மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை
அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.
மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாகும்.
இதேவேளை, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லிட்டர் ஒன்றின் விலையிலும் (325 ரூபா), லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 லிட்டர் ஒன்றின் விலையிலும் (341 ரூபா), எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலைத் திருத்தத்துடன் பஸ் கட்டணத் திருத்தம் எதிர்வரும் இரண்டு நாட்களில் தீர்மானிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் திருமதி நவோமி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் இன்று (01) அமுல்படுத்தப்பட மாட்டாது என திருமதி நவோமி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.