'சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணிகள்
விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்' என்று, முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது, வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் மனோநிலையில் வாழும் சிலரும் இருக்கவே செய்கின்றனர். விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து கனவு காணும் தரப்பினரும் உள்ளனர். அனைத்து மக்களும் அல்லர். ஒரு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையானோர் அவ்வாறு இருக்கலாம்.
அதேபோல் விடுதலைப் புலிகளை ஆசிர்வதித்த அரசியல்வாதிகளும் உள்ளனர். விடுதலைப்புலிகளை மீள் எழுச்சிபெற வைப்பதற்கு முற்படும் டயஸ்போராக் குழுவும் உள்ளது. இப்படியான அச்சுறுத்தல் இருப்பதால், போர்மூண்ட பிறகுமுகாம்கள் அமைப்பது பற்றி சிந்திக்காமல், தூர நோக்கு சிந்தனை அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் இருக்க வேண்டும். அதற்காகப் போர்க் காலத்தில் இருந்ததுபோல் அல்ல. பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் நகர்வுகள் இடம்பெறவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பைப் பலவீனப்படுத்தினால் அது யாழ். மக்களுக்குத்தான் சரி இல்லை. அங்கு ஆவா என்ற பாதாளக் குழுவொன்று இருந்தது. கேரள கஞ்சாக்கள் வருகின்றன. வீதித் தடைகளை நீக்கினால் தெற்கிலுள்ள பாதாளக் குழுக்கள் வடக்குக்குச் சென்று ஒளியக்கூடும். எனவே, பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம். சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கு இல்லை என்பதைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்' என்றார்.
காணி நிர்ணயச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ், வடக்கு மாகாணத்தில் காணிகளை சுவீகரிப்பதற்காக 28.03.2025 திகதியிட்ட 2430/25 இலக்க வர்த்தமானியை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு நேற்று (27) விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக வலுவிழக்கச் செய்யும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஜூலை 2, 2025 அன்று நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னர், அரசாங்கம் குறித்த வர்த்தமானியை மீளப்பெறுவதற்கான புதிய வர்த்தமானியை வெளியிட்டால், அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC/FR/112/25) இல், மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில், சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் கே. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா, மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொன்சேகா, நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.