ஆசிய வலயத்தின் முழுமையான விநியோக மற்றும் போக்குவரத்து மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்து சமுத்திரத்தின் விமான

மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்குரிய திட்டமிடல் அரசாங்கத்தின் 25 வருட அபிவிருத்தி திட்டத்திற்கு உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு – வடக்கு துறைமுகத்தின் 30 வருட அபிவிருத்தி திட்டத்தினை வெளியிடுவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு, மேற்கு இறங்குதுறைகளின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தற்போதும் இடம்பெற்று வருகின்ற நிலையில், 2030 ஆண்டளவில் அவற்றை முழுமைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நான் முதலில் அமைச்சருக்கும் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபைக்கும் நன்றிகளை கூறிக்கொள்கிறேன். துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சினை இரு வேறு அமைச்சுக்களாக பிரிக்கலாம் அல்லவா என பலரும் கேட்கின்றனர். இருப்பினும் இலங்கையை விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை கேந்திர நிலையமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்பதாலேயே இரு அமைச்சுக்களையும் ஒன்றாக்கியுள்ளோம்.

25 வருடங்களுக்கு எமது திட்டம் என்ன? அவற்றை எவ்வாறு செயற்படுத்தலாம் என்ற மாற்றுச் சிந்தனைகள் அவசியமானதாகும் என்பதோடு இலங்கையை விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை கேந்திர நிலையமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, இந்தியா, பங்களாதேஷ்,ஈரான் உள்ளிட்ட மக்ரான் கடல் வலயத்தின் மேம்பாடுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அத்தோடு சுற்றுலாத்துறை வர்த்தக செயற்பாடுகளுக்கு அவசியமான வசதிகளை கொண்டதாக ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் காணப்படுகின்றன.

அடுத்த 25 வருடங்களுக்குள் வங்காள விரிகுடாவை அண்மித்த வலயத்தில் இந்தியா, பங்களாதேஷ், மலேசியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் பெரும் அபிவிருத்திகளை எட்டும் என்ற நிலையிலிருந்து திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தி குறிந்து நாம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கிறோம். அதற்கமைய திருகோணமலை துறைமுகத்தை வங்காள விரிகுடா வலயத்தின் சுற்றுலா வர்த்தகச் செயற்பாடுகளுக்கான பிரதான தளமாக மாற்றியமைக்கூடிய இயலுமை பற்றி தேடியறிய வேண்டியது அவசியமாகும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தற்போதும் அதன் முழுமையாக கொள்ளளவுடன் இயங்கவில்லை என்பதால் அடுத்த 10 – 15 வருடங்களுக்குள் அதனை அபிவிருத்தி செய்வதற்கான திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் விரிவாக ஆராய வேண்டியதும் அவசியமாகும்.

மறுமுனையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதோடு, மத்தல விமான நிலையத்தினை வணிக ரீதியில் மேம்படுத்த வேண்டும். இவற்றோடு வடக்கு மாகாணத்தில் பலாலி விமான நிலைத்தை திறந்துள்ளதற்கு மேலதிகமாக வட மத்திய மாகாணத்தின் உள்ளக விமான சேவைகளுக்காக ஹிங்குரங்கொட பிரதேசத்தை அபிவிருத்திச் செய்துள்ளோம்.

இதற்குள் கொழும்பு – வடக்கு துறைமுகம் பெருமளவான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ள அதேநேரம் அதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலான அறிக்கையொன்றை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் ஆலோசகர்கள் என்னிடம் கையளித்துள்ளனர். அதற்காக நாம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரானின் அபிவிருத்தி திட்டமிடல்கள் பற்றி நாம் வெகுவாக அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட மேற்படி மூன்று நாடுகளினதும் அபிவிருத்தியின் மீதே கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவு தங்கியுள்ளது. எமக்குள்ள TUS, கொள்கலன்கள், பிரிவுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேற்படி விடயங்கள் தீர்மானிக்கப்படும்.

இந்தியா 2050 ஆம் ஆண்டளவில் உலகின் மிதமிஞ்சிய சனத்தொகையை கொண்ட நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவின் குஜராத், மகாராஷ்டிரா, தென் இந்தியாவின் ஏனைய பகுதிகளும் குறிப்பாக தமிழ்நாடும் தொழில்மயமாக்கலை நோக்கி வேகமாக நகரும் நிலையில் இந்தியா தொழில்மயமாக்கலில் முன்னேற்றம் கண்டாலும் 2010 சீனா அடைந்த இலங்கை அடைய முடியாத நிலை காணப்படுகிறது. இருப்பினும் இந்தியா அந்த இலக்கை எட்டிப் பிடிக்கும். அது எண்ணியல் சார்ந்ததாக இல்லாமல் வடிவியல் சார்ந்த முன்னேற்றமாக அமையலாம். அதன்படி இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான தொடர்பாடல்கள் எவ்வாறானதாக அமைய வேண்டும் , படகுச் சேவைகள் வாயிலாள அந்த தொடர்பாடல்களை கட்டியெழுப்பும் இயலுமை உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.

இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக அங்குள்ள மக்களின் இணக்கப்பாட்டினை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் மீன்பிடித்தல் மற்றும் சுற்றாடல் பிரச்சினை தொடர்பிலும் வெகுவாக அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

அத்தோடு நாம் இந்தியாவுடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளின் போது, அபிவிருத்தியை துரிதப்படுத்துவதோடு, அதிகளவில் கொள்களன்கள் அவசியம் என்று அறியப்பட்டுள்ளது. அதற்கான திட்டமிடலை இந்தியாவுடன் கலந்தாலோசித்து உருவாக்கும் பட்சத்தில் குறைந்தளவான வாய்ப்புக்கள் எவை அதிகளவிலான வாய்ப்புக்கள் எவை மற்றும் அவற்றை எவ்வாறு கண்டுகொள்ளலாம் போன்ற விடயங்களை நாம் அறியலாம்.

இன்று நமது நாட்டைப் போன்று பாகிஸ்தானும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டாலும், ஈரானுக்குப் பிறகு வளர்ச்சியடையக்கூடிய நாடாக விளங்குகிறது. மத்திய ஆசியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் சபஹர் துறைமுகத்துடன் ஈரான் முன்னேறினால், மக்ரான் கடற்கரையை இலக்கு வைப்பர். எனவே அபிவிருத்தியின் போது மேற்படி சகல விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

இதற்கிடையில், சீனா ஆப்பிரிக்காவுடன் இணைந்து ஆப்பிரிக்காவின் கிழக்கிலிருந்து மேற்கு வரை ரயில் பாதையைத் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அவற்றில் ஒன்று கென்யாவிலிருந்து மேற்கு ஆபிரிக்கக் கடற்கரைக்கும், மற்றொன்று கொங்கோ வழியாகவும் செல்லும் என்பது குறித்தும் நாம் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

அதற்கமைய வலயத்தின் அனைத்து விநியோக மற்றும் போக்குவரத்துச் செயற்பாடுகள் மாற்றமடையும் என்பதால் இலங்கையை விமான சேவைகள் மற்றும் கப்பல்துறை கேந்திர நிலையமாக மாற்றியமைப்பதற்கு அவசியமான வேலைத்திட்டத்தினை உருவாக்க வேண்டும்.

அதனை நம்மால் செய்ய முடியும் என்பதோடு நாம்மால் முன்னேறிச் செல்ல முடியும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இது தொடர்பாக அமைச்சர் உட்பட நீங்கள் அனைவரும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி