேட்டிருந்தார் அந்த முகப்புத்தக வாய்ச் சவடால் பிரகிருதி.
அவரைப் பொறுத்தவரை கடத்தப்பட்ட நான், அந்த மோசமான நிலைமையை எதிர்கொண்டமைக்காக கொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது உயிரிழந்திருக்க வேண்டும். உயிருடன் வந்தது நான் செய்த பாவம் என்பது போல அவரது கருத்து இருந்தது.
சரி, இனி விடயத்துக்கு வருகிறேன்.
காணிக் கபளீகர வர்த்தமானிக்கு எதிராக ஒருபுறம் மக்கள் போராட்டத்தை அறிவித்த சுமந்திரன், மறுபுறம் சட்டப் போராட்டத்தையும் முன்னெடுத்தார். மக்கள் போராட்டத்தை ஆரம்பிக்க அவர் விதித்த காலக்கெடுவுக்கு முதல் நாள் அந்த வர்த்தமானியை இடை நிறுத்துவது பற்றிய பகிரங்க அறிவிப்பை அரசு விடுத்தது. ஆனால் அது இரண்டு வார காலமாகியும் செயலுருப் பெறாத நிலையில், அவ்விடயத்தை ஒட்டி அரசின் போக்கில் சந்தேகம் கொண்ட சுமந்திரன் அதற்கு எதிராக சட்டப் போராட்டத்தை ஆரம்பித்து, அதன் மூலம் காணிகளைச் சூறையாடும் அரச திட்டத்திற்கு எதிரான தடை உத்தரவை உயர்நீதிமன்ற மூலம் பெற்றிருக்கிறார். அதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிவதைச் சகிக்க முடியாமல் வயிறு எரியும் முகநூல் பிரகிருதிகள் இப்படி ஒரு விமர்சனத்தை எழுதியிருந்தார்கள்.
'இந்த சட்ட மூலத்தையே (வர்த்தமானி அறிவித்தலையே) இல்லாது செய்வதற்கான மக்கள் போராட்டத்தை செய்யவேண்டியது கட்சியின் கடமை. ஆனால் இந்த ஜே.வி.பி அரசுக்கு எதிராக மக்களைத் திரளவிடாமல் தடுத்து, அதை சட்டப் போராட்டமாக மடை மாற்றி, தற்போது 'இடைக்கால உத்தரவு' கேட்டு வழக்குப் போட்டவர் சுமந்திரன். கட்சியை மக்களுக்காகப் போராட்டங்களை செய்யவிடாமல் தடுத்தவர் சுமந்திரன்'' என்று சுமந்திரனின் செயற்பாட்டுக்கு புதுவிதமான அர்த்தத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்,
சுமந்திரன் இல்லாவிட்டால் மக்கள் போராட்டம் மூலம் இந்த காணி கபளீகர முயற்சியைத் தங்கள் ஆள்கள் வெற்றிகரமாகத் தடை செய்து விடுவார்கள் என்று படம் காட்டும் அந்தப் பிரகிருதிகள். அதை பார்த்த போது, கடத்திக் காணாமலாக்கப்பட்டு, பின்னர் உயிருடன் மீண்ட என் நிலைமையை ஒட்டி அப்போது விமர்சித்த பிரகிருதியின் போக்கில்தான், இப்போது சுமந்திரனின் இந்த சட்டப் போராட்டத்திற்கு எதிரான மேற்படி பிரகிருதியின் கருத்தும் அமைந்திருப்பதாக எனக்கு தோன்றியது. அதனைத்தான் வாசக நண்பர்களுடன் இங்கு பரிமாறிக் கொண்டேன். அவ்வளவே.
இன்றைய இந்தப் பதிவு எந்த முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கத்தையும், அதன் செயற்பாட்டையும் கொச்சைப்படுத்தும் நோக்கம் கொண்டது அல்ல. அந்தக் காலத்து நினைவுகளை மீள ஞாபகமூட்டும் ஓர் அம்சம் மட்டுமே.
நேற்று யாழ் மாநகர சபையின் முதல் அமர்வில் புளொட் சார்பில் சங்குக் கூட்டணியில் போட்டியிட்டு, வட்டாரத்தில் நேரடியாக வெற்றி பெற்ற தர்ஷானந்த் முன்வைத்த ஒரு பிரேரணை குறித்துக் குறிப்பிட்டிருந்தேன். சபை அமர்வு நாள்களில் மாநகர சபை உறுப்பினர்களுக்கு இலவச மதிய உணவு - சோறு கறிகளுடன் - பரிமாறப்பட வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை.
அதை வாசித்து விட்டு என் பாடசாலைக் கால நண்பர் ஒருவர் அழைப்பு எடுத்தார். அந்த அழைப்பில் அவர் குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்ட முன்னர், எண்பதுகளின் நடுப்பகுதியில் ஆயுதப் போராட்டம் முகிழ்ந்து வீறு கொண்டு எழுந்த சமயத்தில் இருந்த சூழலைப் பற்றி குறிப்பிடுவது முக்கியமாகிறது.
ஆயுதப் போராட்டத்தின் அந்த ஆரம்ப காலகட்டத்தில் பல இயக்கங்கள் மும்முரமாகச் செயற்படத் தொடங்கின. அவற்றில் முன்னணியில், அதிக எண்ணிக்கையில் போராளிகளை வைத்திருந்த இயக்கம் புளொட் அமைப்புதான். அதனால் யுத்த முனைகளிலும், மக்களுக்கு மத்தியிலும் பணியாற்றும் தனது உறுப்பினர்களுக்கு தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுப்பதற்குப் பெருந்தொகைப் பணத்தை – நிதியை - அந்த அமைப்பு திரட்ட வேண்டிய இக்கட்டில் இருந்தது. போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் அந்த இயக்கத்துக்கு அது தாங்க முடியாத பெரும் சுமையாக அமைந்தது. இது மக்கள் போராட்டம் என்பதால், மக்களுக்காகப் போராடும் போராளிகளுக்குரிய உணவை மக்களிடமிருந்தே பெறுவதுதான் முறைமை என்ற நோக்கத்தில் புளொட் அமைப்பு அந்தக் காலகட்டத்தில் ஒரு திட்டத்தை வகுத்தது.
கிராமங்களில், நகரங்களில் மக்களிடம் போராளிகளுக்கான உணவுப் பொதிகள் இத்தனை தாருங்கள் என்று குறிப்பிட்டு, சேகரித்து வழங்கும் ஒரு முறைமையை அவர்கள் அறிமுகப்படுத்தி இருந்தார்கள். புளொட் அமைப்பு போராளிகளுக்கு உணவு பொதிகளை மக்களிடம் இருந்து சேகரித்துப் பெறுவதால் அந்த அமைப்பை சில தரப்பினர் 'சோற்றுப் பார்சல் இயக்கம்' என்று சிலேடையாக - நையாண்டியாக - குறிப்பிடும் ஒரு முறை இருந்தது.
என் பாடசாலை கால நண்பரும் இன்னொரு இயக்கத்தில் இருந்தபடி இந்த விடயங்களை அவ்வப்போது விமரிசித்து வந்தவர்தான். அவர்தான் நேற்று என் பத்தியை வாசித்து விட்டு அழைப்பு எடுத்தார்.
'அவர்கள் சோற்றுப் பார்சல் சேகரித்துத் திரட்டிப் போராட்டம் நடத்தியவர்கள். அவர்கள் வழிவந்த உறுப்பினர் மாநகர சபையிலும் அந்தப் போராட்டத்தைத்தான் முன்னெடுக்கின்றார்'' என்றார் அந்த நண்பர்.
ஆயினும், நேற்று மாநகர சபை அமர்வில் அதே தர்ஷானந்த் வேறு ஒரு போராட்டம் நடத்தினார். மாநகர சபையில் நேற்று உண்மையில் நடந்த கூட்டம் என்ன, அதன் நிகழ்ச்சி நிரல் யாது, அதனை எப்படி திசை திருப்ப முயன்றார்கள், அதன் பின்னணி யாது என்பவை பற்றிய விடயங்களை நாளை சற்று விவரமாகப் பார்ப்போமா நண்பர்களே...?